அம்பாறை: கஞ்சிக்குடியாறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மீன்பிடி வள்ளங்கள் கையளிப்பு

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிக்குடியாறு  கிராமத்தில் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, கஞ்சிக்குடியாறு கிராமிய கூட்டுறவு சங்கம் ஊடாக வள்ளங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு  26.04.2022, அன்று  நடை பெற்றது.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் திரு கஜேந்திரன் அவர்களின் தலைமையிலும் , கிராம சேவகர்   திரு நிரோஷன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக  திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் திரு கஜேந்திரன் , உதவி பிரதேச செயலாளர் சதிசேகரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு விஜயன்  ,மீன்வளர்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரவிக்குமார்,கஞ்சிக்குடியாறு மீனவ சங்க தலைவர் திரு. மகேந்திரன் , கிராம சேவகர் திரு. நிரோஷன்  மற்றும் கஞ்சிக்குடியாறு கிராமிய கூட்டுறவு சங்கத்தலைவர் குகதீபன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் கனடாவில் இருந்து சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பின் சர்வதேச பணிப்பாளர் திருமதி சுபாங்கி அவர்களும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பின் முன்னெடுப்புடனும் , அன்புநெறி (USA) நிதி உதவியுடனும் Assist RR, IMHO USA, இணை அனுசரணையுடனும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கஞ்சிகுடியாறு  கிராமிய கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டதன் அவசியம் தொடர்பிலும் , கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயம் மற்றும் மீன் வளங்களை பயன்படுத்தி கிராம முன்னேற்றத்தை நீண்ட கால நோக்கில் திட்டங்களை வகுத்து அபிவிருத்தி பணியில் ஈடுபட வேண்டும் எனவும் திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் திரு கஜேந்திரன் அவர்களால் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.  கஞ்சிகுடியாறு  கிராமிய கூட்டுறவு சங்கம் ஊடாக பல கிராம அபிவிருத்தி பணிகள் மேற்குறிப்பிடப்பட்ட அமைப்புக்களால்  கிராம மக்கள் ஆதரவுடன்  முன்னெடுக்கப்பட   உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமத்தில் 89 மீனவர்கள் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களாக காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முகமாக கடந்த  நவம்பர் மாதம் 2020, ல் குளத்தில் மீன்குஞ்சுகளை விடும் திட்டம் மேற்குறிப்பிடப்பட்ட இதே அமைப்புக்களால்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  அவர்களில் இருபது மீனவர்கள் சொந்த மீன்பிடி வள்ளங்கள் இன்றி தமது நாளாந்த தொழிலை மேற்கொள்ள மிகவும் சிரமத்தை எதிர்நோக்கியதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சொந்தமாக மீன்பிடி வள்ளங்கள் வழங்க முயற்சி எடுக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply