நான் இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்வதா இந்திய பாராளுமன்றத்துக்கு செல்வதா என்ற குழப்பத்தில் உள்ளேன் -இம்ரான் எம். பி

இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்வதா

நான் இந்திய பாராளுமன்றத்துக்கு செல்வதா? இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்வதா? என்ற குழப்பத்தில் உள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்  தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (23) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொணடு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘நான் இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்வதா இல்லை இனிமேல் இந்தியா பாராளுமன்றத்துக்கு செல்வதா என்ற குழப்பத்தில் உள்ளேன். காரணம் எனது மாவட்டமான திருகோணமலை பகுதி பகுதியாக இந்தியாவுக்கு விற்கப்படுகிறது.மெது மெதுவாக இந்திய கொலனியாக மாற்றம் பெற்று வருகிறது.சீனக்குடா பகுதியில் உள்ள எண்ணெய் தாங்கிகளும் நிலங்களும் விற்கப்பட்டு விட்டன. தற்போது சம்பூரும் விற்கப்பட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது.

100 மெகாவாட் இயற்கை எரிவாயு /சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஒப்பந்தம் செய்துள்ளதாக்க ஊடகங்கள் மூலமாகவே நான் அறிந்துகொண்டேன்.

இந்த ஒப்பந்தம் மூலம் பொதுமக்களின் குடியிருப்பு காணிகள் விவசாய காணிகள் உள்ளிட்ட பெருந்தொகையான காணிகள் கைப்பற்றப்படலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடத்தில் நிலவுகிறது.மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த 2011-ல் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக்க கூறப்பட்டது.

அப்போது அனல் மின் நிலையம் அமைத்தால்  சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என எமது மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் அந்த ஒப்பந்தம் தற்போது சூரிய மின் உற்பத்தி நிலையம் என மாற்றம் பெற்று வருகிறது.

ஆகவே இந்த ஒப்பந்தம் சம்மந்தமான முழுமையான தகவல்கள் இந்த சபையில் சமர்ப்பிக்க வேண்டும்.கைப்பற்றப்படவுள்ள பொதுமக்களின் காணிகளுக்கான மாற்று தீர்வை அமைச்சர் இந்த சபைக்கு தெளிவு படுத்த வேண்டும்.

உண்மையில் திருகோணமலையில் உள்ள இயற்கை துறைமுகம், எண்ணெய் தாங்கிகள் ,இல்மனைட் தொழிற்சாலை ,கந்தளாய் சீனி தொழிற்சாலை ஆகியவற்றை சிறந்த முறையில் நிர்வகித்தாலே எமது நாட்டுக்கு போதிய வருமானத்தை பெறலாம்.எமது நாட்டை அபிவிருத்தி அடைய செய்யலாம்.

ஆனால் அரசாங்கமோ இந்த வளங்களை இந்தியாவுக்கு விற்பதையே நோக்காக கொண்டுள்ளது. அடுத்து திருகோணமலை துறைமுகமும் விற்கப்படலாம்.கடதாசி தொழிற்சாலையும் விற்கப்படலாம் என தெரிவித்தார்.