இறைமையைப் பாதுகாக்க புதிய தரங்கள் கொண்ட நடைமுறைக் கூட்டுத்தலைமைத்துவம் 2024இல் தேவை | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 266

இறைமையைப் பாதுகாக்க புதிய தரங்கள் கொண்ட
நடைமுறைக் கூட்டுத்தலைமைத்துவம் 2024இல் தேவை| ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 266

2023ம் ஆண்டு முடிவடையும் வாரம் தொடங்குகிறது. இந்த நேரத்தில் உலகம் என்றும் இல்லாத நெருக்கடிகளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரேன் ரஸ்யப் போரினாலும் இஸ்ரேலின் பலஸ்தீனிய ஆக்கிரமிப்பு போராலும் கூடவே வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளும் அணுவாயுதப் பலம் பெற்ற நிலையிலும் தாய்வான் கொங்கொங் மேலான சீனாவின் உரிமைப்பிரச்சினைகளாலும் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மேல் 1978 முதல் 45 ஆண்டுகால சிறிலங்கா நடத்தும் “மக்கள் மேலான யுத்தத்தினாலும்” இதற்கு இந்திய அமெரிக்க கூட்டு ஆதரவாலும் 2024இல் சந்திக்கும் என்பது உலக அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இந்தச் சிக்கலான உலக நிலைமைக்குக் காலநிலை நெருக்கடிகளும் பெருந்தொற்றுக்களின் பரவல்களும் இவற்றால் மனித குலமே தனது இயல்பான உழைப்புப் பலத்தையும் நிதிப்பலத்தையும் இழப்பது மேலும் மனிதப் பேரிழப்புக்களுக்கும் குடிவரவுகளும் குடியகல்வுகளும் அரசியல் புகலிட அலைவு உலைவுகளும் குறுகிய காலத்தில் ஈடுசெய்ய இயலாத மனித அவலங்களை 2024இல் தோற்றுவிக்கும் என்பதும் எதிர்வு கூறல்களாக உள்ளன.
இந்த உலகின் புதிய சுற்றுச் சூழலை எதிர் கொள்ளக் கூடிய புதிய தரங்கள் கொண்ட நடைமுறைத் தலைமைத்துவம் உடன் தேவை என்பது உலகின் முக்கிய மாதஇதழான “வெளிநாட்டு விடயங்கள் (Foreign Affiars) இன் 2024 சனவரி பெப்ருவரி இதழில் தலைசிறந்த ஆய்வாளரான ‘பிலிப் செலிக்கோ (Philip Zelikow)’ எழுதிய அமெரிக்க ஆட்சிக்கலையின் தேய்மானம் – நெருக்கடி யுகத்தில் எப்படி கொள்திறனை மீளமைத்தல் [‘The Atrophy of American statecraft’-How to Restore Capacity for an Age of Crisis)] என்னும் ஆய்வுக்கட்டுரையில் “இப்படிச் செய்யலாம் என்று சொல்வது இலகுவான வேலை ஆனால் அதனை எப்படி கட்டமைப்பது என்பதுதான் கடினமான வேலை. ‘இலட்சியங்கள்’ கொள்கைகள் அல்ல. அமெரிக்காவின் அரச செயலளார் டீன் ரஸ்க் (Dean Rusk) அவர்கள் ‘இலட்சியங்கள் மிகக் கூடியளவு குழந்தை இறப்பு வீதம் கொண்டவை குறுகிய காலத்தில் மறைந்து விடுவன’ எனக் கூறினார். அதிக அனுபவமுள்ள அரசியல்வாதியென உலகம் போற்றும் முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்சில் அவர்கள் ‘எண்ணங்கள் சிறகு விரித்து பறக்கும். ஆனால் அனைத்துலக மாநாடுகளின் பின் அழுக்குத் தெருக்களில் மிகவும் கஸ்டப்பட்டு நடக்கும்” என எண்ணங்களை அனைத்துலக நிலையில் நடைமுறைப்படுத்தவதில் உள்ள நடைமுறை எதார்த்தத்தை எடுத்துரைத்தார். எனவே எப்படிச் செய்வது என்பதே ஆட்சிக்கலை. நெருக்கடி நிலையில் மக்களுக்கு செயல் ஆற்றல் மிகுந்த ஆட்சிக்கலைச் செயற்பாடுகள் உடன் தேவை. இந்த மக்களுக்குச் சத்தியளிக்கும் ஆற்றல் திறன்களை எப்படி மக்களுக்கு வெற்றியளிக்கும் என ஒருங்கிணைப்பதிலேயே கூட்டுத் தலைமைத்துவம் உருவாகும்.
அமெரிக்காவின் இன்றைய ஆட்சிக்கலை தேய்மானம் குறித்து பிலிப் செலிக்கோ கூறும் இந்த ஆட்சிக்கலையை முன்னெடுத்தல் குறித்த சிந்தனைகள் ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டிலும் 2024 இல் ஈழத்தமிழர்களுக்குத் தங்கள் ஆட்சிக்கலையை உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய இறைமையைப் பாதுகாக்க வல்ல புதிய தரங்கள் கொண்ட நடைமுறைக் கூட்டுத்தலைமைத்துவம் உடன் தேவை என்பதையும் அதனைப் பேச்சளவில் பேசாது செயல்முறைப்படுத்த வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
