திலீபனின் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்டமைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மாணவர் ஒன்றியம் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
நேற்று காலை 6.30 அளவில், திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை காவல்துறையினர் அத்துமீறி அகற்றி எடுத்துச் சென்றுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் நினைவேந்தல் உள்ளிட்ட கூட்டுரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நேரடி தாக்குதலாகவே இந்த நடவடிக்கையை தாம் கருதுவதாகவும் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நினைவேந்தல் உரிமையை தொடர்ந்து மறுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அகற்றப்பட்ட திலீபனின் சிலை, மீண்டும் அதே இடத்தில் முறையாக நிறுவப்படும் வரை, தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் போராட்டங்கள் தொடரும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை தொடர்பில் அதிகாரிகள் நியாயமான முறையில் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று (28) மாலை போராட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன.
பிரதானமாக, நல்லூரில் தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபிக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சிலை மீள வைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



