தமிழரசு தலைமைக்கான தேர்தல் தவிர்க்க முடியாமல் போனது ஏன்? – செல்வின்

Selvin தமிழரசு தலைமைக்கான தேர்தல் தவிர்க்க முடியாமல் போனது ஏன்? - செல்வின்தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் சூடு பிடித்த நிலைமையில், இந்தப் பதவியின் முக்கியத்துவம் என்ன, இதற்கான தேர்தலை ஏன் தவிர்க்க முடியாமல் போனது, பதவிக்கு வரப்போபவர் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பன போன்ற கேள்விகளுடன் அரசியல் ஆய்வாளரும் பொருளாதார நிபுணரமான செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை லண்டன் உயிரோடு தமிழின் தாயாக களம் நிகழ்வுக்கு வழங்கிய நேர்காணலில் இருந்து முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகர்களுக்காக தருகின்றோம்.

கேள்வி: தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கு நடைபெறுகின்ற இந்த தேர்தல் தமிழ் அரசியல் பரப்பில் முக்கியத்துவம் பெற்றதாக பேசப்படுவதற்கு காரணம் என்ன?

பதில்: வெறுமனே ஒரு அரசியல் கட்சியாக தமிழரசு கட்சியை பார்ப்பதற்கும் தற்போதைய ஒரு தேக்க நிலையில் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக எங்களுக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவத்தை தேடுகின்ற நிலைமையிலும் தமிழரசு கட்சி என்ற பாரம்பரியம் எங்களுக்கு தேவையாக இருக்கின்றது.

ஏனென்றால் தமிழரசு கட்சி மட்டும் தான் இன்று நம்மிடம் தமிழர்களின் தேசிய அபிலசைகளுக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அர்ப்பணித்து செயல்பட்ட கட்சியாக இருக்கின்றது. இது முதலாவது காரணம்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசையும் இவ்வாறு குறிப்பிடலாம் என்றாலும் கூட அந்த கட்சி ஒரு குடும்ப கட்சியாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழரசு கட்சி தான் சரியான ஒரு ஒரு மக்கள் கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த பத்து வருட காலமாக மாற்றங்கள் இடம் பெறாவிட்டாலும் கூட ஒரு மக்கள் கட்சி என்ற பரிமாணம் தமிழரசு கட்சிக்கு தான் இருக்கின்றது. ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் தாம் ஒரு இயக்கமா கட்சியா என்ற நிலைமையில் வேறுபடுத்த முடியாமல் இருக்கின்றார்கள்

இந்த இடத்தில் தமிழரசு கட்சி ஒன்றுதான் எமக்கு ஒரு அரசியல் நிறுவனமாக இருக்கின்றபடியால் அந்த கட்சிக்கு தலைவராக வர வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும், எதிர்கால அரசியலில் எவ்வாறான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்களுக்கு கணிசமான கரிசனை உள்ளது. அதனை சாதாரணமாக தமிழரசு கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் புறந்தள்ளி விட முடியாது. அவர்கள் தாங்கள் தான் தமிழரசு கட்சி, தாங்கள் தான் தீர்மானிப்போம் என செயல்பட முடியாது. தமிழரசு கட்சி தலைமை பதவிக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறையாக இருப்பதற்கு இதுதான் பிரதான காரணம்.

இவ்வாறு தலைமை பதவிக்கு வரப்போபவர்தான் எதிர்காலத்தில் கட்சி எந்த திசையில் செல்ல போகின்றது என்பதற்கான தீர்மானத்தை எடுக்க கூடியவர். அந்த விஷயத்தில் நாம் கவனமாக அதனை அணுக வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கேள்வி: இந்த தலைமை பதவிக்கான போட்டி ஒன்று தவிர்க்க முடியாமல் உருவாகியிருப்பது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: இது தவிர்க்க முடியாத போட்டி என்று சொல்லிவிட முடியாது. உண்மையில் கட்சிக்குள் இருந்த பல்வேறு விதமான உள்ளக முரண்பாடுகள் மற்றும் தனி மனித முனைப்புக்கள் போன்றவற்றால் உருவாகிய விடயம் தான் இந்த போட்டி. கடந்த காலங்களில் தலைவர்களாக இருந்தவர்கள் தம்முடைய கடமைகளையும் பொறுப்புகளையும் சரியான முறையில் செய்திருந்தால் இவ்வாறான ஒரு நிலைமை உருவாகி இருக்காது.

அதே வேளையில் இவ்வாறு போட்டியிடம்பெறுகிறது என்பதும் ஒரு நல்ல விடயம் தான். ஏனென்றால் காலம் காலமாக தங்களுக்கு இடையே தலைவர் செயலாளர்களை தீர்மானிப்பதுதான் இவ்வளவு காலமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்போதுதான் முதல் முறையாக அங்கத்தவர்களுடைய உதவியுடன் தலைவர்களை தேடுகின்ற ஜனநாயக ரீதியான பண்பாடு ஒன்று உருவாகி இருக்கின்றது. இதனை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் வரவேற்கத்தக்கதாகவும் நாம் பார்க்கலாம்.

ஆனால் போட்டி தீவிரமடையும் போது அபத்தமாக சில விடயங்கள் வெளியில் வருவதும் குழு நிறைவாதங்கள் மேலங்குவதும் கட்சியை பலவீனப்படுத்துவதாகவும் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் அமைந்து விடலாம். இது எதிர்கால பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தலில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் இந்த விடயத்தையிட்டும் நாங்கள் நிதானமாக சிந்திக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம்.

