எனக்கு அந்த தேசியப்பட்டியல் வேண்டும்,நான் அதில் உறுதியாக இருக்கின்றேன் என்றார் மாவை

”நானும் தேசிய பட்டியலை விரும்பவில்லை ஆனால் எனக்கு பல்வேறு நிர்ப்பந்தங்கள் வருகின்றது.அதனடிப்படையில் எனக்கு அந்த தேசியப்பட்டியல் வேண்டும்.என்ன நிலைவந்தாலும் நான் அதில் உறுதியாக இருக்கின்றேன்” என திரு.மாவை சேனாதிராசா தம்மிடம் கூறியதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் இன்று தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையினை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை முன்கொண்டுசெல்ல அனைவரும் முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு சரிவு காரணமாக ஒரேயொரு தேசியப்பட்டியல் நியமனமே கிடைக்கப்பெற்றது.வழமையாக இந்த தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சி தலைவர்கள் சந்தித்து ஒரு முடிவினை எடுப்பார்கள்.

தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் நான் எடுக்கும் முடிவினை தெரிவிப்பவனாக கலந்துரையாடலில் கலந்துகொள்பவதான நடைமுறைகளே இருந்துவந்தது.

இம்முறை நான் திருகோணமலை சென்போது அவ்வாறான நடைமுறை முடிந்திருக்கும் என்ற கருதல் இருந்தது.ஆனால் அது தொடர்பில் தெளிவான விளக்கத்தினை பெறவில்லை.வழக்கம்போல பங்காளிக்கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது.

தேசிய பட்டியல் தொடர்பில் பேசவேண்டும் வாருங்கள் என்று எனக்கு திருகோணமலையில் இருந்து அழைப்புவந்தது.நான் செல்லமுன்பாக தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கூறியபோது நான் வரவில்லையென்று சொன்னார்.

நான் திருகோணமலைசென்று தேசிய பட்டியலுக்கு யாரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடலை தலைவர் மற்றும் சுமந்திரனுடன் செய்தோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்ட இடங்களில் அம்பாறை மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை.அதனை அங்குவழங்கவேண்டும் என்ற முன்மொழிவினை நான் முன்வைத்தேன்.

ஏற்கனவே நியமனக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் திருகோணமலையில் குகதாசனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் அதனை அமுல்படுத்துவது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் என சொல்லப்பட்டது.

எனினும் எல்லா மாவட்டங்களிலும் நாங்கள் பிரதிநிதித்துவத்தினைப்பெற்றிருந்தால் இந்த தீர்மானம் பொருத்தமானதாக இருந்திருக்கும் ஆனால் நாங்கள் எதிர்பாராத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதனால் மக்களின் அபிப்பிராயங்களை திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும் தற்போதுள்ள கட்சியின் நிலைமையினை மேலோங்க செய்யும் வகையிலும் அம்பாறைக்கு பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதை சம்பந்தர் ஐயாவிடம் கூறினேன்.

இதன்போது குகதாசன் அவர்களையும் அழைந்து நிலைமை தொடர்பில் தலைவரால் தெளிவுபடுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழரசுக்கட்சி தலைவர் சேனாதிராஜாவுடன் தொடர்புகொண்டு இந்த விடயத்தினை சுருக்கமாக சொன்னார்.அதனைத்தொடர்ந்து தொலைபேசியை தலைவர் என்னிடம் தந்தார் இதன்போது சேனாதிராஜா அவர்கள் நானும் தேசிய பட்டியலை விரும்பவில்லை ஆனால் எனக்கு பல்வேறு நிர்ப்பந்தங்கள் வருகின்றது.

அதனடிப்படையில் எனக்கு அந்த தேசியப்பட்டியல் வேண்டும்.என்ன நிலைவந்தாலும் நான் அதில் உறுதியாக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்.அதனை தொடர்ந்து சம்பந்தர் ஐயாவிடம் தொலைபேசியை கொடுத்தபோது அம்பாறைக்கு கொடுப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.  அவ்வளவுதான் தொலைபேசியில் எங்களுக்குள் நடந்த உரையாடல்.

அன்றைய நிலைமையில் 09ஆம் திகதிக்கு முன்பாக தேசியப்பட்டியல் தொடர்பான பேர் விபரங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும் என்ற நிலைமையிருந்தது.அதன் அடிப்படையிலேயே மட்டக்களப்புக்கு வந்து தேசிய பட்டியல் தொடர்பான விடயத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்தேன்.

