தூதரகங்களுக்கு இறைமை தெளிவாக்கப்படாமையே
அனைத்துலக ஆதரவின்மையின் காரணி
14 ஆண்டுகளாக ஈழத்தமிழர் மீது 2009 இல் சிறிலங்கா நடத்திய முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கான நீதியை அனைத்துலக சட்டங்களின் கீழ் வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் இயலவில்லை.
6 ஆண்டுகளாக சிறிலங்காவால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரினதும் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டோரினதும் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் தெருவெளியில் நீதி கோரும் சனநாயகப் போராட்டத்திற்கு எந்தப் பயனும் கிட்டாத நிலையில் பலரின் உயிரிழப்புக்களுடன் இவ்வாரத்துடன் ஏழாவது ஆண்டு ஆரம்பமாகிறது.
இந்த இரண்டு நிலைகளிலும் அனைத்துலக நாடுகளின் ஆதரவு ஈழத்தமிழர்களின் நீதி யானதும் உண்மையானதுமான கோரிக்கைகளுக்குக் கிடைக்காததினாலேயே ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலகச் சட்டப் பாதுகாப்பையும் அவர்களால் பெறவியலவில்லை என்பதே உண்மை.
ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகநாடுகளின் முக்கிய நகரங்களிலும் உலக அமைப்புக்களுக்கு முன்பாகவும் நிறையவே சனநாயக வழிகளில் தங்களுக்கு நீதி கோரிப் பலவகையான மக்கள் போராட்டங்களை நடத்தி வந்துள்ள போதிலும் சிறிலங்கா தன்னை இலங்கைத் தீவின் இறைமையுள்ள அரசாங்கம் என்பதால் ஒரு நாட்டின் எல்லைக்குள் அனைத்துலக தலையீடுகள் அந்நாட்டின் அரசாங்கத்தின் இறைமையை மீறித் தலையிட முடியாது என்னும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிக்குக் கட்டுப்பட்டே அனைத்துலக நாடுகளும் அமைப்புகளும் தங்களால் தலையிட இயலாத நிலையில் உள்ளனர்.
அப்படியானால் ஈழத்தமிழர்கள் என்ன செய்து இந்த அனைத்துலக நாடுகளின் அமைப்புகளின் தலையிட இயலாத நிலையை மாற்ற வேண்டும்?
இலங்கைத் தீவிலும் அனைத்துலக ரீதியிலும் உள்ள இலங்கைத் தீவுடன் தொடர்புடைய ஒவ்வொரு தூதரகத்துக்கும் ஈழத்தமிழர்கள் தாங்கள் இறைமையுள்ள தனியான தேசத்தை இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள உலகின் மக்கள் என்ற உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஈழத்தமிழர்கள் தங்களுக்கான தனியான தாயகத்தையும் தேசியத்தையும் தன்னாட்சியையும் கொண்ட இறைமையுள்ள மக்களாகவே பிரித்தானிய காலனித்துவ அரசால் 1796 இல் கைப் பற்றப்பட்டனர். 152 ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் பின்னர் 02.04. 1948 இல் இலங்கை அரசாங்கத்துக்குச் சுதந்திரம் கொடுக்க பிரித்தானியா உருவாக்கிய சோல்பரி அரசியலமைப்பின் கீழ் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் சோல்பரி அரசியலமைப்பு 29 (2) விதியால் அளிக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தால் சிறுபான்மை மதங்களுக்கோ இனங்களுக்கோ எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் முறையிடலாம் என்னும் அரசியலமைப்பு காபந்து நிபந்தனையால் பிரித்தானியாவையே இலங்கை அரசாங்கத்தின் மீயுயர் இறைமையாளராகத் தொடரவைத்துத் ஈழத்தமிழரின் இறைமையைச் சிங்களவர்களின் இறைமையுடன் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் பகிர்ந்து சுதந்திரம் வழங்கினர்.
22.05.1972 இல் சிங்கள பௌத்த சிறிலங்காக் குடியரசு என்னும் சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்திய அரசு ஒன்றை சிங்களப் பெரும்பான்மை அரசியல்வாதிகள் தன்னிச்சையாக ஈழத்தமிழரின் விருப்பு பெறப்படாது பிரகடனப்படுத்தியதால் அரசற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் 1975இல் தந்தை செல்வநாயகத்தால் தங்களுக்கான தன்னாட்சிப் பிரகடனத்தை சிறிலங்காப் பாராளுமன்றத்தில் உலகுக்குப் பிரகடனப்படுத்த வைத்து 1977 இல் தங்களின் குடியொப்பத்தால் அதனை சிறிலங்கா சனநாயக வழிகளில் ஏற்க மறுத்தால் வேறு எந்த வழியாலும் அடைவோம் என உலகுக்கு அறிவித்து 1978 முதல் 2009 வரை தங்களுடைய நடைமுறை அரசில் தங்களுடைய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் தொடக்கி 17.05.2009 வரை 31 ஆண்டுகள் பாதுகாப்பான அமைதியில் வாழ்ந்தனர். இந்த நடைமுறையரசை சிறிலங்கா தனக்காதரவான பிராந்திய உலக நாடுகளின் ஆதரவுடனான இனஅழிப்பால் ஆக்கிரமித்து இன்று வரை அந்த ஆக்கிரமிப்பை படைபல அரசபயங்கரவாதத்தின் மூலம் தொடர்கின்றனர். இதனால் ஈழத்தமிழ் மக்களிடமே மீண்டுவிட்ட தங்களின் இறைமையைத் தங்களின் உள்ளக தன்னாட்சி உரிமையை மறுக்கும் சிறிலங்காவிடம் இருந்து பெற்றுத் தருமாறு தங்களின் வெளியகத்தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலக நாடுகளையும் உலக அமைப்புக்களையும் கோரி வருகின்றனர். எனவே இந்த இறைமையுள்ள மக்களாகிய ஈழத்தமிழர்களாகிய தங்களின் மக்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுடைய பாதுகாப்பான அமைதியான வாழ்வை உறுதிசெய்யுமாறு ஈழத்தமிழர்கள் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை மையப்படுத்திய ஈழத்தமிழர்களின் தலைமை என்றும் உருமாற்ற இயலாத தலைமையாக ஈழத்தமிழரிடை கூட்டுத் தலைமையாகத் தொடர்கிறது. இந்த ஈழத்தமிழர் இறைமை குறித்த உண்மை ஒவ்வொரு தூதரகத்தில் உள்ள தூதுவர்களுக்கும் தெளிவாக்கப்பட்டாலே உலக நாடுகள் உலக அமைப்புக்கள் ஈழத்தமிழர்களுக்கான தலையீட்டை இதன் அடிப்படையில் மேற்கொள்ளலாம். இதனை முன்னிலைப்படுத்தித் தூதரகங்ளைச் சந்திப்பதற்கான ஈழத்தமிழர்களின் ஈழமக்களின் சபைகள் உடன் உருவாக்கப்பட்டாலே ஈழத்தமிழர்களுக்கு அனைத்துலக ஆதரவு என்பது நடைமுறைச்சாத்தியமாகும் என்பது இலக்கின் எண்ணம். இன்று சிறிலங்கா தூதரகங்களால் நிர்வகிக்கப்படும் தூதரகக்காலனி ஆட்சியிலேயே உள்ளது. எந்த ஒரு நாடும் சிறிலங்காவின் 51 பில்லியன் படுகடனை கட்டிவிட முடியாது. அதுவும் பாரிஸ் கிளப்பில் உள்ள தனியார் நிதியாளர்களிடம் அதிக வட்டிக்குப் பெற்ற கடன்களை உடைய சிறிலங்காவுக்கு கடன் மறுசீரமைப்பு முறையொன்றை ஏற்படுத்துவது என்பது நடைமுறையில் இலகுவான ஒன்றல்ல. அப்படித்தான் அனைத்துலக நாணய நிதியம் இந்திய அமெரிக்க அமுக்கத்தின் கீழ் 2.9 பில்லியனை வழங்கினாலும் அதற்கான நிபந்தனைகள் சிறிலங்காவை மேலும் கடன் பொறிக்குள்தான் கொண்டு செல்லும். கூடவே இந்த 2.9 பில்லியனும் படுகடன் வட்டிகளுக்கே ஒதுங்க நாட்டின் மக்களின் நலன் என்பது பகற்கனவாகவே மாறும். இந்நிலையில் தூதரங்களுடன் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலக நாடுகளிலும் மேற்கொள்ளும் நேரடித் தொடர்பாடல்கள் ஈழத்தமிழரின் இறைமையின் அடிப்படையில் அவர்களின் இந்துமாக்கடல் பகுதியில் அவர்களை முன்னிலைப்படுத்தி புதிய சிந்தனைகளை உலக நாடுகள் வளர்க்க உதவும் என்பதே இலக்கின் உறுதியான நம்பிக்கை.