பொங்கல் நாளில் ஈழமக்கள் தேசமாகப் பொங்கியெழுந்து இழந்த இறைமையை மீள்விக்க உறுதிபூண வாழ்த்துகள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 269

பொங்கல் நாளில் ஈழமக்கள் தேசமாகப் பொங்கியெழுந்து இழந்த இறைமையை மீள்விக்க உறுதிபூண வாழ்த்துகள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 269

‘இலக்கு’ ஆசிரிய பீடம் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு 2024 இல் அவர்கள் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொடர்ந்து வரும் தொன்மையும் தொடர்ச்சியுமுள்ள  இறைமையின் அடிப்படையில் அவர்களுக்குள்ள தன்னாட்சி உரிமையைப் (Self -determination)  பயன்படுத்தி அவர்களுக்கான தன்னாட்சியை (Autonomy) மீள் உறுதிப்படுத்தி பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் தரவல்ல சனநாயக ஆட்சியை மீள்விக்க உறுதிபூண பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது
ஈழத்தமிழ் மக்கள் பொங்கல் பெருவிழாவைக் கொண்டாடி புதிய வாழ்வுக்கான உள எழுச்சியைப் பெறுகின்ற  மகிழ்ச்சியான நேரத்தில்  இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் என்பன ஈழத்தமிழ் மக்களின் இறைமையை மேலும் ஆக்கிரமிப்பதற்கான சட்டத் தகுதியைச் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்களுக்கு வழங்கும் வகையில் இன்றைய சிறிலங்கா அரசாங்கத்தால் சட்டவாக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வழி இலங்கைக்குள் மட்டுமல்ல உலகில் எங்கு வேண்டுமானாலும் சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழ் மக்களை அவர்களிள் தாயக மக்களின் நல்வாழ்வுச் செயலுக்காகத் தொடர்பு கொண்டால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தக் கூடிய அதிகாரத்தைச் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தச் சட்டங்கள் அளிக்கின்றன. எனவே இச்சட்டங்கள் உலகின் பெரும்பாலான நாடுகளில் அந்நாடுகளின் குடிகளாக அரசியல் புகலிடத்தின் மூலம் பரிணாமம் பெற்றுள்ள ஈழத்தைப் பூர்வீகத் தாயகமாகக் கொண்ட ஈழத்தமிழர்களின்  தங்கள் தாயக மக்களுக்கான நீதிக்கான குரலைக் கட்டுப்படுத்தவும், தாயக மக்களுக்கான நாளாந்த வாழ்வியிலின் வளர்ச்சிக்கான நிதி உதவிகளை மட்டுப்படுத்தவும் இந்தச் சட்டங்கள் சிறிலங்காவுக்கு உதவும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. மேலும் அடிப்படையில் இச்சட்டங்கள் ஈழத்தமிழர்களை அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் அவர்களின் வரலாற்றுத் தாயகத்தில், அவர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமைக்குள் இலங்கை என்ற செயற்கை அரசாங்கத்துள் இணைக்கப்பட்டதால் தங்களின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ முடியாது தொடரும் 76 ஆண்டுகாலத் தீர்க்கப்படாத காலனித்துவப் பிரச்சினை நிலையிலிருந்து தங்களை விடுவித்து, தங்களின் யாராலும் பறிக்க இயலாத தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான, அனைத்துலக சட்டங்களின் நடைமுறைப்படுத்தல்களைப் பெறுவதற்கு உலகத் தமிழர்களாக உள்ள ஈழத்தமிழர்கள் தங்களின் அறிவையும் ஆற்றலையும் அளிப்பதைத் தடைசெய்வதே இன்றைய சிறிலங்கா அரசாங்கத்தின் இச்சட்டங்களின் தலையாய நோக்காக உள்ளது.