யாரை நியமிப்பது என்ற விடயம் ஆராயப்பட்டபோது கலையரசன் தொடர்பிலான பேர் முன்மொழியப்பட்டபோது அவர் தொடர்பில் ஆராயப்பட்டது.அவர் நெருக்கடியான காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டவர்.பிரதேசசபையின் தலைவராக இருந்தவர்கள்,மாகாணசபை உறுப்பினராக இருந்தவர்,இனியபாரதி போன்றவர்களின் நெருக்குவாரங்கள் இருந்த காலப்பகுதியில் நின்றுசெயற்பட்டவர்.தமிழரசுக்கட்சியின் இருப்புக்கு அம்பாறையில் முக்கிய நபராக இருந்தார் என்ற அடிப்படையில் அவர் பொருத்தமானவர் என்பது அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று தேசிய பட்டியல் தொடர்பில் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.இந்த சர்ச்சைகள் தொடர்பில் நாளை நடைபெறவுள்ள அரசியல் குழுக்கூட்டத்தில் ஆராயவுள்ளோம்.

இதிலே எனது நிலைப்பாடு என்னவென்றால் எமது தோழமைக்கட்சிகள் இது தொடர்பில் ஏற்கனவே தீர்மானித்திருப்பார்கள் என்று நம்பியிருந்தேன்.

இல்லாதுவிட்டால் ஏற்கனவே தேர்தல் நியமனக்குழுக்கள் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் குகதாசன் தீர்மானிக்கப்படுவார் என்ற காரணங்களினால் அவர்கள் எங்களுடன் கலந்தாலோசிக்காமல் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியாது.

ஆனால் இந்த நியமனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டதன் பின்னர்தான் இந்த நிலைமையேற்பட்டதா என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.தற்போதுள்ள சூழ்நிலையில் நாங்கள் வேறு மாவட்டங்கள்,மாகாணங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்தினை பார்ப்பது என்பது முடியாத காரியமாகும்.

பொதுச்செயலாளர் தன்னிச்சையாக நடந்துள்ளார் என்று எமது தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.நான் தன்னிச்சையாக செயற்படுவதாக இருந்தால் அமிர்தலிங்கம் ஐயா செய்தது போன்று நான் என்னையே நியமனம் செய்திருக்கமுடியும்.எந்தவிததத்திலும் நான் தன்னிச்சையான முடிவினை எடுக்கவில்லை.

எந்த விடயத்தினை முன்வைக்கும்போது நியாயப்படுத்தலுடன் முன்வைக்கவேண்டும் என சம்பந்தன் ஐயா சொல்லியுள்ளார்.அந்தவகையில் நாங்கள் எடுத்தது ஒரு நியாயப்படுத்தப்பட்ட தீர்மானம்.இது தொடர்பில் கிழக்கு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனைப்பயன்படுத்தி சில கட்சிகள் உள்நுழைந்து பிரதேசவாதங்களை முன்வைக்க முற்படுகின்றனர்.இவ்வாறான பழிச்சொற்கள் எங்களது கட்சிக்கு ஏற்படக்கூடாது.

நான் எந்தக்காலத்திலும் வடக்கு கிழக்கு என்ற பேதம் இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பவன்.தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்டவன். தேர்தலுக்காக இந்த கட்சியில் சேர்ந்துகொண்டவன் அல்ல.16வயதிலே மாணவர் பேரவையில் இணைந்து,இளைஞர் பேரவையில் இருந்து பிறகு தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி,தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வரலாற்றுடன் பயணம் செய்தவன் என்ற அடிப்படையில் கட்சியின் நன்மைக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் சரியானது என அனைத்துதலைவர்களும் கூறுகின்றார்கள்.ஆனால் வௌ;வேறு காரணங்களினால் சில தவறுகளை கூறுகின்றனர்.அவ்வாறு அவர்கள் தவறுகளை பிடிப்பதற்காக நியாயங்களும் இருக்கின்றன.ஆனால் நான் எல்லோரிடமும் பெருமனதுடன் வேண்டிக்கொள்வது என்னவென்றால் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானது என்ற அடிப்படையில் தவறுகளையெல்லாம் களைந்து இந்த தீர்மானத்தினை பின்னுறுதிப்படுத்தி கட்சியின் தீர்மானமென்ற வகையில் வெளிப்படுத்தவேண்டும் என அன்பாகவேண்டுகிறேன்.

தேசியப்பட்டியல் விடயம் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.குறைகளைந்து தேசிய பட்டியல் விடயத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து எமது கட்சி உறுப்பினர்கள் செயற்படுவதன் மூலமாக நாங்கள் இந்த சரிவினை நிமிர்த்திக்கொண்டு தமிழ்தேசியத்தினை தொடர்ந்து வழிநடத்திச்செல்லமுடியும்.