இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விவசாயிகளிடம் ஒப்படையுங்கள் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கில்  விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. படையினர் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் .விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. இவர்கள் பொருளாதார பிரச்சினையில் சொல்லொன்னா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில்,  கால்நடை வளங்கள் ,காணி மற்றும்  நீர்ப்பாசன  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

மேய்ச்சல் தரை இல்லாமையினால்  எமது பிரதேச  கால்நடைப் பண்ணையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பல மைல்களுக்கு கால்நடைகளை கொண்டுச் சென்று ஒரு இடத்தில் இருந்து அவற்றை பார்த்துக் கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கங்கள் மேய்ச்சல் தரை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், இந்த  அரசாங்கம் அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை வனஜீவராசிகள் மற்றும் வன திணைக்களங்கள் அரச  நிறுவனங்களாகும். இந்த திணைக்களங்களும் நிலங்களை விடுவிப்பதாக கூறினாலும் அதை செய்வதில்லை. அவர்களுக்கென தனியான சட்டங்கள் இருக்கின்றனரவா என்று தெரியவில்லை. விவசாயிகளின் நிலமாக இருந்தாலும் சரி, மேய்ச்சல் தரையாக இருக்கலாம் இவை அந்த திணைக்களங்களின் கீழே உள்ளன.

அத்துடன் விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அவர்கள் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் என்று கூறலாம்.

இங்குள்ள விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. கால்நடைகளை விற்பனை செய்தல் மற்றும் பெண்களின் தாலிக்கொடிகளை அடகு வைப்பதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொருளாதார பிரச்சினையில் சொல்லொன்னா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.