மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்களின் பரவலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும், பரவலைத் தடுப்பதற்கும் அரசாங்கம் பல்துறை கூட்டுத் திட்டங்களை அவசரமாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (1) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமீபத்திய சுகாதாரப் புள்ளிவிபரங்களின்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் இந்தத் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இந்த விவகாரம் மிகவும் தீவிரமான கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதால், அரசாங்கம் உடனடியாகப் பல்துறை ரீதியான தலையீடுகளைச் செய்யத் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, கல்வி அமைச்சராகவும் செயற்படும் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில், கல்வி அமைச்சின் உயர்தர அதிகாரிகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடத்தப்பட்டுள்ளது. கல்வித் துறை மற்றும் சமூக நல்வாழ்வுத் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்த அபாயகரமான போக்கிலிருந்து இளம் தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கான கூட்டுச் செயற்திட்டங்கள் இதன் மூலம் வகுக்கப்பட்டுள்ளன.

தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் போதிய விழிப்புணர்வு மற்றும் சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலேயே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே, மருந்துப் பயன்பாடுகளைத் தாண்டி, முறையான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதற்கே அரசாங்கம் தற்போது முக்கியத்துவம் வழங்கி வருகிறது என்றார்.

எச்.ஐ.வி தொற்றைத் தடுப்பதற்கான ‘பிரெப்’ மருந்துகள் விநியோகம் தொடர்பில் எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், குறிப்பிட்ட மருத்துவ மனைகளில் உள்ள விசேட கிளினிக்குகள் மூலம் தடையின்றி இந்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இந்த மருந்துகளைத் தொடர்ச்சியாகவும் தங்குதடையின்றியும் நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்காக சர்வதேச நிதியங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தற்போதும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் எச்.ஐ.வி தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ள போதிலும், நோய் பரவிய பின்னர் மருந்து உட்கொள்வதை விட, நோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வே மிக முக்கியமானது. பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் மாணவர்களை இலக்கு வைத்து விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இதன் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.