திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பது மன வருத்தத்திற்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், “அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபனின் நினைவேந்தல் ஒரு உணர்வுபூர்வமான விடயமாகும்.
ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அந்நிகழ்வு அரசியல் மயமாக்கப்பட்டு, ஒரு போட்டித் தன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிற இடங்களில் எவ்வித சிக்கலுமின்றி நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமாக நடைபெற்று முடிந்த போதிலும், நல்லூர் பகுதியில் மட்டும் அரசியல் சாயம் பூசப்பட்டு குழப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு அரசாங்கம் எந்தவிதத் தடைகளை அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை என்றும் மாறாக, அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக இத்தகைய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் இது தொடர்பாக மாநகர சபை பூரணமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



