இறைமை ஒடுக்கப்படுகையில் தீர்வு எப்படிச் சாத்தியமாகும்? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 270

இறைமை ஒடுக்கப்படுகையில் தீர்வு எப்படிச் சாத்தியமாகும்? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 270

கொழும்பு பண்டாரநாயக்கா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125வது ஆண்டு விழாவை “ஓர் இலங்கையின் உரையாடல்’ (one Sri Lanka Dialogue ) என்ற தலைப்பிலான அரங்கமாக மாற்றி அதற்கு சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தானே தலைமையேற்று 08.01.2024 இல்  உரையாற்றுகையில் ‘யுத்தத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 2025ம் ஆண்டாகும் போது தீர்வு வழங்கப்படும். இடம்பெயர்ந்தோர் மற்றும் காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் ரீதியான தீர்வுகள் காணப்படும் என்று அறிவித்துள்ளார். இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் ஈழத்தமிழரின் பாதுகாப்பான அமைதியான வளர்ச்சிகளுடனான வாழ்வைப் பேணுவதற்கு அவர்கள் தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் இறைமையை மீள்கட்டமைவு செய்வதன் மூலம் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதே ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினை என்பது மறைக்கப்பட்டு யுத்தம் தொடர்பான பிரச்சினைகள் உள்ள வடக்கு சமுதாய கிழக்கு சமுதாயப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் தீர்வுகள் உதவ வேண்டும் என்பதே ரணிலின் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை குறித்த புதிய விளக்கம். இடம்பெயர்ந்தவர்கள் இனத்துடைப்பு நோக்கில் வெளியேற்றப்பட்டார்கள். வலிந்து காணாமலாக்கப்பட்டோர் இனஅழிப்பின் பின்னணியில் பிரச்சினைக்குள்ளாகியுள்ளனர் என்ற உண்மைகளை ரணில் அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு கோத்தபாய பாணியில் போரின் விளைவுகள் என்று அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் நடைமுறையில் இறங்கியுள்ளதை இவ்வுரை தெளிவாக்குகின்றது.
அதே வேளை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற இலங்கைத் தேசிய காங்கிரசை 1919 இல் தோற்றுவித்து பிரித்தானிய காலனித்துவத்திடம்  இருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கான முதல் அரசியல் இயக்கமாக அதனை நெறிப்படுத்திய சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா “சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் ‘இலங்கையர்’ என்ற எண்ணக்கருவை ‘ இலங்கையரின் தேவைகள்’ என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். அந்த வேலைத்திட்டத்தை பலப்படுத்தும் வகையில் யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் 2025 க்குள் தீர்வு காண எதிர்பார்க்கின்றோம். சேர். பொன்னம்பலம் அருணாசலம் தமிழ் சிங்கள முஸ்லீம் என்று அல்லாமல் இலங்கையர் என்ற எண்ணக்கரு தொடர்பில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அந்தக் கொள்கையைப் பின்பற்றிய டி. எஸ். சேனநாயக்கா அனைத்து இனத்தவரையும் மதத்தவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தார்’ என்று தன்னுடைய “ஓர் இலங்கையர் உரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா  சேர். பொன்னம்பலம் அருணாசலத்தைத் துணைக்கு அழைத்துள்ளார்.  ஆனால் அதே சேர் பொன்னம்பலம் அருணாசலம் தான் இரண்டு ஆண்டுகளில் 1921 இல் முதன் முதலில் சிங்களவர்களவர்களிலிருந்து விலகி ஈழத்தமிழர்களுக்கான இலங்கைத் தமிழர் லீக் என்ற முதல் அரசியல் கட்சியை நிறுவி ஈழத்தமிழர்களுக்கான தன்னாட்சி உரிமையையும் கேட்டார் ஆயினும் இரண்டு ஆண்டுகளில் அவர் காலமான துயர வரலாறு பதிவாகியதென்ற உண்மையை அப்படியே ரணில் முழுங்கி விட்டார்.  ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்க முன்னெடுக்கும் ஓர் இலங்கையர் என்ற ரணிலின் உரையாடலை நூற்றிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே சேர். பொன்னம்பலம் அருணாசலம் தீர்க்கதரிசனமாக எதிர்த்துள்ளார் என்பதை இலக்கு உலகுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறது.
