மண்ணின் இறைமையையும் மக்களின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உயிர் தந்த மாவீரர்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 210

மண்ணின் இறைமையையும் மக்களின் ஒருமைப்பாட்டையும்
பாதுகாக்க உயிர் தந்த மாவீரர்கள்

ஈழத்தமிழர் வரலாற்றில் 33ஆவது ஆண்டு மாவீரர் நாள் 27.11.2022 இல் தாயகத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர்களால் தாயகத்தின் தேசியநாளாக முன் னெடுக்கப்படுகிறது. இந்நேரத்தில் மாவீரர்கள் மண்ணின் இறைமையையும் மக்களின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உயிர் தந்து மரணமற்ற மனித குலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை இவ்வாண்டில் பலமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.
இதற்குக் காரணம் ரணில் விக்கிரமசிங்கா தனது அரசியல் குருவும் உறவினருமான முன்னாள் சிறிலங்கா சனாதிபதி ஜே. ஆர் ஜயவர்த்தனா 1983இல் சிங்கள அரசபயங்கரவாதத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஆடித் தமிழின அழிப்பால் துன்புற்ற தமிழ் மக்கள் மேல் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என மக்கள் மேலான போர்ப்பிரகடனம் செய்தது போல இன்று ஆட்சியை மாற்ற முயல்பவர்கள் மேல் முப்படைகளும் பாயும் என 39 ஆண்டுகளின் பின்னர் மக்கள் மேலான போர்ப்பிரகடனத்தைச் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் செய்துள்ளார். இந்நேரத்தில் பெயரளவில் தான் இது சிங்கள மக்களின் அரசியல் போராட்டங்களில் பயன்படுத்தப்படுமே தவிர நடைமுறையில் ஈழத்தமிழர் தாயகத்தையும் தேசியத்தையும் தன்னாட்சி உரிமைகளையும் இல்லாதொழிப்பதற்கான சிறிலங்காவின் இனஅழிப்பு நோக்குக்கு பாதுகாப்பு அளிக்கும் போக்காகவே அமையும்.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே வங்குரோத்து நிலையிலும் சிறிலங்காவின் வரவுசெலவுத்திட்டத்தில் 41000 கோடி ரூபாக்களை மொத்தச் செலவில் 20 வீதத்தை படையினருக்கு ரணில் ஒதுக்கியுள்ளார். அதற்கு நியாயப்படுத்தலாக இந்து மாக்கடலின் பாதுகாப்புக்கு என கூறிய ரணில் கடற்படைக்கு ஒரு மடங்கும் இராணுவத்துக்கு மூன்று மடங்கும் என நிதிப்பகிர்வு செய்துள்ளது இந்தியா அமெரிக்காவுக்குத் தான் கடலைப் பாதுகாக்கிறார் எனக்கூறி நிதியுதவி பெற்று மக்கள் மேலான போரை உறுதிப்படுத்தல் முயற்சி என்பது தெளிவாகியுள்ளது.
1979இல் ஜே. ஆர். ஈழத்தமிழின அழிப்புக்குச் சட்டப்பாதுகாப்பு கொடுப்பதற்குக் கொண்டு வந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் தான் இன்று ரணிலின் அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என பயங்கரவாதம் இல்லாத சூழலில் எதிர்காலத்தில் பயங்கரவாதம் வராது தடுப்பதற்கான சட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீள்நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அமெரிக்கா என்பவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயகத்தின் வழி நீக்கும்படி அறிவுறுத்தல்கள் வழங்கியதோ அதனையே பெயரை மட்டும் மாற்றிச் சிறு சிறு கண்துடைப்புத் திருத்தங்களுடன் ரணில் நடைமுறைப்படுத்தவுள்ளார். சிறிலங்கா அரசில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற சட்ட ஆட்சி இல்லவேயில்லை. சட்ட அமுலாக்கத்தில் படைகளுக்கு கட்டற்ற அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு சுதந்திரமாகச் செயற்படும் உரிமை மறுப்பும் உள்ளது. உலக அமைப்புக்களின் நெறிப்படுத்தல்கள் எதனையும் அனுமதிக்காத அரசாகவே சிறிலங்கா தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது. ஆயினும் மேற்குலக நாடுகள் வாயளவில்தான் மனித உரிமைகள் நல்லாட்சி வளர்ச்சி எனப் பேசுகின்றனவே தவிர அவற்றை நடைமுறைப்படுத்த சிறிலங்காவுக்கு அனைத்துலகச் சட்ட அழுத்தங்களைப் போதியளவு ஏற்படுத்தவில்லை என்பதும் நடைமுறை உண்மை. இதற்குக் காரணம் சிறிலங்காவின் இவ்வாண்டுக்கான வரவுசெலவத்திட்ட மொத்த ஏற்றுமதி வருமானமான 12 பில்லியனில் 3பில்லியன் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியாகவும் 3 பில்லியன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியாகவும் 01 பில்லியன் பிரித்தானியாவுக்கான ஏற்றுமதியாகவும் உள்ளது. எனவே மேற்குலக நாடுகள் தங்களின் சந்தை மற்றும் இராணுவ நலன்கள் சார்பாகச் சிறிலங்காவை தமதுநட்பு நாடாக வைத்திருக்க விரும்புவதால் சிறிலங்கா தன்னை ஒரு சர்வாதிகாரப் போக்குள்ள நாடாக அதனுடைய வங்குரோத்து நிலையிலும் நிலைநிறுத்தி வருகிறது.
இந்த சர்வாதிகாரத்தை ஈழத்தமிழ் மக்கள் மேல் நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுக்களை முன்னெடுக்க ரணில் அழைப்புக்கள் விடுகின்றார். ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் நாட்டில் செயற்படும் சில அமைப்புக்களும் வரிந்து கட்டிக்கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு பெற முயற்சிக்கின்றோம் என ஈழத்தமிழ் மக்களின் விருப்பை வெளிப்படுத்தாமல் தங்கள் அரசியல் நலன்களை பலப்படுத்த முயற்சிக்கின்றனர் இதனை தப்பி வாழ்வதற்கான உத்தி எனவும் நியாயப்படுத்தவும் செய்கின்றனர். இந்நிலையில் ஐக்கிய இலங்கை என்பது பிரித்தானிய காலனித்துவம் தனது சந்தை ஒருமைப்பாட்டுக்காக முன்னெடுத்த அரசியல் தத்துவம். இதில் ஐக்கிய இலங்கை என்பது இலங்கைத் தீவில் வாழும் அனைத்து மக்களையும் குறிக்கும் சொல்லாகவே இச்சொல் அமைந்தது. ஆனால் பிரித்தானிய காலனித்து சட்டசபை ஆட்சிக்காலமான 1833 முதல் 1948 வரை இலங்கைத் தேசியம் என்பதை உருவாக்க முடியாது போனதால் சிங்கள பௌத்த தேசியத்தையே இலங்கைத் தேசியம் என பிரித்தானியா தனது சந்தை இராணுவ நலன் கருதி நிலைப்படுத்தியது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் தனியான இறைமையும் ஒருமைப்பாடும் உள்ள மக்களாகத் தங்களுக்கான அரசில் வாழ்ந்து வந்த வரலாற்றுத்தன்மை கொண்டவர்கள். இலங்கையின் முதல் காலனித்துவ அரசான போர்த்துக்கேய அரசு கோட்டை சிங்கள அரசைக் கைப்பற்றிய பின்னர் 116 ஆண்டுகள் போராடியே யாழ்ப்பாணத் தமிழ் அரசைக் கைப்பற்றினர். வடக்கு கிழக்கு ஈழத்தமிழரின் வரலாற்றுத் தாயகம் என்பதை முகவுரையில் கொண்டிராத எந்த அரசியல் அமைப்புச் சட்டமும் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாகாது. சம்பந்தரின் சமஸ்டி சிங்கள அரசியல் அதிகாரத்துள் நிர்வாகப் பகிர்வு என்பதால் ஈழத்தமிழர்களின் இறைமையை மறுக்கும் செயலாகி ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையை செயலிழக்க வைக்கும் செயலாக அமையும். இந்த உண்மைகளின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்பது எந்த வகையிலும் ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் தராது என்பது இலக்கின் உறுதியான எண்ணம். ஈழத்தமிழ் மக்கள் தங்களின் இறைமையயும் ஒருமைப்பாட்டினையும் மீள் உறுதிப்படுத்துவதன் மூலமான சனநாயகப் போராட்டங்கள் மூலமே ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்பதைத் தடுத்து நிறுத்தலாம் என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News

Leave a Reply