ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 200

ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது

2022ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் அமர்வில் சிறிலங்காவில் மனித உரிமைகள் குறித்த அறிக்கையும், தீர்மானங்கள் குறித்த பூச்சிய வரைபும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. இதனை உறுப்புரிமை நாடுகள் ஆராய்ந்து தேவையானால் ஏற்புடைய திருத்தங்களை சேர்த்ததன் பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதுவரை வெளிவந்த தரவுகள் தகவல்களின் அடிப்படையில் சிறிலங்காவில் நடைபெற்ற பொருளாதாரக் குற்றங்கள் குறித்தும் மனித உரிமைகள் ஆணையகம் உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே முன்னைய அறிக்கைகளிலிருந்து வேறுபட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இந்நேரத்தில் 1956, 1958, 1977, 1983 ஆண்டுகளில் இலங்கை முழுவதிலும் 1979ம் ஆண்டுப் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் ஈழத்தமிழர்களின் தாயகமடங்கிலும் சிறிலங்கா அரசாங்கப் படையினரும் படையினரின் முழுஅளவிலான ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்களும் ஈழத்தமிழர்களுடைய தனிச் சொத்துக்களை வீடுகளை குடியேற்றங்களை வர்த்தக நிலையங்களை தொழிலகங்களை தொழிற்சாலைகளை பொதுச் சொத்துக்களை அழித்தொழித்து செய்த பொருளாதாரக் குற்றங்களையும் மனித உரிமைகள் ஆணையகத்தை விசாரிக்க வைக்க வேண்டிய கடப்பாடு உள்ளவர்களாக புலம்பதிந்து வாழும் தமிழர்கள் உள்ளனர்.

இம்முறை மனித உரிமைகள் ஆணையாளர் உடைய அறிக்கையில் சிறிலங்காவில் மக்களின் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற விதந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை ஈழத்தமிழர்களுக்கு இலங்கைக்கு பிரித்தானியாவால் ஈழத்தமிழர்களின் இறைமையை அவர்களின் விருப்பின்றி சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறையில் இணைத்துச் சுதந்திரம் வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையான 74 ஆண்டுகளும் சிங்கள அரசாங்கங்களால் மறுக்கப்பட்டே வருகின்றன. அந்த வகையில் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாகத் தொடரும் ஈழத்தமிழர் மனித உரிமைகள் பிரச்சினையை வெளியக பொறிமுறை மூலமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தீர்க்க முயற்சிக்க வேண்டுமென்பது புலம்பதிந்த ஈழத்தமிழர் கடமையாகவுள்ளது.

அத்துடன் 1979ம் ஆண்டு கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில் விசாரணையின்றி எரிக்கவும் தண்டனை விலக்கு பெறவும் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரத்தினை வழங்கிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் இன்று வரை 43 ஆண்டுகள் உண்மைகளைக் கண்டும் கையில் ஊமையன் வெண்ணெய் காத்த கதையாக அதனை உலகுக்கு எடுத்துரைக்க அஞ்சி வாழ்ந்து வருகின்றனர். இதுவே யுத்தக் குற்றச் செயல்களுக்கும், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களுக்குமான மூலகாரணமாகவுள்ளது. இந்நிலையிலேயே இந்தியா உட்பட பலநாடுகளும் சிறிலங்காவின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அனைத்துலக தரத்திற்கு இணைவான சட்டமாக மாற்ற சிறிலங்காவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனைச் சமாளிக்கப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் என நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான சட்டமென வலுவாக்கம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ரணில். உண்மையில் பெயரை மாற்றி உள்ளுள்ள மனித உரிமைகளை வன்முறைப்படுத்தும் சட்டங்களை முன்னைய விட அதிக பலமானதாக மாற்றுவதே ரணிலின் முயற்சியாக உள்ளது.

