அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தி புதன்கிழமை (12) கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்த பெண் செயற்பாட்டாளர்கள், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குமாறும், அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர்கள் விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் பலத்த சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கிறது.
இந்நிலையில் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியும், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் இடதுசாரி பெண்கள் அமைப்பான விடுதலை இயக்கத்தினால் நேற்று புதன்கிழமை (12) மாலை 4.30 மணிக்கு கொழும்பிலுள்ள லிப்டன் சுற்றுவட்டத்தில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் செயற்பாட்டாளர்கள் ‘பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை உறுதிப்படுத்து’, ‘பாலியல் அத்துமீறல்களை நிறுத்து’, ‘பணியிடங்களில் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்து’, ‘பாலியல் வன்புணர்வு கலாசாரம் வேண்டாம்’, ‘வன்முறைகள் வேண்டாம், பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்’, ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சாதாரணமயப்படுத்தாதே’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பெண்ணிய செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம், ‘இரு தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் வைத்திசாலையில் பெண் வைத்தியர் ஒருவரும், யாழ்ப்பாணத்தில் மருத்துவ சிகிச்சை பெறவந்த பெண்ணொருவரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
எமது நாட்டில் இதற்கு முன்னரும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், அவற்றில் பலவற்றுக்கு நீதி கிட்டாமலும் போயிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது பணியிடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகக் காணப்படுகிறது.
நாட்டில் சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்களில் பலர் தினந்தோறும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர். ஆனால் அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்களை உருவாக்கவில்லை.
இந்நிலையில் வைத்தியசாலைகளில் பெண் வைத்தியர்கள் மற்றும் நோயாளர்கள் உள்ளடங்கலாக சகல பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்குவதுடன் அதற்குரிய நிதி ஒதுக்கீட்டையும் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்’ என்றார்.