மனித உரிமையின் அடிப்படையிலேயே ஜி.எஸ்.பி.பிளஸ் கிடைக்கும் : ஹர்ஷ டி சில்வா

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெறுவதாயின் இலங்கை 27 சர்வதேச சாசனங்களுக்கு இணங்கியிருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் கருத்துரைத்த அவர், ஜி.எஸ்.பிளஸ் வரிச் சலுகையை பெறுவது இலகுவான விடயமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு கடுமையான முயற்சிகளின் பின்னர் மீண்டும் ஜி.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்தது.
அதற்காக பல பொறுப்புகளை இலங்கை ஏற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாத இறுதியில் ஜி.எஸ்.பிளஸ் வரிச் சலுகை தொடர்பான மீளாய்வுக்காக குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

இதன்போது பயங்கரவாத தடைச் சட்டம் முக்கிய விடயமாக கவனத்தில் கொள்ளப்படும்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என இந்த அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
எனினும் தற்போதைய அரசாங்கம் ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்தது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையெழுத்துடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ‘பின்னர் ஜி.எஸ்.பி.பிளஸ் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புகளை அடுத்து குறித்த இளைஞன் விடுவிக்கப்பட்டுள்ளார்’.

அத்துடன் வெளிவிவகார அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஹிமாலி அருணதிலக்க, ஜெனிவாவில் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்தார். எவ்வாறாயினும் அமெரிக்காவின் வரி என்பது வேறு ஜி.எஸ்.பி. பிளஸ் என்பது வேறு என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி மற்றும் மனிதவுரிமை என்பவற்றின் அடிப்படையிலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கான நிதி அதிகரிக்கப்படும் என ஜெனிவாவில் கூறிய அரசாங்கம், தமது பாதீட்டில் உத்தேச செலவினத்தை விடவும் குறைவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.