கேள்வி: தமிழரசு கட்சியின் கடந்த கால தலைமையில் விட்ட தவறுகள் தான் புதிய தலைமை ஒன்றை தேட வேண்டிய அவசர தேவை ஒன்று உருவாகி இருக்கின்றதா?

பதில்: இதனை அவசரமான தேவையான கூற முடியாது இது 10 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டிய ஒரு விடயம். கடந்த பத்து வருட காலமாக தமிழரசுக் கட்சியின் தலைமை பதவி மாற்றப்படவில்லை. அது ஒரு சிலரினுடைய ஏக போக உரிமையாகத்தான் அது இருந்து வந்திருக்கின்றது. அவர்களுடைய பலவீனங்கள், தேக்க நிலைகள், அசமந்த போக்குகள் போன்ற அனைத்தும் சேர்ந்துதான் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுத்தியது.

இப்போது நாங்கள் ஒரு நிலை மாறு காலத்தில் இருக்கின்றோம். ஏனென்றால் இலங்கையில் மட்டுமல்ல சுமார் 70 நாடுகளில் இந்த வருடத்தில் தேர்தல் நடைபெறப் போகின்றது. அதாவது உலகத்தில் 50 வீதத்திற்கு அதிகமானவர்கள் வாக்களிக்க போகின்றார்கள். இதனால் உலக நிலைமைகள் மாறப் போகின்றது. அவர்களுடைய கொள்கைகள் மாறப்போகின்றது. இந்த இடத்தில் நாங்கள் தீர்க்கமாக பணியாற்ற வேண்டியிருக்கின்ளது. தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் எம் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற இன அழிப்பு யுத்தத்தையும் எவ்வாறு கையாள்வது என்பதில் நாங்கள் தீர்க்கமாக செயல்பட வேண்டி இருக்கின்றது.

இவ்வளவு காலமும் காத்திருந்து தவறவிட்ட வாய்ப்பை நாங்கள் இனிமேலும் தவறவிடக்கூடாது என்பதற்காக அவசரமாக இதனை செய்ய வேண்டி இருக்கின்றது.

கேள்வி: விடுதலை புலிகள் அமைப்பின் காலத்தில் தமிழ் கட்சிகளுடைய உருவாக்கப்பட்ட ஒற்றுமை கடந்த 15 வருட காலத்தில் காணாமல் போய்விட்டது. புதிதாக வரப் போகின்ற தமிழரசு கட்சியின் தலைவர் அந்த ஒற்றுமையை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பாரா?

பதில்: உண்மையில் இந்த ஒற்றுமை என்ற வார்த்தையை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாங்கள் தவறாகத்தான் பயன்படுத்துகின்றோம். நீ என்னோடு வந்து சேர வேண்டும் என்பதுதான் ஒற்றுமை என்று நாங்கள் நினைக்கின்றோம். ஒவ்வொரு கட்சிகளும் இயக்கங்களும் தனி நபர்களும் கூட அவ்வாறு தான் சிந்திக்கின்றார்கள். அதாவது என்னுடைய நிலைப்பாட்டுக்கு நீ வருவாயாக இருந்தால் அதுதான் ஒற்றுமை என்பது அவருடைய கருத்து.

ஒற்றுமை என்பது பரஸ்பர உடன்பாட்டின் மூலமாக இரு பக்கமும் இணைந்து அல்லது பல பக்கங்களுடன் இணைந்து செயற்படுவது. அவ்வாறு பார்க்கும் போது இந்த ஒற்றுமை என்பதில் முதலாவதாக இருக்க வேண்டிய விடயம் வெளிப்படை தன்மை. முழுமையான வெளிப்படை தன்மை இருக்கின்ற நிலைமையில் தான் இந்த ஒற்றுமை என்பது பரஸ்பரம் இருக்கும்.

தமிழரசு கட்சிகள் கடந்த காலத்தில் இதுதான் நடைபெற்றது. யாரோ ஒருவர் தீர்மானிப்பார். மற்றவர்கள் ஒற்றுமையின் பேரில் அதனை சலித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மறுத்து கேள்வி கேட்கவில்லை. அல்லது விமர்சனம் செய்வதில்லை. இவ்வாறு பல சம்பவங்கள் இடம் பெற்று இருக்கின்றது. ஒற்றுமை என்பது வெறுமனே தேர்தல் காலங்களில் அனைவரும் ஒன்றாக வந்து வாக்கு போடுங்கள் என அழைப்பது அல்ல. மக்களை ஒருங்கிணைப்பதற்கான அவர்களை கட்டமைப்பதற்கான ஒரு தொலை நோக்கு திட்டம் திட்டம் இருக்க வேண்டும். போராட்டங்களுக்கு ஒற்றுமையாக வருகிறோம் என கூறிக்கொண்டு எண்ணிக்கையை கூட்டி காட்டுவது மட்டும் ஒற்றுமை அல்ல.

ஒரு தேசத்தை நிர்மாணிப்பதற்காக அந்த மக்களின் விடுதலைக்காக அந்த மக்களை முன்னோக்கி நகர்த்துவதற்காக சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் என்பதுமிக முக்கியமானது.