அன்பை மறந்தோம்; அறம் தவிர்த்தோம்; உறவை மறந்தோம்; ஒற்றுமை இழந்து, நாம் ஆணவம் கொண்டு ஆர்ப்பரிக்கையில், அனைத்தையும் அடக்கி ஒடுக்கி மனிதனுக்கு மனிதத்தைப் போதித்த கொரோனாவானது, இப்பயணத் தடைச் சூழ்நிலையில் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவிற்கும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவின் பிடியிலிருந்து இந்த உலகமே விடுபட்டு மீண்டும் இறை அருளோடும், இயற்கை யோடும் இணைந்த, இயல்பான வாழ்க்கைக்குள் திரும்ப வேண்டு மென்றே நாம் எல்லோரும் விரும்பு கின்றோம்.
எமது சமய வாழ்க்கைகளும், நம்பிக்கைகளும், பண்பாடுகளும், பண்டிகைகளும் இந்நேரத்திலே தேக்க நிலையை அடைந்தாலும், ஏனைய சமயங்களைப் புரிந்து கொள்ளும் முயற்சிக்கான விதையை கொரோனா இட்டதென்பது மிகையாகாது, அறைகளுக்குள் அடைக்கப் பட்டிருந்த நாம், கொரோனா பிரசவித்த நேரான, எதிரான விளைவுகளை அலசிப் பார்க்க வேண்டும். அவ்வடிப்படையிலே “மனிதம் தாண்டிய புனிதம் எச்சமயத்திலும் இல்லை” என்பதை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான சமயம் தொடர்பான உண்மைகள் உணரப் பட்டுள்ளன.
மனிதனை நல்வழிப் படுத்துகின்ற ஒன்றாகவும், மனிதனுக்கான விழுமியங்கள், நியமங்களை வழங்கி, மனித வாழ்விற்கு உதவுகின்ற ஒன்று என்ற வகையிலும், சமயம் எமது வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றது. இதில் சடங்குகள், பண்டிகைகள் என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.
திருமணச் சடங்கு என்று பார்க்கின்ற போது, Covid – 19 இற்கு முன்னரான காலத்தில் அனைத்து உறவுகளும் ஒன்றிணைந்து திருமணத்தை நடத்துவர், ஒவ்வொரு சடங்குகளின் போதும் அனைவரும் இணைந்து உறவினர்களை நேராகச் சென்று பத்திரிகை வைத்து அழைப்பதுடன் நின்று விடாது, மண்டபம், மேளம், அலங்காரம், பலகாரம் என கோலாகலமாகவே திருமணங்கள் நடக்கும். ஆனால் இன்று வீட்டு உறவுகளுடன், வீட்டிற்குள் வைத்து எந்தவித அலங்காரங்களோ, கோலாகலமோ இல்லாது கொண்டாடப் படுகின்றது. இது மட்டுமன்றி, திருமணம் செய்யும் பெண் ஒரு இடத்திலும், ஆண் ஒரு இடத்திலும் இருந்து கொண்டு இணையத் தளங்களினூடாகத் திருமணம் நடைபெறுவதும் இக்காலத்தில் நடைபெறுகின்றது.
திருமணம் என்பது இரு வீட்டு உறவினர்களும் இணைந்து நடத்துவது, ஆனால் இன்று இரு வீட்டு உறவுகளும் ஒன்றாகச் சந்திக்க முடிவதில்லை. இதனால் சமய ரீதியான பண்பாட்டுச் சடங்குகள் மழுங்கடிக்கப் படுகின்ற நிலை ஏற்படுகின்றன. தற்போது கன்னிக்கால், பொன்னுருக்கு போன்ற சடங்குகள் இன்றி பதிவுத் திருமண முறை மூலமே திருமணம் செய்யப் படுகின்றது. இலங்கையைப் பொறுத்த வரையில், திருமணத்தில் தாய், தந்தை, சகோதரர்கள் உறவு முறை அடிப்படையில் மட்டுப்படுத்தப் பட்ட எண்ணிக்கை யானோரே கலந்து கொள்ள முடியும்.