மேலும் இம்முறையும் இந்தியா மனித உரிமைகள் பேரவையில் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைத்துள்ளது. உண்மையில் 13வது அரசியலமைப்புத் திருத்தம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு ஒரே மாகாணசபை நிர்வாக அலகாக்கப்பட்ட பொழுது அந்நிலப்பரப்புக்கான நிதிப்பரவலாக்கலுக்கே உருவாக்கப்பட்டது. இதனாலே 35 ஆண்டுகளுக்கு முன்பே இது ஏற்புடைய அரசியல் தீர்வாக ஈழமக்களுக்கு அமையாதென இவ்வாரத்தில் தியாகி திலீபன் இதனையும் எதிர்த்தே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் என்பது வரலாறாக உள்ளது. இலங்கை-இந்திய உடன்படிக்கையை எந்த வகையிலும் இதுவரை நடைமுறைப்படுத்தாத சிறிலங்கா வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரே நிர்வாக அலகாக உடன்படிக்கையால் உருவாக்கப்பட்டதையும் கலைத்துவிட்டது. நடைமுறைப்படுத்தப் படுவதற்கான நிலப்பரப்பே மாற்றப்பட்டுவிட்ட இன்றைய நிலையில் 13வது திருத்தத்தை ஈழத்தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியா மீள்வலியுறுத்துவது ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலகநாடுகள் அமைப்புக்கள் தங்களுடைய ஏற்புடைய தீர்வுகளை முன்வைக்காது தடுக்கும் இந்தியாவின் ஒரு அரசியல் ராஜதந்திர உத்தியாகவும் உள்ளது. சீனாவின் சங்காய் பொருளாதார ஒத்துழைப்பு கட்டமைப்பு ரஸ்யா உட்பட பெரும்பாலான ஆசிய மத்திய கிழக்காசிய ஆபிரிக்க நாடுகளை உள்ளடக்கியுள்ளது. சிறிலங்கா பார்வையாளராக உள்ளது. இதன் இவ்வாண்டுத் தலைமையினை இந்தியா ஏற்றுள்ளமையும் எல்லைகளில் அடையாளப் படைவிலக்கல்களும் சீன இந்திய நட்புறவு பலமாக வளரத் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடாக உள்ளது. இந்த ஆசிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை ஒருநாட்டின் இறைமை எல்லைக்குள் தலையிடாது தடுக்கும் பொதுக் கொள்கை உடையவை. இது மனித உரிமைகள் ஆணையரின் வெளியக பொறிமுறை விசாரணைக்கான நெறிப் படுத்தல்களிலிருந்து சிறிலங்கா தப்புவதற்கான பாதுகாப்புக்கவசமாகத் திகழ்கிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களின் சமுக அரசியற் பொருளாதார கொள்கைகளைக் காலத்துக்கேற்ப அறிவார்ந்த நிலையில் உலகநாடுகள் ஏற்கத் தக்கவகையில் உருவாக்கவல்ல உயராய்வு மையம் ஒன்று புலம்பதிந்து வாழும் தமிழர்களால் அவர்கள் வாழும் நாடுகளின் ஏற்புடையவர்களை உள்ளடக்கி இலண்டனில் உடன் உருவாக்கப்பட வேண்டும். இதன்வழி ஈழத்தமிழர்களின் சமுக பொருளாதார அரசியல் கொள்கைளும் கோட்பாடுகளும் உலகுக்குத் தெளிவுபடுத்தப்பட்டாலே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை குறித்த உண்மைநிலைகளை அறிந்து ஈழத்தமிழர் எதிர்பார்க்கும் இனஅழிப்பாளர்களுக்கான தண்டனை நீதியும் பாதிப்புற்ற மக்களுக்கான பரிகாரநீதியும் அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமை வழியான பாதுகாப்பான அமைதி வாழ்வும் எதிர்காலத்திலாவது கிடைக்கச் செய்வார்கள் என்பதே இலக்கின் 200வது இதழின் எண்ணமாக உள்ளது.

Tamil News