பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளுடனான கலந்துரையாடல்களையடுத்து அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தும் முடிவு ஆரம்பத்தில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று கூறி சில குழுக்கள் அச்சத்தை உருவாக்க முயன்றபோதிலும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
“எந்தவொரு குடிமகன், பத்திரிகையாளர் அல்லது ஊடக நிறுவனத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்த இது பயன்படுத்தப்படாது என்று நாங்கள் உறுதியளித்தோம், மேலும் வாக்குறுதியளித்தபடியே நாங்கள் செயல்பட்டுள்ளோம்,” என்று நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் எதிர்பார்ப்பு அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதன் பயன்பாடு தற்காலிகமானது மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுடன் கண்டிப்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.