தற்போது சிறிலங்கா ஜனாதிபதி இரண்டு வழிகள் மூலம் ஈழத்தமிழர்களின் இறைமையை மேலும் ஒடுக்க வேகமாக முயல்கின்றார். 01. பொருளாதார மீண்டெழலுக்கு என ஈழத்தமிழர்களின் தாயகத்தின் நிலவளம் கடல் வளம் இயற்கை வளம் மூன்றையும் சிறிலங்காப் படைகளுக்கான பொருளாதார வாழ்வாதாரங்களாக்கி ஈழத்தமிழர்களை மண்ணை விட்டு வெளியேற வைத்து அவர்களின் இறைமையை ஒடுக்குவதுடன் பாதுகாப்புச் செலவீனங்களை குறைத்துள்ளேன் என அனைத்துலக நாணயநிதியத்தையும் திருப்திப்படுத்தல். 02. இந்தியா சீனா  அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர் தாயகப் பகுதிகளை விவசாயம் கடல்வளம் மீளுற்பத்தி செய்யக் கூடிய எரிசக்திகள், பாகம் பொருத்துதலை குறைந்த கூலியில் செய்விக்கும் வேலைத்தளங்கள், சுற்றுலாத்துறை, தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றுக்கான முதலீடுகளுக்காகத் திறந்து விடுதலுடன் ஆள்நிலைப்பட்ட உலக நாட்டவர்களையும் அங்கு நிலைப்படுத்தி குறுகிய நீண்டகாலப் போக்கில் ஈழத்தமிழர்களின் தாயக வளங்களை அவர்கள் விரும்பியவாறு சுரண்ட அனுமதித்து, பிறநாடுகளினதும் அனைத்துலக தனியார் பெருமுதலாளிகளதும் காலனித்துவ பூமியாக மாற்றி அவற்றின் இலாபத்தை ஈழத்தவர்கள் அடையாதவாறு முதலிட்டவர்களே பெறவைத்து ஈழத்தமிழர்களை நிரந்தரமான உலகச் சந்தைக் கூலிகளாக மாற்றுவது. இதற்கான சட்டகமே ஓர் இலங்கையர் உரையாடல். இந்த தனது  திட்டத்திற்கு ஆதரவினை மேலும் கூட்டவே தைவான் மக்களின் தெளிவான தேர்தல் முடிவுக்குப் பின்னரும் ரணிலின் அமைச்சர்களும் சபாநாயகரும் சிறிலங்கா ஓர் சீனாக் கொள்கைக்கே இன்றும் ஆதரவு எனப் பகிரங்கமாக அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டைச் சீனத்தூதுவருக்குக் கூறி சீனாவை சிறிலங்காவுக்கு உதவ உற்சாகப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவைத் திருப்திப்படுத்தச் செங்கடலுக்கு சிறிலங்காக் கடற்படைக்கப்பல்கள் இரண்டை அனுப்பச் சிறிலங்கா ஜனாதிபதி தன்னிச்சையாகவே முடிவெடுத்து இஸ்ரேலிய அமெரிக்க மேற்குலக அணிகளின் செலவில் சிறிலங்கா கடற்படைக்கு நவீன ஆயுதங்களையும் கருவிகளையும் இணைத்து, முஸ்லீம் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் நிலை ஏற்பட்டால் தனது அரசைப் பாதுகாக்க ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்த முயல்கிறார். இந்தியாவுக்கு அதனுடனும் தான் ஒத்துழைப்பதாகக் காட்டவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மனித உரிமைகள் தொடர்பான தலையீட்டை நீக்குவதற்கான  முயற்சியாகவும் ரணில் ‘உண்மை ஒருமைப்பாடு நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழச் சட்டமூலத்தைக்’ கொண்டுவந்துள்ள போதிலும் எடுத்த எடுப்பிலேயே சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு இதில் நம்பகத்தன்மையில்லை என கருத்து வெளியிட்டுள்ளமை உலகை ரணிலால் இலகுவில் ஏமாற்ற முடியாது என்பதற்கான சான்றாக மாறியுள்ளது. அத்துடன்  ஆண்டின் தொடக்கத்திலேயே மக்களின் நாளாந்த உயிர்வாழ்தலுக்கான பொருட்களின் விலை அதிகரிப்பு பணவீக்கத்தை ரணிலின் அரசாங்கம் கட்டுப்படுத்துவதில் செயலிழக்கும் என்ற கருத்தையே உலக பொருளாதார ஆய்வுகள் வெளியிடுகின்றன.  இவ்வாறு இலங்கையில் சமுக பொருளாதார அரசியல் நெருக்கடிகள் வருகின்ற போதெல்லாம் தேர்தலை அறவித்துச் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வெறி கொண்டெழவைத்துத் தமிழர்களின் சேமிப்புக்களையும் சொத்துக்களையும் தேர்தலின் பின்னர் கொள்ளையடித்துச் சிங்கள காடையர்கள் வாழ அனுமதிப்பதும் சிங்கள அரசுக்களின் ஒருவகை அரசியல் தந்திரம். இந்த அபாயத்தைத் தடுப்பதற்கு தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களுக்கான உறவுப்பாலத்தை கூட்டொருங்குச் செயற்திட்டங்கள் மூலம் உருவாக்குவதே ஒரேவழி என்பதை வலியுறுத்திக் கூறும் இலக்கு “இறைமை ஒடுக்கப்படுகையில் தீர்வுகள் எவ்வாறு சாத்தியமாகும்” என்பதையும் அனைத்துலக சமுகத்திடம் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து கேட்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறவிரும்புகிறது.

Tamil News