ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை எதிர்த்தால் சிறைச்சாலைக்குள் தள்ளப்படலாம்-அருட்தந்தை மா.சத்திவேல்

130 Views

 

 சிறைச்சாலைக்குள் தள்ளப்படலாம்

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசியல் என்பது தெளிவு .இதனை எதிர்ப்பவர்களும் நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் பயங்கரவாதிகளாக்கப்பட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்படலாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது தொடர்பாக இலக்கு மின்னிதழிற்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒரே நாடு ஒரே சட்டம் விடயமாக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டதன் 2251/30- 2021 ம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது. இதில் ஞானசார தேரரின் இனவாத முகத்திலும் பார்க்க ஆட்சியாளர்களின் அரசியல் உள்நோக்க முகம் மிகப் பயங்கரமானது என்பது தெளிவாக தெரிகிறது. இது உயிர்ப்பு ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் முகத்தை விடவும் கோரமானது.

இதனால் இனிவரும் காலங்களில் அரசியல் கைதிகளால் சிறைச்சாலைகள் நிறையலாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் கவலை கொள்வதோடு வர்த்தமானி அநாகரிக செயல்பாட்டை மீளப்பெற்று கொள்ளுமாறும் அரசிடமும் ஜனாதிபதியிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றது.

இச் செயலணியில் தமிழர்கள் இல்லை, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இல்லை என்றெல்லாம் கவலை தெரிவிப்போரும் உள்ளனர். இவர்கள் இருந்திருந்தால் இதன் ஆபத்து மறைக்கப்பட்டிருக்கும். இனி இவர்களுக்கு அழைப்பு வந்தாலும் தமிழ் தேசியத்தில் அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்ட எவரும் செயலணியில் பங்கேற்கக்கூடாது என்பதுவே எமது நிலைப்பாடு.

இதுவரைகாலமும் ஞானசார தேரரினதும் அவரது பொதுபல சேனா அமைப்பினதும் முகம் மட்டுமே தெரிந்தது. தற்போது வெளிவந்துள்ள ஒரே நாடு ஒரே சட்டம் விடைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவருக்கு பின்னால் இயங்கும் பாரிய சக்தி வெளிப்பட்டுள்ளது. இது 1956 ஆண்டு சிங்களம் மட்டும் சட்ட இருண்ட யுகத்திற்கு மீண்டும் நாட்டை இழுத்து செல்கின்றது என்றே கூறலாம்.

தொல்பொருளியல் திணைக்களம் வட கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாட்டின் மூலம் இன அழிப்பு தொடர்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பிலான உத்தியோகபூர்வ இறுதி அறிக்கை அடுத்தகட்ட இன அழிப்பிற்கு யாப்பு ரீதியில் அங்கீகாரம் கொடுக்கும் உத்தியே இது.

பயங்கரவாத தடை சட்டத்தின் பாதுகாப்போடு அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பயங்கர வாதிகளாக்கப்பட்டு வாழ்வு இரண்டு நிலையில் இன்றும் சிறைச்சாலைகளில் எதிர்காலம் தெரியாது காலத்தை கழிக்கின்றனர். இந்நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்பது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசியல் என்பது தெளிவு .இதனை எதிர்ப்பவர்களும் நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் பயங்கரவாதிகளாக்கப்பட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்படலாம்.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை அங்கீகரிக்கப்பட்டாலும் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் இக் கருத்தியலுக்குப் பின்னால் ஒரு பெரும் அரசியல் சக்தி உருவாக்கப்படலாம். இதுவே நாட்டின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும் அமையலாம். சிங்கள பௌத்த கருத்தியலை முதன்மைப்படுத்தியே தற்போது அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்பது அனைவரும் இலங்கையர் என்பதைவிட தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் இரண்டதாக்குவதற்கான செயல்பாடே இது.

தற்போது நாட்டின் வளங்கள் வெளிநாட்டவருக்கு கொடுக்கப்படுவதை எதிர்த்தும் பொருளாதார கட்டுப்பாடுகள், பொருட்களின் விலையேற்றம், உரத்தட்டுப்பாடு என்பவற்றை எதிர்த்தும் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்துகின்ற சூழ்நிலையில் இச் செயலணி உருவாக்கத்தின் மூலம் மக்களை திசை திருப்பவும் ஆட்சியாளர்கள் முயற்சிப்பதோடு தேர்தலை சந்திப்பதற்காகவும் ஆட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் செயலணியின் செயற்பாடுகள் அமையலாம். அது மட்டுமல்ல நாட்டின் வளங்களை சூறையாடும் வெளிநாட்டு சக்திகளும் பூகோள அரசியல் ஆர்வம் கொண்ட சக்திகளும் இதற்குப் பின்னால் இருக்கலாம் என்ற சந்தேகமும் தோன்றுகின்றது.

இந்நிலையில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் அடுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடருக்கு தனித்தனியாக அறிக்கை தயாரிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பதில் மகிழாது, பேரினவாத கட்சிகளுக்கு முண்டு கொடுக்காத வடகிழக்கு மற்றும் மலையகத்தின் தேசிய அரசியலை மையப்படுத்தி கூட்டு செயற்பாட்டுக்கு செயலணியை உருவாக்க வேண்டும். இதன் மூலமே ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் கோர முகத்தை சிதைக்கவும் அரசியலையும் தக்க வைக்க முடியும் என்றார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை எதிர்த்தால் சிறைச்சாலைக்குள் தள்ளப்படலாம்-அருட்தந்தை மா.சத்திவேல்

Leave a Reply