ஈழத்தமிழரின் இறைமைக்கு எதிரான
அனைத்துலகத் தீர்வுத் திணிப்பு முயற்சி| ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 265

2023ம் ஆண்டு உலகில் பல மாற்றங்களை நிகழ்த்திய ஆண்டாகத் தன்னை நிறைவு செய்து கொண்டிருக்கிறது. நியாயமான பன்முனைவுத் தன்மைக்குள் எவ்வாறு அனைவருக்குமான பாதுகாப்பை மேம்பாட்டையும் உறுதி செய்வது என்பது இவ்வாண்டில் அனைத்துலக மட்டத்தில் பெரிதும் சிந்திக்கப்பட்ட விடயமாகவுள்ளது. இதுவரை இருந்து வந்த அதிஉயர் நாடாக ஒருநாடு மற்றைய நாடுகளை அதிகாரப்படுத்துகின்ற படிநிலை (Hierarchy) உலக அரசியல் அதிகாரமுறைமை மாற்றப்பட்டு எந்த ஒருநாடும் தேவைக்கேற்ப மற்றைய நாட்டினை அந்நாட்டின் விருப்பின் பேரில் அதிகாரப்படுத்துகின்ற அதிகாரமற்ற பரவல்நிலை  (Heterarchy) என்ற புதிய அரசியல் அதிகார முறைமை பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையில் தோற்றம் பெற்று வருகிறது.
இதுவே சிறிலங்காவுக்குள் இந்திய சீன அமெரிக்க நாடுகளை மட்டுமல்ல உலகின் பலநாடுகளையும் கொண்ட கூட்டு பொருளாதார அதிகாரப்படுத்தலை சிறிலங்கா அனுமதித்து தன்னை தனது வங்குரோத்து நிலையில் நின்று செயற்கையான முறையில் விடுவித்து அனைத்துலக நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக்கான கடனுதவியை உறுதிப்படுத்த உதவியுள்ளது. இது செயற்கையான முறையில் சிறிலங்காவினை பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து வெளிவர உதவினாலும் ஏற்றுமதி விரிவாக்கங்களோ அல்லது தனியார் படுகடன்கள் கட்டப்பெறும் நிலைகளோ இல்லாமல் சிறிலங்கா மீளவும் பொருளாதார வங்குரோத்துக்குள் செல்லும் என்பது நடைமுறை உண்மையாகவுள்ளது. இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் சிறிலங்காவுக்கான சுற்றுலாக்கள் அதன் பொருளாதார மீளுருவாக்கத்திற்கான நியாயமான பலமாக உள்ளது என்பதால் இதே புலம்பெயர் ஈழத்தமிழர்களை சிறிலங்காவுக்குள் மூலதனமிடச் செய்வதன் மூலம் சிறிலங்கா தனது மூலதனத்தை விரைவாகப் பெருக்கலாம் என்கின்ற அடிப்படையில் இன்றைய சிறிலங்கா ஜனாதிபதி புலம்பெயர் ஈழத்தமிழர்களுடனான தொடர்புகளை மீட்டுருவாக்கம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
ஆயினும் ஈழத்தமிழர்கள் சிங்களவர்கள் ஒருங்கிணைப்பு என்பது இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அவர்களின் இலங்கைத் தீவு மேலான இறைமையின் அடிப்படையில் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் சுதந்திரமாகவும் சிங்களவர்கள் ஏற்பது என்பதன் மூலமே நடைமுறைச் சாத்தியமாகும். இதற்கு முன்நிபந்தனையாக சிறிலங்கா தான் ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்தது-செய்கிறது என்பதை ஒப்புக்கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டோர்க்கான பரிகாரநீதியையும் இனஅழிப்பைச் செய்தவர்களுக்கான தண்டனை நீதியையும் நடைமுறைப்படுத்தல் அமைகிறது. கூடவே ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமையின் அடிப்படையில் தங்களின் வரலாற்றுக்கு முற்பட்ட தாயகத்தில் தங்களுக்குள்ள தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையின் அடிப்படையில் தங்களின் தேசத்தை மீள்நிர்மாணம் செய்வது பிரிவினையல்ல என்பதையும் இதனை எதிர்த்து ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனப்படுகொலை செய்யும் இனஅழிப்புக்கு எதிராக ஈழத்தமிழர்கள் மேற்கொள்ளும் எதிர்வினைகள் பயங்கரவாதமல்ல தேசிய விடுதலைச் செயற்பாடுகள் என்பதையும் சிறிலங்காவும் இந்தியாவும் உலக நாடுகளும் ஏற்கின்ற நிலையிலேயே இலங்கைத் தீவின் இருதேச இனங்களான தமிழ் சிங்கள தேச