இலங்கையிடம் வலியுறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் விடுத்துள்ள கோரிக்கை

மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நீதிமன்றம் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கைவிடுத்துள்ளது.

அதேபோன்று கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கு அவசியமான விசாரணை செயன்முறையில் தாமதமேற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் 8 – 9 ஆம் திகதியகளில் நடைபெறவுள்ளது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையின் கடந்தகால மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

 அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பல்வேறு விடயங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டன. இருப்பினும் கடந்த 2022 ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம், 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில அம்சங்களை உள்ளடக்கியிருந்தாலும்கூட முன்னர் காணப்பட்டவாறு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளுமற்ற நிலை இதில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நீதிமன்றம் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தவேண்டும்.

அடுத்ததாக இலங்கை அரசாங்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், பிறிதொரு சட்டத்தின்மூலம் அதனைப் பதிலீடு செய்வதாகவும் தொடர்ந்து வாக்குறுதியளித்து வந்திருக்கின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள், அச்சட்டத்தின் ஊடாக நிகழ்த்தப்புடும் தன்னிச்சையான கைதுகள், தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பில் உரியவாறான தீர்வை வழங்கவில்லை. எனவே மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக மிகமோசமான அனைத்துச்சட்டங்களையும் திருத்தியமைக்குமாறு அல்லது முழுமையாக நீக்குமாறும், அதுவரையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துங்கள்.

மேலும் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாத நிலையில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழு மற்றும் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு வழிமுறைகளில் உள்ளடக விசாரணைகளைத் தாமதப்படுத்துவதற்கோ அல்லது அதில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கோ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துங்கள்.

அதேபோன்று அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்படுவதுடன் அவ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும். அத்தோடு அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகித்த அனைத்து அதிகாரிகளும் உரியவாறான விசாரணைகள் மூலம் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.