பசுமை ஒப்பந்தமா அல்லது காலநிலைக் காலனீயமா? – தமிழில்: ஜெயந்திரன்

பசுமை ஒப்பந்தமா அல்லது காலநிலைக் காலனீயமா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பூகோள ரீதியாகக் கால நிலையைச் சீராக்கும் வலையமைப்புக்கு அத்தியாவசியமான சுற்றுச் சூழல் ஒழுங்கமைப்புக் கட்டமைப்புகளை மிக அதிகமாகத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற அமெசோன் (Amazon) மழைக் காடுகளில் 430,000 (174,000 ஹெக்ரேயர்கள்) ஏக்கர் நிலங்களில் மரக் குற்றித் தொழில் களுக்குத் தேவையான மரக் குற்றிகளை வழங்கும் நோக்குடனும், கால்நடை வளர்ப்புக்காக நிலங்களைத் துப்புரவு செய்யும் நோக்குடனும் காடுகள் அழிக்கப்பட்டு, தீயிட்டு எரிக்கப் பட்டிருக்கின்றன. அது மட்டுமன்றி 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2020 ஜூலை மாதம் வரை, மேலும் 2.7 மில்லியன் ஏக்கர்கள் (1.1 மில்லியன் ஹெக்ரேயர்கள்) இக்குறிப்பிட்ட பிரதேசத்தில் அழிக்கப் பட்டுள்ளன. காடுகள் அழிக்கப் பட்டுப் பெறப்படும் மரங்களும் இறைச்சியும் வட பூகோளச் சந்தைகளுக்கே அனுப்பப் படுகின்றன.

தென் ஆசியாவைப் பொறுத்த வரையில், காடழிக்கும் செயற்பாடு எண்ணெய் தயாரிக்கும் தொழிலுடன் தொடர்பு பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 2018 இலிருந்து 2020 வரை அண்ணளவாக 500,000 ஏக்கர் மழைக் காடுகள் (202,000 ஹெக்ரேயர்கள்) இந்தோனேசியா, மலேசியா, பாப்புவா நியூகினி போன்ற மூன்று நாடுகளில் காடழிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகளில் வாழும் பூர்வீக மக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை இழந்திருக் கின்றார்கள். வட பூகோளத்தில் உள்ள உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள் தாம், இந்த பாம் எண்ணெய்ப் (palm oil) பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதாக உறுதி கூறிய போதிலும் இன்றும் இந்த எண்ணெய்  தொடர்பான கேள்வி இந்த நிறுவனங்கள் நடுவில் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

இது இப்படியிருக்க, வட பூகோளத்தில் நிலவும் பசுமைச் சக்திக்கான வளங்களைத் தேடும் முயற்சியின் காரணமாக நிக்கல் (nickel), கோபால்ட் (cobalt), லிதியம் (lithium) போன்ற உலோகங்களுக்கான கேள்வி அதிகரித்திருக்கிறது. இத்தகைய சுரங்கத் தொழில்களில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தானதும் தரக் குறைவானதுமான வேலைச் சூழல்களை எதிர் கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.

சுரங்கத் தொழிலாளர்கள்
சுரங்கத் தொழிலாளர்கள்

கொங்கோ சனநாயகக் குடியரசைப் (Democratic Republic of Congo) பொறுத்த வரையில் கோபால்ட் சுரங்கங்களில் சிறுவர்களைத் தொழிலாளிகளாகப் பயன் படுத்தும் செயற்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக இச்சிறுவர்கள் பல உயிர் ஆபத்துக்களைச் சந்திக்கக் கூடிய சூழலில் விடப்பட்டிருக்கும் அதே வேளையில், அவர்களது உடல்நலம் பாதிக்கப் படுவதோடு, அவர்கள் தமக்கான கல்வியை இழக்கும் சூழலும் உருவாக்கப் படுகின்றது. பொலிவியா, சிலி, ஆர்ஜெந்தீனா போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் லிதியத்தைத் தோண்டி எடுக்கும் சுரங்கங்கள் நீரை மிக அதிக அளவில் உபயோகிப்பதால் நிலங்கள் பாலைவனம் ஆவதுடன், நிலத்தடி நீரையும் ஆறுகளையும் மாசடையச் செய்து, இந்நாடுகளில்  வாழுகின்ற மக்களின் உடல் நலத்துக்கும் ஊறு விளைவிக்கின்றது.