இனங்களும் வர்த்தகத்தின் வழி குடிகளான முஸ்லீம் மக்களும் தொழில் முயற்சி வழி குடிகளான மலையக மக்களும் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தையும் பிறநாடுகளில் இருந்து பாதுகாப்பதையும் எவ்வாறு எந்த ஆட்சி முறைமைக்குள் கூட்டொருங்கு செயற்பாட்டால் தீர்க்கலாம் என்று ஆராய முடியும். இதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுக்கள் கூட ஈழத்தமிழ் மக்களின் 1977 ம் ஆண்டு குடியொப்பத்தால் நிறைவேற்றப்பட்ட மக்களாணையாகிய தனிநாட்டிலேயே தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான ஆட்சி கிடைக்கும் என்ற அடிப்படைக் கொள்கைக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாது சிறிலங்காவாலும் அதன் ஆதரவு வல்லாண்மை பிராந்திய வல்லாண்மைகளாலும் 2009 இல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பால் பின்னடைவுக்குள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழரின் நடைமுறையரசை மீளவும் அமைதியான முறையில் மீள்விப்பதை முன்னெடுத்து சிறிலங்காவுடன் பேச்சுக்களாலேயே எவ்வாறு இலங்கைத் தீவில் உள்ள மற்றைய தேச இனத்துடனும் குடிமக்கள் உடனும் அமைதி வழியில் இலங்கைத் தீவின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் இணைந்து எதிர்வினைகளை அமைக்கலாம் என்பதே இன்று சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.
இதனை விடுத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களால் தாயகத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அவர்கள் வென்றெடுக்கவென உருவாக்கப்பட்டு அந்த விடயத்தில் சோரம்போய் தன்னலத்தில் இலங்கைக்குள் மேலாதிக்கம் செலுத்த விரும்பும் நாடுகளில் தங்கிச் செயற்படும் தன்மையினால் புலம்பெயர் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரனையும் அதன் மற்றைய சில உறுப்பினர்களையும் அவர்கள் சார்ந்துள்ள நாடுகள் துணையுடனும் இந்திய மற்றும் சிறிலங்காப் பாராளுமன்றக் கட்சியான தமிழரசுக்கட்சியின் நெறிப்படுத்தலிலும் சிறிலங்கா நேப்பாளத்தின் தலைநகரமான கத்மாண்டில் தனது பௌத்த தேரர்களில் சிலரை சந்திக்க வைத்து எவ்வாறு ஒரே நாடு சிங்கள நாடு ஒரே சட்டம் பௌத்த ஆகமச் சட்டம் என்ற மகிந்த கோத்தபாய ரணில் திட்டத்தை இந்த உலகத் தமிழர் பேரவை ஏற்கிறது என்பதை உலகுக்கு வெளிப்படுத்த இமாலாயப் பிரகடனம் என்கின்ற ஈழத்தமிழர்களின் இறைமையை இல்லாதொழித்து சிறிலங்காவின் இறைமைக்குள் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வைத் திணிக்கின்ற வேலையைச் சில அனைத்துலகநாடுகள் இணைந்து செய்துள்ளன. இந்த மாதத்தில் அந்த இமாலயப் பிரகடனத்தை இலங்கைக்குப் போய் பௌத்த மகாசங்கத்தவர்களின் காலிலும் சிறிலங்கா ஜனாதிபதியின் காலிலும் விழுந்து முன்னாள் ஜனாதிபதியான மகிந்தாவின் காலிலும் விழுந்து அவர்களுக்குப் பாதபூசை செய்து அவர்களுக்குச் சமர்ப்பித்துள்ளனர். இலங்கையிலுள்ள அமெரிக்க பிரித்தானிய சுவிஸ் யப்பான் மற்றும் நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்துள்ளனர். இது ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்கி சிறிலங்கா அரசும் அதன் ஆதரவு வல்லாண்மை மேலாண்மை நாடுகளும் இணைந்து ஈழத்தமிழர்களை வெறும் மக்கள் சமூகமாக மாற்றி ஈழத்தமிழர்களின் மேல் அவர்கள் விருப்பப்படாத தீர்வைத் திணிக்கின்ற கூட்டுச் சதிமுயற்சியாகும். இதனை இலக்கு வன்மையாகக் கண்டிப்பதுடன் இதனைத் தடுப்பதற்கான கூட்டொருங்குச் செயற்பாட்டுக்கு உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து உடனடியாகச் செயற்பட வேண்டுமென்பது இலக்கின் இவ்வார அழைப்பாகவும் உள்ளது

Tamil News