இலக்கு மின்னிதழ் 154 – ஆசிரியர் தலையங்கம்

137 Views

இலக்கு மின்னிதழ் 154 - ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 154 – ஆசிரியர் தலையங்கம்

அபாயகரமான செயலணி; அனைத்துலகத் தலையீடு உடன் தேவை

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சமான இனவெறி, மதவெறி இலக்கை இலங்கைத் தீவின் ஆட்சி முறைமையாக வெளிப்படையாகவே கட்டமைக்கும் மக்களாட்சி மறுப்பு அரசாக கோட்டாபய அவர்களின் இன்றைய அரசு செயற்பட்டு வருகிறது.

இதனை வேகப்படுத்திடும் பெருமுயற்சியாக, இனமத வெறியையே தனது அரசியலாகக் கட்டமைத்துச் செயற்பட்டு வரும் ஞானசார தேரரின் தலைமையிலான அபாயகரமான ஜனாதிபதி செயலணி ஒன்றை இந்த ஒரு நாடு ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்காக சிறிலங்கா ஜனாதிபதி அமைத்துள்ளார்.

இவருக்கு இந்தத் தலைமை கொடுக்கப்பட்டதற்கான ஒரே தகுதி, இவர் ஒரு மதகுருவாக இருந்து கொண்டே இன்னொரு மதத்தின் வழிபாட்டுச் சுதந்திரத்தை அழிக்கும் செயலாக முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் தீர்த்தக் கேணியில் நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி இறந்த ஒரு பிக்குவின் சடலத்தை எரித்த சாதனை எனலாம்.

இந்தச் சாதனை பௌத்தத்திற்கு இவர் செய்த வீரச்செயலாக சிறிலங்கா ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டு, நீதிமன்றம் இவருக்கு வழங்கிய சிறைத் தண்டனையிலிருந்து பொதுமன்னிப்பு அளித்து விடுவித்து இன்று அவர் நினைப்பவற்றை அரசியலமைப்பிலேயே பொறிப்பதற்காக இந்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக இவரைச் சிறிலங்கா ஜனாதிபதி உட்கார்த்தி வைத்து அவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கும் பௌத்தராகத் தன்னை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர்களின் வாழ்வின் கண்ணியத்தை உறுதி செய்யுமாறு விடுத்த கோரிக்கைக்கு,  தனக்கு வாக்களித்த சிங்களப் பௌத்த பெரும்பான்மை மக்களது எங்கள் நாடு, எங்கள் இனம், எங்கள் மதம் என்னும் சிங்கள பௌத்த இனவெறி மதவெறி விருப்புக்களுக்கு எதிராக எந்த அரசியல் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பதில் அளித்த ராசபக்ச குடும்பத்து மகிந்த ராசபக்சாவின் மகன் நாமல் ராசபக்ச இன்று இந்தியப் பிரதமரால் தனது விருந்தினராக பாச நேச உறவுப் பரிமாறல் மொழிகளுடன் மதிப்பளிக்கப் பட்டுள்ளார். இது சிறிலங்காவின் இன்றைய அரசின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்கிற செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தும் செயல் எனலாம்.

கூடவே, பௌத்த மதத்தினை வளர்ப்பதற்கான நட்புறவு நாடாக இந்தியா தன்னை இன்று முன்னிலைப்படுத்தி 2500 ஆண்டுகால இந்துத்துவ பௌத்தத்துவ உறவின் மீள் புதுப்பிப்பாக  இந்தியா புத்தர் பரிநிர்வாணமடைந்த குஷி நகரத்தில் அனைத்துலக விமான நிலையமொன்றைக் கட்டி, இலங்கையின் பௌத்த பிக்குகளையும், பௌத்த தலைமையாளர்களையும் அங்கு அழைத்து, இந்த விமான நிலையத்தைத் திறந்து வைத்ததின் மூலம் இந்துத்துவ பௌத்தத்துவ இணைப்பு என்பதை முஸ்லீம், கிறிஸ்தவ மக்களின் மதச்சுதந்திர மட்டுப்படுத்தல்களுக்கான பெருங்சுவராகக் கட்டியெழுப்பி, இந்தியா சிறிலங்காவுக்குப் புதிய உற்சாகம் ஊட்டியுள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியாவும் சிறிலங்காவின் ஒருநாடு ஒருசட்ட ஆட்சி முறைமைக்கான அங்கீகாரத்தை மறைமுகமாக வழங்கியுள்ளமையை உறுதிப்படுத்துகிறது. ஆசிய நாடுகளில் படைபல வலிமை படைத்த இந்தியா மட்டுமல்ல பாக்கிஸ்தானும், சீனாவும் கூட இந்த ஒரேநாடு ஒரே சட்டத் திட்டத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன.

ரஸ்யாவோ இன்னுமொருபடி மேலே போய் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் யுத்தக் குற்றச்செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள். மனித உரிமைகளை வன்முறைப்படுத்தியமை போன்ற அனைத்துலகக் குற்றச் செயல்களுக்கு விசாரிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்ட பெருமையுடைய, சிறிலங்காவின் படைத்தளபதி சவேந்திர சில்வாவை விருந்தாளியாக அழைத்து அவருக்கு இராணுவ மேன்நிலைப் பயிற்சிகளை அளித்து, ஒருநாடு ஒரு சட்ட முறைமையை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்கான ஆற்றல் உள்ளவராக அவரை அனுப்பி வைத்தள்ளது.

தமிழர்களை இராணுவத்தால் நசுக்குவதற்கான ஆற்றல்களை வளர்த்து வரும் சிறிலங்கா இராணுவம், கிளிநொச்சியில் தனது படைகளின் தலைமையகத்தை 1ஆவது கோர்பஸ் படையணித் தலைமையகமாக மாற்றியதன் மூலம் ஒருநாடு ஒருசட்டம் என்பது ஈழத் தமிழர்களின் மேலான இராணுவ ஆட்சிமுறைமை ஒன்றுக்கான  அடித்தளமே என்பதை மேலும் உறுதி செய்துள்ளது. .

இந்நேரத்தில் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்பது சட்டத்தின் ஆட்சி என்பதே இல்லாத சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டால், அது சிறிலங்காவின் ஈழத் தமிழின அழிப்பு வேகத்தை  பலமடங்கு அதிகரிக்க வைக்கும் என்பதை உலகத் தமிழர்கள் தங்கள் தங்கள் அரசுகளுக்கு எடுத்துரைத்து, அனைத்துலகத் தலையீட்டின் வழியாக மட்டுமே இந்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்னும் சர்வாதிகார அரசு இலங்கையில் உருவாவதைத் தடுக்கலாம் என்பதை வலியுறுத்த வேண்டிய நேரமிது.

 

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad இலக்கு மின்னிதழ் 154 - ஆசிரியர் தலையங்கம்

Leave a Reply