இறப்புச் சடங்கு என்று பார்கின்ற போது, இன்றைய கொரோனா வைரஸின் காரணமாகப் பல சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றது. அந்த வகையில், ஒவ்வொரு மதங்களின் அடிப்படை களாகவும் அந்தச் சடங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இறப்புச் சடங்குகள் குறித்து நோக்கின்ற போது, ஒவ்வொரு மதத் தவர்களுக்குமான தனிப்பட்ட சடங்கு முறைகள் காணப் படுகின்றன. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இறப்புச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாமை, அவ்வாறு கலந்து கொள்கின்ற போதும், மூன்றாவது நபர்களைப் போன்று நெருங்கிய உறவுகளிடம் சென்று வர வேண்டிய நிலை காணப் படுகின்றது. அத்தோடு இறந்தவர்கள் கொரோனா தொற்றினால் இறந்திருந்தால், மனைவி, பிள்ளைகள் கூட ஒரு முறை மட்டுமே அந்த உடலைப் பார்க்க அனுமதிக்கப் படுகின்றனர். உதாரணமாக கணவர் இறந்தபின் மனைவிக்குச் செய்யும் சடங்குகள் கூட செய்யப் படுவதில்லை. கணவனின் உடலை வைத்து எந்தவித சடங்கும் செய்யாது, தகனம் செய்த பின்னரே உறவுகள் எதுவும் இன்றி வீட்டில் இருப்பவர்கள் மூலமாகவே சடங்குகள் மேற் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. இது உறவுகளுக்கு இடையேயான இடை வெளியைக் குறைக்கின்றது. இதனால் குறித்த குடும்பத்தினர் உறவுகளுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது ள்ளதுடன், உள ரீதியான பாதிப்புகளையும் எதிர் கொள்கின்றனர்.
கொரோனா வைரசின் தாக்கம் சடங்குகளை மட்டுமல்லாது, சமய விழாக்களைக் கொண்டாடவதிலும் பல நேரான, எதிரான தாக்கங்களை எற்படுத்தியுள்ளது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் பௌத்தர்கள் மே மாத பூரணை தினத்தில் புத்தருடைய பிறப்பு, இறப்பு, பரிநிர்வாணம் ஆகியவற்றைக் கொண்டாடும் நிகழ்வுகள் நடை பெறும். இலங்கையில் இத்தினம் ‘வெசாக்’ என அழைக்கப் படுகின்றது. இத்தினத்தில் புத்தருடைய வரலாற்று நிகழ்வுகளுடன், வெசாக் கூடுகள், தோரணங்கள் மற்றும் பல நிகழ்வுகள் என கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக விதிக்கப் பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் முடக்க நிலை காரணமாக இம்முறை வெசாக் நிகழ்வானது நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட பாதக விளைவுகள் தொடர்பில் பார்க்கின்ற போது, மக்கள் விகாரைகள், பொது வெளிகளில் ஒன்று கூடி தங்களுடைய உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து இறையுணர்வை வெளிப்படுத்து வதற்கான வாய்ப்புகள் இம்முறை தடுக்கப் பட்டுள்ளன. மேலும் வெசாக் தினத்தை நம்பியிருக்கும் சில தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக வெசாக் கூடுகளைத் தயாரித்து விற்பனை செய்வோர், தோரணங்களை அமைப்போர் மற்றும் சமையல் தொழிலாளர்கள் தங்களுடைய தொழில்களை இழந்துள்ளனர். தானம்(உணவு) வழங்குவது நிறுத்தப் பட்டதால் இதனை நம்பியிருந்த யாசர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொது முடக்கத்தினால் இந்நிகழ்வை நிறுத்தியதன் நன்மைகள் தொடர்பாக பார்க்கின்ற போது, குடும்பங்களோடு அனைவரும் ஒன்றிணைந்து, வீடுகளிலேயே கொண்டாடு வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக தூர இடங்களில் பணி புரியும் அரச பணியாளர்கள், தனியார் துறையினருக்கு இந்த முடக்கம் ஒரு வரப்பிரசாத மாகவே அமைந்தது. மறுபுறத்தில் பொலிஸ், இராணுவம், சுகாதாரப் பணியாளர்கள், தங்களுடைய கட்டாயக் கடமை காரணமாக இந்நிகழ்வை மேற் கொள்ளவோ, நிகழ்வில் பங்கேற்கவோ முடியாத நிலையும் ஏற்பட்டது. தானங்களை வழங்கும் சில செல்வந்தர்கள் இம்முறை முடக்க நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், வறியவர்கள் போன்றோருக்கு உணவுப் பொதிகளையும், உதவிகளையும் வழங்கியுள்ளனர்.
