பௌத்தமும் சிங்களமும் இணைய முன்னரே பௌத்தமும் தமிழும் இறுக்கப் பிணைந்திருந்ததே வரலாறு

பௌத்தமும் சிங்களமும் இணைய முன்னரே பௌத்தமும் தமிழும் இறுக்கப் பிணைந்திருந்ததே வரலாறு,பௌத்த இலக்கியங்கள் பாளி மொழிக்கு முன்னர் சிங்கள மொழிக்கு முன்னர் தமிழ் மொழியில் ஆக்கப்பட்டமை வரலாறு
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

நேற்று (21) இடம்பெற்ற பாராளுமன்ற கன்னியுரையின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்தம் பௌத்தம் என்று உரத்து உரைக்கின்றவர்களே பௌத்த சித்தாந்தத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பௌத்த மதத்தை ஸ்தாபித்த கௌதம புத்தனின் பின்னனியை நீங்கள் அனைவரும் மறந்துவிட்டீர்கள்.

உலகின் ஒரே ஒரு இந்து நாடான நேபாள நாட்டின் இந்து மன்னன் சுத்தோதனுக்கும் அவன் மனைவி மாயாதேவி மகா ராணிக்கும் இரண்டாவது இளவளாக இம் மண்ணில் அவதரித்தவர் சித்தார்த்த இளவரசனாவார்.

கௌதம புத்தர் தன்னை கடவுளாக ஒருநாளும் உருவகித்தது இல்லை தான் உருவாக்கிய பௌத்த நெறியை ஒருமதமாக முன்மொழியவுமில்லை. பௌத்தம் இலங்கைக்கு மட்டுமல்ல சிங்களவருக்கு மட்டுமல்ல உலகிற்கே ஒளியூட்டும் அர்த்தம் பொதிந்த வாழ்வியல் நெறி. இதை இந்த உயரிய சபையில் உரத்துக்கூறுவதில் எவ்வித தயக்கமுமில்லை.

கௌதம புத்தர் ஆரம்பமத்தில் இந்து மதத்தை சார்ந்தவன் என்ற உண்மை வரலாற்றை மறக்காதீர்கள். பௌத்த மதம் சிங்களத்துடன் தொடர்புபட்டது என்று முடிச்சுப் போடாதீர்கள். பௌத்தம் பின்னாளில் மதமாக உருவாகி உலகளாவிய ரீதியில் வியாபித்தது. பௌத்தமும் சிங்களமும் இணைய முன்னரே பௌத்தமும் தமிழும் உலகளாவிய ரீதியில் இணைந்து பிணைந்தது வரலாறு.

பௌத்த இலக்கியங்கள் பாளி மொழிக்கு முன்னர் சிங்கள மொழிக்கு முன்னர் தமிழ் மொழியில் ஆக்கப்பட்டமை வரலாறு. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சீவகசிந்தாமணி,குண்டலகேசி, மணிமேகலை என்பன பௌத்த காப்பியங்களே.

இவற்றை அடியொட்டியதாகவே சிங்கள காப்பியங்கள் உருவாகின என்பதே மறுக்கமுடியாத உண்மை.

உலக வரலாற்றை புரட்டிய உலக வரலாற்றில் யுத்த வெறியை அகற்றிய உலக வரலாற்றில் மனுக்குலத்தின் பெறுமதியை உயர்த்திய கலிங்க யுத்தத்தை நினைக்கும் பொழுது என் மனக்கண் முன் ஞாபகம் வருவது முள்ளிவாய்க்கால் யுத்தமும் அதனூடாக என் தமிழ் தேசிய உறவுகள் கண்ட அவலமுமே என் நினைவுக்கு வருகின்றது. எனது பார்வையில் கலிங்க மண் கண்ட அவலம்,துயரம்இ அழிவு அத்தனையும் என் முள்ளிவாய்க்கால் மண் கண்டது.

ஆனால் கலிங்க யுத்தம் யுத்த வெறி கொண்ட சாம்ராட் அசோக சக்கரவரத்தியின் மனநிலையில் ஏற்பட்டமாற்றத்தினை முப்பது வருடகாலம் உள்நாட்டுயுத்தம் புரிந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தினை நடத்தி கலிங்க யுத்தத்திற்கு ஒப்பான பேரழிவினை எம்மண்ணில் ஏற்படுத்திய உங்களிடத்தில் காணவில்லை என்பதுவே எனது மனக்கவலை.

கலிங்க யுத்தம் உலகிற்கு பௌத்தத்தை பரப்பியது போல உலகிற்கு உண்மை ஒளியை உணர்த்தியது போல உலகிற்கு சமாதானத்தின் தேவையினை உணர்த்தியது போல உலகிற்கு ஞானஒளியை போதித்தது போல முள்ளிவாய்க்கால் அவலம் எதனையும் உங்களிடத்தில் ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார்