‘தன் இனம் என்றால் போராளிகள், தமிழினம் என்றால் தீவிரவாதிகள்’ இதுவே சிங்களத்தின் கொள்கை-நகுலேஸ்வரன்

106 Views

தமிழினம் என்றால் தீவிரவாதிகள்

தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை எனத் தெரிவித்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ்வரன், இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ள நீதி மன்றத் தடையுத்தரவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

“தடைசெய்யப்பட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மரணித்தமை சம்மந்தாகவும், மற்றும் இயக்க உறுப்பினர்கள் மரணித்தமை சம்மந்தமாக மாவீரர் நினைவேந்தல் நடத்த இருப்பதாகவும் 2021.11.21ம் திகதி தொடக்கம் 201.11.27ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடாத்துவதாகவும், வருகின்ற 26ம் திகதி ஞாபகார்த்த தினம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், குறித்த திகதியையொட்டி முதியோர் சிறுவர் இல்லங்களுக்குச் சென்று இந்தப் பெயரை வைத்து உதவி செய்ய உள்ளதாகத் தகவல்கள் உள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றால் அதற்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையாலும் இந்த நிகழ்வைத் தடுக்கும் முகமான தடையுத்தரவு பிறப்பிக்குமாறு” களுவாஞ்சிக்குடி காவல்துறையினரால் மன்றுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் உட்பட்ட களுவாஞ்சிக்குடி காவல்துதுறை பிரதேசத்தில் வசிக்கும் நான் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஐவருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களிடம் நியாயத்தை நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். தங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசுக்கெதிராகப் போராடி எத்தனையோ அழிப்புகளை மேற்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு இன்று தியாகிகள் என்ற பெயரில் நினைவேந்தல்கள் நடத்த முடியும். ஆனால் தமிழ் மக்களின் அடக்குமுறைக்கு எதிராக நீதியான முறையில் போராடிய எமது உறவுகளை நாம் நினைவு கூர முடியாது.

மாவீரர் தினமென்பது 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் நினைவு கூரப்படுகின்ற விடயம் அல்ல. போராட்ட ஆரம்ப காலத்தில் 1989களில் இருந்தே உயிர்நீத்த உறவுகளை, பிள்ளைகளை எண்ணி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற விடயம். இதற்கான தடை என்பது தமிழ் மக்களுக்கு எதிரான தடையாகவே பார்க்கப்படும்.

தன் இனம் என்றால் போராளிகள், தமிழினம் என்றால் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது. இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 'தன் இனம் என்றால் போராளிகள், தமிழினம் என்றால் தீவிரவாதிகள்' இதுவே சிங்களத்தின் கொள்கை-நகுலேஸ்வரன்

Leave a Reply