குறிப்பாக நேர்த்திக்கடன் செலுத்துதல், பொங்கல் வைத்தல் என்பன இந்துக்களால் காலங் காலமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய வழக்கம் ஆகும். அந்த வகையில், இந்த வருடம் வைகாசி விசாகப் பொங்கலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தவோ, ஆலயத்தில் வழிபாடுகளை மேற் கொள்ளவோ மக்கள் எவரும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் பொதுவாக மக்கள் தமது மன ஆறுதல், நிம்மதி, என்பவற்றுக்காகத் தான் இறை நம்பிக்கையுடன் ஆலயத்திற்கு செல்கின்றனர். கொரோனா வைரஸ் பெருந் தொற்று காலப் பகுதியில் பொது மக்கள் அச்ச நிலையில் காணப் படுகின்றனர். அவர்களை ஆலயத்தினுள் அனுமதிக்காமல் தடை விதிப்பது மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றது. இதனால் அவர்கள் நீண்டகால மற்றும் நாட்பட்ட நோயினால் மேலும் பாதிக்கப் படுகின்றனர்.
எவ்வாறாயினும் மட்டுப் படுத்திய மக்களுடன் வருடாந்த வைகாசி விசாகப் பொங்கலை நடாத்தியமையானது, கொரோனாத் தொற்றிலிருந்து அதிகளவா னோரைப் பாதுகாப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.
இதே போல ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்குச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் இஸ்லாமியர்கள் வழிபாட்டுத் தலங்களுடன் அதிகளவான தொடர்பைக் கொண்டிருப்பர். 5 நேரத் தொழுகையின் போது பள்ளி வாசலுக்கு வராதவர்கள் கூட இந்த ரமலான் மாத தொழுகையை தவற விடாமல் மேற் கொள்வர். நாள் முழுவதும் நோன்பிருந்து, மாலைப் பொழுதில் பள்ளி வாசலில் கூட்டு தொழுகைக்கு பின் அனைவரும் ஒன்றிணைந்து நோன்புக் கஞ்சியைப் பருகி, தங்களது நோன்பைத் திறப்பது வழமை. ஆனால் இந்த உலகளாவிய பெருந் தொற்றான கொரோனா வைரஸ் அவர்களின் வழிபாட்டு முறையில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த ரமலான் மாதத்தை அனுட்டிப்பது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த வகையில் தொழுகைக்காக பள்ளி வாசலுக்குச் செல்வதைத் தவிர்த்தல், மிகவும் வயதான முதியவர்கள், இதய நோயாளிகள், மூச்சுத்திணறல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், எளிதாக கொரோனாத் தொற்று ஏற்படலாம் என்று அவர்களை நோன்பைத் தவிர்க்குமாறும் கூறியிருந்தது. இதன் மூலம் நேரான தாக்கத்தைவிட எதிரான தாக்கமே அதிகளவில் காணப்பட்டது. முழுக்க முழுக்க பள்ளிவாசலுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடிய அந்த நோன்புக் காலத்தில் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதற்காக பள்ளி வாசல்கள் திறக்கப் படவில்லை, பள்ளி வாசல்களில் எந்தவித வழிபாடுகளும் நடை பெறவில்லை, கூட்டுத் தொழுகையை மேற் கொள்ளவும் முடிய வில்லை.