இலண்டனைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் வளநிலையம் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தினால் திரட்டப்பட்ட தரவுகளைப் பார்க்கும் போது, இப்படிப்பட்ட கனிம வளங்களைத் தோண்டி எடுக்கும் 115 நிறுவனங்கள் தொடர்பாக 304 முறையீடுகள் இதுவரை பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

Cl.colonialism 2 1 பசுமை ஒப்பந்தமா அல்லது காலநிலைக் காலனீயமா? - தமிழில்: ஜெயந்திரன்காலனீயத்தின் முடிவு பல தசாப்தங்களுக்கு முன்னரேயே அறிவிக்கப் பட்ட போதிலும் கனிமங்களைத் தோண்டி எடுக்கும் தொழில் களைப் பொறுத்த வரையில் காலனீயத்தின் விளைவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிரு ப்பதைக் காணலாம். ஐரோப்பிய காலனீய வாதிகளினால் உருவாக்கப்பட்ட இவ்வாறான பூர்வீகக் குடிமக்களின் நிலங்களைச் சுவீகரித்தல், வளங்களைச் சுரண்டுதல், தொழிலாளரைச் சுரண்டுதல் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் நடை பெற்று வருவதோடு, தென் பூகோளத்தில் வாழும் மக்களுக்குப் பாரிய இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

உண்மையில், இந்த நவ காலனீய யதார்த்தத்தின் அடிப்படையில் தான் ஐரோப்பிய ஒன்றியம் 2019ம் ஆண்டின் இறுதியில் தனது பசுமை ஒப்பந்தத்தை அறிவித்தது.

பூமியின் கால நிலையை மனிதர்கள் ஏற்கனவே மாற்றி அமைத்தது மட்டு மன்றி, அதன் இயற்கையான சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்புகளின் பெரும்பான்மை யானவற்றின் செயற்பாடு களையும் சீர்குலைத்து விட்டார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு கொள்கையினால் தூண்டப் பட்டு முன் வைக்கப்பட்ட பசுமை ஒப்பந்தம், உலகம் பூராவும் காலநிலை மாற்றத்துக்கும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கும் வட பூகோளமே மிகவும் முக்கியமான காரணி என்ற விடயத்தை முற்று முழுதாக அலட்சியம் செய்திருக்கிறது.

ஐரோப்பிய அரசுகளும் பெரு நிறுவனங்களும், அக் கண்டத்திலுள்ள சுற்றுச் சூழலைச் சேதப் படுத்தி, அழித்து, அந்நாடுகளில் இருக்கின்ற பின்தங்கிய சமூகங்களையும் சுரண்டலுக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி, மற்ற அனைத்துக் கண்டங்களிலும் இதே போன்று அல்லது இதைவிட இன்னும் மோசமான செயற் பாடுகளிலும் ஈடுபட்டி ருக்கிறார்கள்.

அளவுக்கு அதிகமான உற்பத்தி மூலமும் அளவுக்கு அதிகமான நுகர்வின் மூலமும் முதலாளித்துவப் பொருண்மியக் கட்டமைப்புகளின் துணையுடன் மிக அதிகளவிலான பிரித் தெடுக்கும் செயற்பாடுகளுக்கு (extraction methods) அனுமதி வழங்கி, விரிவு படுத்தி, ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்றவற்றின் இயற்கை உலகை வட பூகோளம் அழிவுக்கு உள்ளாக்கி யிருக்கிறது.