மேலும் ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினராகவுள்ள சிறிலங்காவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனின் பின்வரும் கூற்று ஈழத்தமிழர்களின் மேலான மக்கள் மேலான சிறிலங்காவின் யுத்தம் 2024இலும் தொடரும் என்பதை எதிர்வு கூறுகிறது. “2024ம் ஆண்டுக்கான சிறிலங்காவின் வரவுசெலவுத் திட்ட பாதுகாப்புச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு 423 பில்லியன் ரூபாக்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 வீதமாக அமைந்த இந்தப் பெருநிதி நாட்டின் கல்வி மற்றும் மருத்துவ துறைகளுக்கான ஒதுக்கீடுகளை விடப் பன்மடங்கு அதிகம். அதே வேளை சிறிலங்கா இராணுவமானது சட்டத்திற்கு அமைவாகச் செயற்படாமல் பொதுநிதியைத் தமது விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுத்தும் கட்டமைப்பாக எழுச்சி பெற்றுள்ளது. சிறிலங்காவின் கடற்படை மற்றும் விமானப்படையின் 2022ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையும் சிறிலங்கா இராணுவத்தின் கணக்காய்வு அறிக்கை போன்றே நிதிமுகாமைத்துவ முறைகளுக்கு உட்படுத்தப்படாது நிதிமுகாமைத்துவம் செய்யப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. சட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் இராணுவத்தைப் பொறுப்புக் கூற வைக்க வேண்டும். ஆனால் பொதுநிதியினை இராணுவம் கையாளுகின்ற முறைமை குறித்துக் கூட பொறுப்புக்கூறாத கட்டமைப்பாக இராணுவம் செயற்படுகையில் இந்த இராணுவம் மனித உரிமைகள் தொடர்பில் எவ்வாறு பொறுப்புக் கூறும்” இந்தக் கேள்வி சிறிலங்கா தன்னை சனநாயக குடியரசு என்று பெயரளவில் சொல்லிக் கொண்டு சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்ற கொடுங்கோன்மை மூலமான இராணுவச் சர்வாதிகார ஆட்சியை 2024லும் ஈழத்தமிழர்களுக்கு அளிக்கும் என்பதையும் உலகம் அதனைக் கண்டுக்காமல் பயணிக்கும் என்பதையும் இதனை மாற்ற 2024 இல் ஈழத்தமிழர்களுக்குத் தங்கள் ஆட்சிக்கலையை உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய இறைமையைப் பாதுகாக்க வல்ல புதிய தரங்கள் கொண்ட நடைமுறைக் கூட்டுத்தலைமைத்துவம் உடன் தேவை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
மேலும் போதைப் பொருள் கடத்தல்காரர்களையும் பாதாளக் குழுக்களையும் ஒழிப்பது தொடர்பாகச் சிறிலங்காவின் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ் தீவிர சட்டநடவடிக்கைகள் எடுக்கப் போவதாகச் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் கடந்த வாரத்தில் உரையாற்றுகையில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் படைகள் செயற்பட்டு கண்ட இடத்தில் சுடுதலைப் பயன்படுத்தி அவர்களை அழிப்பர் என சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் சிறிலங்காப் படைகள் செயற்படுதல் என்பது சிறிலங்காவின் அரச கொள்கையாக உள்ளது என்பதை உலகுக்குப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தன் குடிகள் என்று சொல்லிக் கொண்டு ‘ ஈழத்தமிழ் மக்கள் மேலான யுத்தத்தை’ அனைத்துலக சட்டங் களுக்கு எதிராக 1978 இல் பிரகடனப்படுத்திக் கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில் விசாரணையின்றி எரிக்கவும் 1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் அனுமதித்து இன்று வரை கடந்த 45 ஆண்டுகாலமாகச் சிறிலங்காவின் அரசபயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தம் அரசகொள்கை 2024இலும் ஈழத்தமிழ் மக்களுக்குச் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் ஈழத்தமிழர்களின் உயிர் உடமைகள் மற்றும் நாளாந்த வாழ்வுக்கு இனங்காணக் கூடிய அச்சத்தை சிறிலங்கா கொடுக்கும். இதனை பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலசின் பேச்சு உறுதிப்படுத்திய நிலையில் அனைத்துலக தரத்துக்கு ஏற்ப பதிய பயங்கரவாததத் தடைச்சட்டம் என்பது வெறும் ஏமாற்று வேலை என்பதை உலக நாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் எடுத்து விளக்கி இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்று முழுதாகச் சிறிலங்கா 2024இல் நீக்குவதற்கான அனைத்து அழுத்தங்களையும் உலக நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் உலகத் தமிழர்கள் ஏற்படுத்த வேண்டுமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது. இதற்கும் 2024 இல் ஈழத்தமிழர்களுக்குத் தங்கள் ஆட்சிக்கலையை உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய இறைமையைப் பாதுகாக்க வல்ல புதிய தரங்கள் கொண்ட நடைமுறைக் கூட்டுத்தலைமைத்துவம் ஈழத்தமிழர்களின் உலகளாவிய அறிவுப்பலம் நிதிப்பலம் ஊடகப்பலத்துடனான இணைப்புடன் உடன் தேவை என்பதை இலக்கு மீளவும் வலியுறுத்த விரும்புகிறது.

Tamil News