சொந்தங்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து மாதம் முழுவதும் கொண்டாட வேண்டிய ரமலானை எந்தவித உற்சாகமும் இன்றி தனியாகக் கடக்க வேண்டிய நிலையை இந்த கொரோனா ஏற்படுத்தியமையால், தமக்கும் சமயத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டமை வருத்தமளிப்பதாக முஸ்லிம் மக்கள் தெரிவித்தனர்.
எனினும் இதில் நேரான தாக்கங்களும் காணப்பட்டன. தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதுடன் பெண்கள் மத்தியில் இந்த ரம்ழான் பண்டிகை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆண்கள் மட்டும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் ஈடுபட, பெண்களும் குழந்தைகளும் வீடுகளிலேயே நோன்பிருப்பர். ஆனால் கொரோனா கால நோன்பானது ஆண்களை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடு வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது.
இந்தத் தொற்று நோய் பொருளாதாரம், சமூக வாழ்க்கை மற்றும் அரசியல்கட்சி ஆகியவற்றுக்கு ஏற்படுத்திய விளைவுகளைத் தவிர, மத வழிபாடுகளை பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது. சமூக விலகல், வெகுஜனக் கூட்டங்கள் தடை, மற்றும் அனைத்து மத இடங்களையும் மூடுவது போன்றவற்றுக்கு உள்ளூர் அரசாங்கம் வழங்கிய உடனடி விதிமுறைகள் அன்றாட மத வாழ்க்கையில் அனைத்து அம்சங்களையும் சீர்குலைத்துள்ளது. மதத்தின் மீதான எதிர்மறையான தாக்கம் பரந்த அளவில் உள்ளது. எல்லா தேவாலயங்களும் மூடப்பட்டதிலிருந்து அனைத்து மத சேவைகளும் இடை நிறுத்தப்பட்டு, முழுக்காட்டுதல். புனித ஒற்றுமை அல்லது உறுதிப்படுத்தல், திருமணங்கள் அல்லது இறுதிச் சடங்குகள் வரை; இந்த ஆண்டு அனைத்து பிரபலமான திருச்சபை விருந்துகளையும் நிறுத்துவதற்கான கடுமையான முடிவும் எடுக்கப் பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியாக ஏற்பட்ட கொரோனா பெருந் தொற்று நிலமையானது, மக்களுடைய நல்வாழ்வைப் பாதித்ததுடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியான பாதகமான விளைவுகளை அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கடந்த ஓராண்டாக தொற்று நோய் பரவியமை காரணமாக பல்லின மக்கள் தங்களுடைய கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பின்பற்றுவதற்கான தடையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு – பயணத்தடை காலப்பகுதிகளில் மக்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப் பட்டதுடன், மத நிகழ்வுகளின் மூலமாக மனங்களில் மகிழ்ச்சியையும், மாற்றத்தினையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன. மக்கள் திருவிழாக் காலங்களில் தங்களுடைய உறவுகளுடன் கழிக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணங்கள், கொரோனா அச்சத்தினால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனங்களில் மன அழுத்தம் ஏற்பட முடக்க நிலையும் ஓர் காரணமாக அமைந்துள்ளது. அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு கட்டுப் பட்டு, சிறிது காலம் பொறுமையோடு எங்களுடைய மத விழாக்களை நிறுத்தி, முடிந்தளவு வீட்டுக்குள்ளேயே குடும்ப அங்கத்தவர்களுடன் வழிபாடுகளை மேற்கொண்டு, எங்களுடைய நாட்டை வழமை நிலைக்கு மீட்டு எடுப்பது என்பது தற்போதய சூழ்நிலையில் எங்களுடைய கடமை ஆகும்.
ச.சந்தோஷ், கே.விகாஷ், வே.விதுஜா, தெ.வஜிதா, கௌ.சாரங்கி, தி.டிசாந்தி
நான்காம் வருடம், முதலாம் அரையாண்டு மாணவர்கள்
சமூகவியல் துறை
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.