ஐரோப்பாவுக்கு வெளியே இருக்கின்ற சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு களுக்கும் சமூகங்களுக்கும் ஐரோப்பிய நாடுகள் ஏற்படுத்திய இழப்புகள், பாதிப்புகள் என்பவற்றைப் பொறுத்த வரையில் அக் குறிப்பிட்ட நாடுகளுடன் எவ்வாறு ஒப்புரவை மேற்கொள்ளலாம் என்றோ இழப்புகளையும் அழிவுகளையும் எவ்வாறு ஈடு செய்யலாம் என்றோ பசுமை ஒப்பந்தத்தில் எதுவுமே குறிப்பிடப் படவில்லை. அதே வேளையில்  இவ்வகையான பாதிப்புகள் எவ்வாறு தென் பூகோளத்தில் வாழுகின்ற மக்களை ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர வைத்து, அங்கே அவர்கள் மீண்டும் எதிர்ப்புகளைச் சந்திக்கும் பிரச்சினையை எந்த விதத்திலும் கவனத்தில் கொள்ள வில்லை. அத்தோடு இப்பிரச்சினைக்கு எந்த விதமான தீர்வையும் அது முன் வைக்கவில்லை.

புதுப்பிக்கக் கூடிய சக்தியை உருவாக்க வேண்டும், மற்றும் வாகனங்களுக்கு மின்வலுவைப் மாற்றீடாகப் பயன் படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் காண்பிக்கும் தீவிர முனைப்பு, எவ்வாறு இந்தப் பிரதியீட்டுக்குத் தேவையான வலு பிரித்தெடுக்கப் படும் போது அச் செயற்பாடு ஏனைய உலக நாடுகளில் பாதிப்புகளைத் தோற்று விக்கின்றது என்பதை இந்த ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தம், எந்த விதத்திலும் கருத்திற் கொள்ளவில்லை. காலநிலை மாற்றமும் சுற்றுச் சூழலின் தரக் குறைவும் தமது சொந்த நாடுகளில் உள்ள பின்தங்கிய சமூகங்களையும் தென் பூகோளத்தில் உள்ள ஏழைகளையும் கைவிடப் பட்டவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம் என்ற விடயத்தையும் கவனத்தில் எடுப்பதில்லை.

இன்னொரு வகையில் சொல்லப் போனால், 2050ம் ஆண்டளவில் உலகிலேயே முதலாவது காலநிலை நடுநிலைத் தன்மை வாய்ந்த பிரதேசமாக ஐரோப்பாவை மாற்றும் பயணத்தில், தனது பழைய அணுகு முறைகளைப் பயன் படுத்துவதன் மூலம் பிரஸ்ஸல்ஸ் (Brussels)  காலநிலைக் காலனீயத்துக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

WhatsApp Image 2021 07 04 at 7.29.00 PM பசுமை ஒப்பந்தமா அல்லது காலநிலைக் காலனீயமா? - தமிழில்: ஜெயந்திரன்காலனீயம் மற்றும் முதலாளித்துவம் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை  எந்த விதத்திலும் கருத்திற் கொள்ளாது, காலநிலை மாற்றம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முன் வைக்கும் அரசியல் சார்பற்ற விவரணம், இதே விடயங்களால் இலாப மீட்டும் அதே நிறுவனங்களால் தூண்டப் பட்டவை என்பது மட்டுமன்றி அவை கால நிலைச் செயற்பாடு தொடர்பாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத கால நிலைச் செயற்பாடுகளில் முடியக் கூடும் என்பதோடு, மேலும் மோசமான விளைவு களையும் ஏற்படுத்தக் கூடும். இவை நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து முன்னெடுப் பதற்குச் சாத்தியம் அற்றவையாகவும் அதே வேளையில் ஐரோப்பாவிலும் தென் பூகோளத்திலும் வாழுகின்ற பின்தங்கிய மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் அமைந்து விடும்.

பசுமை ஒப்பந்தம், தொழில் நுட்பத் தீர்வுகளிலும் மிகச் சிக்கலான பிரச்சினைகளுக்கு இலகுவான உடனடித் தீர்வுகளிலும் தங்கி இருப்பதோடு, மின்வலுவால் இயக்கப் படும் வாகனங்கள், சூரிய மின்கலங்கள், காற்றாலைகள், ஏனைய பரபரப்பான புதுப்பிக்கக் கூடிய சக்திக் கண்டு பிடிப்புகள் என்பவற்றுடன் கூடிய ஓர் பசுமையான, நீடித்து நிலைக்கக் கூடிய பொருண்மியத்தை முன்னெடுப்பதாக வாக்களிக்கிறது.

ஆனால் இவையெல்லாம் உண்மையில் யாருக்குப் பயனளிக்கப் போகிறது என்பதே இங்கு தொடுக்கப் படும் முக்கிய வினாவாகும்.

காலநிலைக் காலனீயத்துக்குள் விழுந்து விடுவதைத் தவிர்ப்பதற்காக, தீங்கு விளைவிக்கக் கூடிய பிரித்தெடுக்கும் முறைகளை ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தம் முற்றாக ஒழிப்பதற்கான ஒரு தெளிவான திட்டத்தை வடிவமைத்து, காலநிலை நெருக்கடி தொடர்பாகத் தமது வரலாற்றுப் பொறுப்பை ஏற்று, ஐரோப்பிய ஒன்றியப் பெருநிறுவனங்கள் தென் பூகோளத்தில் ஏற்படுத்துகின்ற சேதங்களுக்கான பொறுப்புக் கூறலையும் வழங்க வேண்டும்.

அநீதியைத் தோற்றுவிக்கும் ஒரு ஒழுங்கமைப்பினுள் தொடர்ந்தும்  இயங்குவது மீண்டும் அநீதியையே தோற்றுவிக்கும். முதலாளித்துவ, காலனீயப் பிடியிலிருந்து பசுமை ஒப்பந்தத்தை மீட்டெடுத்து, சமூக நீதியையும் இனங்களுக்கு இடையிலான நீதியையும் முன்னிறுத்தும் ஓர் புதிய, முழுமையான, எல்லாவற்றுடனும் தொடர்பு பட்ட அணுகு முறைகளுக்கு இட்டுச் செல்லக் கூடிய முக்கிய பரிந்துரைகளை எக்குயினொக்ஸ் (Equinox) நிறுவனத்தில் உள்ள நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

இனங்களுக்கான நீதி தொடர்பான ஒரு தெளிவான அர்ப்பணிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் இனவாதத்துக்கு எதிரான செயற் திட்டங்களை பசுமை ஒப்பந்தத்துடன் இணைத்தல், நிறுவன ரீதியிலான சீர்திருத்தம், சிவில் சமூகத்துடன் முற்றிலும் ஒரு புதிய உறவு என்பவை இந்தப் பரிந்துரை களுக்குள் உள்ளடங்குகின்றன.

காலனீய முதலாளித்துவத்தை அது நீடித்து நிலைக்கச் செய்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டு, இந்த அணுகு முறையை இல்லா தொழிப்பதை உறுதிப் படுத்துவதன் மூலமே ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை ஒப்பந்தம் கால நிலை மாற்றத்தில் உண்மையிலேயே தாக்கம் செலுத்து கின்ற ஒன்றாக அமைய முடியும். ஐரோப்பிய அரசுகளும் பெரு நிறுவனங்களும் நீண்ட நெடுங் காலமாகவே உலகில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. நீதியையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப் படுத்தி, பொருண்மிய ஒழுங்கமைப்புகளை முற்றாக மாற்றி அமைக்க வேண்டிய நேரம் இப்போது உருவாகி இருக்கிறது. மானிட சமூகத்தின் ஒட்டு மொத்த உயிர் பிழைப்பும் இதிலேயே தங்கி இருக்கிறது.

நன்றி: அல்ஜசீரா

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 பசுமை ஒப்பந்தமா அல்லது காலநிலைக் காலனீயமா? - தமிழில்: ஜெயந்திரன்