இந்நேரத்தில் பிரித்தானியாவின் இளவரசி மாண்பமை ஆன் அவர்களும் அவரின் கணவர் பிரித்தானியக் கடற்படையின் துணைத்தலைவர் சேர். ரிமோதி லோரன்ஸ் அவர்களும் பிரித்தானியாவுடன் சிறிலங்கா ராஜதந்திர உறவைத் தொடங்கியதன் 75 வது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் 10.01.2024 இல் கொழும்பு சென்று சிறிலங்கா அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் சிறிலங்காவின் பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திரசில்வா வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்த்தனா சுகாதார இராஜங்க அமைச்சர் சீதா அரம்பேபொல  ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கா ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே சிங்கள சமூகமாக மாண்பை பிரித்தானிய இளவரசியுடன் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இது சிங்களவர்களின் பொதுவெளியில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்காக இணையும் பலத்தின் வெளிப்பாடாகியுள்ளது. இந்நிகழ்வு  பிரித்தானிய அரச குடும்பத்தின் 2024ம் ஆண்டுக்கான  முதலாவது உத்தியோக பூர்வ வெளிநாட்டுப் பயணமாகவும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இது 1983 யூலை முதல் சிறிலங்காவில் இனங்காணக்கூடிய அச்சத்தால் வாழ இயலாது இன்று வரை ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் புகலிடம் பெற்றும் மற்றும் கல்வி தொழில் வர்த்தக தேவைகளுக்காகவும் வாழ்ந்து பிரித்தானியக் குடிகளாக ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வரும் 500000 ஈழத்தைத் தங்கள் பூர்வீகத் தாயகமாகக் கொண்ட ஈழத்தமிழ் தேசியத்தவர்கள் தங்களுடைய பிரித்தானிய அரசுக்கும் தங்களுடைய மாட்சிமைக்குரிய மன்னர் 3வது சார்ள்ஸ் அவர்களுக்கும் தங்களுடைய தாயகத்தின் உண்மை வரலாற்றினைத் தெளிவாக எடுத்து விளக்கி மாண்பமை மன்னரின் பிரித்தானிய  அரசின் முழுஅளவிலான ஆதரவை பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு பெற இயலாதிருக்கும் கையாலாகத்தன்மையை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது.
கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களால் கனடிய அரசின் மூலம் முன்னெடுத்த ஈழத்தமிழர்களின் வரலாற்று உண்மைகளுக்குச் சாதகமான பல விடயங்களில் ஒன்றினைக் கூட ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரமிது. சுருக்கமாகச் சொன்னால் ஐக்கிய இராச்சியத்தில் பலராக ஈழமக்களுக்குப் பணி செய்பவர்கள் ஒரணியில் ஒருங்கிணைப்புப் பெற தங்களின் ஆணவப்போக்கால் மறுத்துப் பொதுவெளியில் ஒரு குரலில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையையும் ஈழமக்கள் இனஅழிப்பாலும் இனத்துடைப்பாலும் பண்பாட்டு இனஅழிப்பாலும் பிரித்தானிய காலனித்துவ கால முடிக்குரிய அரசின் தவறான முடிவுகாளல் 76 ஆண்டுகளாக அனுபவிக்கும் மனித அவலங்களையும் தங்கள் மாண்பமை மன்னருக்கும் தங்களின் பிரித்தானிய அரசுக்கும் எடுத்துரைக்க இயலாத நிலைதான், இன்றுவரை ஈழத்தமிழர்களின் மேலான சிறிலங்காவின் இனஅழிப்பு அரசியல் தொடர்கதையாகத் தொடர்வதற்கு மூலகாரணம் என்பது இலக்கின் திடமான கருத்து. எனவே கூட்டத்தில் கூடி நின்று கூவிக் களிப்பாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்ற பாரதியின் நெஞ்சு பொறுக்காது சொன்ன அதே பாடல் வரிகளையே நெஞ்சு பொறுக்காது இலக்கும் மீளவும் பதிவு செய்கிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக 04.02. 2024 அன்று சிறிலங்காத் தூதுவராலய முன்றலிலிருந்து பாராளுமன்ற முன்றல் வரையான மாண்பமை பிரித்தானிய மன்னரை நோக்கிய ஈழத்தமிழர் பேரணியாவது பிரித்தானியத் தமிழரை ஒருங்கிணைக்க இலக்கு வாழ்த்துகிறது.

Tamil News