இந்திய மாலைதீவு மோதல் -இந்துசமுத்திர பிராந்தியத்தின் பிடியை இழக்கின்றதா இந்தியா – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்திய படையினரை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் நாளுக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு மாலைதீவு கேட்டுள்ளது. மாலைதீவு அதிபர் மொகமட் மொய்சவின் பிரதான உதவியாளரான அப்துல்லா நசீம் இப்ராஹீம் இதனை ஞாயிற்றுக்கிழமை(14) தெரிவித்துள்ளார்.

எமது மண்ணில் இந்திய படையினர் இருக்க முடியாது, இது மாலைதீவு நிர்வாகத்தின் கொள்கை. என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

malay இந்திய மாலைதீவு மோதல் -இந்துசமுத்திர பிராந்தியத்தின் பிடியை இழக்கின்றதா இந்தியா - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இது தொடர்பில் இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாக பேச்சுக்களை மேற்கொண்டுவந்திருந்தன. மாலைதீவுக்கான இந்திய தூதுவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) காலை மாலைதீவு அதிகாரிகளை சந்தித்தும் இருந்தார். ஆனால் அன்று மாலை மாலைதீவின் வெளிவிவகார அமைச்சகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. அதாவது விரைவாக படையினரை வெளியேற்ற இந்தியா சம்மதித்துள்ளது.

அங்கு 77 இந்திய படையினர் தங்கியுள்ளனர் என மாலைதீவு அதிபர் தெரிவித்திருந்தார். ஆனால் 88 பேர் உள்ளதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மலைதீவின் அவசரகாலநிலையின் போது பயன்படுத்தவென இந்தியா வழங்கிய இரண்டு டொனியர் வகை விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகளை இயக்குவதற்கு மற்றும் பாராமரிப்பதற்காக அவர்கள் அங்கு தங்கியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனா சார்பு புதிய அரச தலைவர் கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றபோது இந்திய படையினரை வெளியேற்றப்போவதாக தெரிவித்திருந்தார். வெளிநாடுகளின் படைத்துறை தலையீடகளை தவிர்ப்பதுடன், வர்த்தகத்தில் சமநிலையை பேணுவது, இந்தியாவின் அழுத்தங்களை குறைப்பது போன்றவை தனது  நோக்கம் என அவர் தெரிவித்திருந்தார்.

முன்னைய அரச தலைவர் மொகமெட் சொகில் புதுடில்லியுடன் நெருங்கிய தொடர்புடையவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தை இந்தியா உறுதிப்படுத்திய போதும் அது தொடர்பான தகவல்களை தெரிவிக்க இந்தியா மறுத்துவிட்டது. மாலைதீவு அதிபர் சீனாவுக்கு முதலாவது பயணத்தை மேற்கொண்டபோது இலட்சம்தீவுக்கு பயணத்தை மேற்கொண்டு மாலைதீவின் சுற்றுலாத்துறைக்கு பொருளாதார பின்னடைவை மேற்கொள்ள இந்திய பிரதமது நரேந்திரமோடி எடுத்த நடவடிக்கை மாலைதீவுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்திருந்தது.

modi இந்திய மாலைதீவு மோதல் -இந்துசமுத்திர பிராந்தியத்தின் பிடியை இழக்கின்றதா இந்தியா - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இந்த விவகாரம் தொடர்பில் மாலைதீவின் அதிகாரிகள் மற்றும் அரசயில்வாதிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் இரு நாடுகளுக்குமிடையில் இரஜதந்திர விரிசல்களை தோற்றுவித்திருந்தது. அதனை தொடர்ந்து இந்தியர்கள் மாலைதீவுக்கான சுற்றுலாத்துறையை முடக்குவதற்கான பிராச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். விடுதிகளுக்கான 8,000 ஆரம்ப முன்பதிவுகள்  இரத்துச்செய்யப்பட்டன, 2,500 இற்கு மேற்பட்ட விமான பயணங்களுக்கான பயணச்சீட்டுக்களும் இரத்துச்செய்யப்பட்டன.

மலைதீவு அரச தலைவர் அலுவலகம், வெளிவிவகார செயலகம், சுற்றுலாத்துறை அலுவலகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்களும் மேற்கொண்ணப்பட்டடிருந்தன. அது இந்தியாவில் இருந்தே மேற்கொள்ளப்பட்டதாக மாலைதீவு குற்றம் சுமத்தியிருந்தது.

மாலைதீவின் சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 1.4 மில்லியன் பயணிகளை அது கவர்ந்திருந்தது. பயணிகளின் எண்ணிக்கையில் ரஸ்யா முதலாவது இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 3 ஆவது இடத்தில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்ட மாலைதீவின் 3 பிரதி அமைச்சர்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மலைதீவு அதிபர் சீனாவுக்கு சென்றிருந்தார்.

ஆனால் அங்கு அவருக்கு அமோக வரவேற்பளித்த சீனா 130 மில்லியன் டொலர்கள் உதவியையும் வழங்கியதுடன், உட்கட்டுமானம், விவசாயம் உட்பட பல அபிவிருத்தி திட்ட உடன்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது. சீனா மாலைதீவின் மிக நெருக்கிய நண்பன் எனவும், அரிசி, கோதுமை, சீனி போன்ற உணவுப்பொருட்களின் இறக்குமதியில் ஒரு நாட்டை சார்ந்திருக்க தான் விரும்பவில்லை எனவும் மொய்சு அங்கு பேசும்போது தெரிவித்திருந்தார். தற்போது இந்த உணவுப்பொருட்களை மாலைதீவு இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்கின்றது.

அதாவது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பொருட்களை அவர் தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Maldives china இந்திய மாலைதீவு மோதல் -இந்துசமுத்திர பிராந்தியத்தின் பிடியை இழக்கின்றதா இந்தியா - வேல்ஸ் இல் இருந்து அருஸ்மேலும் மாலைதீவின் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு முக்கியமானது எனவும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் எனவும் மாலைதீவு அதிபர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

மாலைதீவுக்கு சீனா 1.37 பில்லியன் டொலர்களையும், சவுதி அரேபியா 124 மில்லியன் டொலர்களையும் மற்றும் இந்தியா 123 மில்லியன் டொலர்களையும் கடனாக வழங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாம் சிறிய நாடாக இருக்கலாம் ஆனால் அதற்காக எம்மீது அழுத்தங்களை யாரும் திணிக்க முடியாது, நாம் ஒரு இறைமையுள்ள தேசம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார். இதனிடையே, இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர், அரசியல் என்பது அரசியல் தான் அதில் எல்லா நாடும் எப்போதும் இந்தியாவை ஆதரிக்கும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்திருந்தார்.

பங்களாதேசத்தில் இடம்பெற்ற தேர்தலில் சீனா சார்ப்பு ஹசீனா அரசு வெற்றிபெற்றதும், தாய்வானில் இடம்பெற்ற தேர்தலில் அமெரிக்க சார்பு அரசு ஆட்சி அமைத்ததும், மாலைதீவின் நிலைப்பாடும் இந்துசமுத்திர பிராந்தியத்தின் பூகோளஅரசியல் நெருக்கடிகளை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள பாக்கிஸ்தான் – ஈரான் முறுகல் நிலையும் ஆசிய அரபு பிராந்தியங்களில் ஒரு உறுதித்தன்மையை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் இந்த வருடம் இடம்பெறவுள்ள இலங்கையின் தேர்தல் இந்தியாவுக்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது. எனவே தான் இந்தியா தற்போது இலங்கையை நோக்கி அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு நோக்கி தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது.