90களில் தமிழ் மாணவர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் சாட்சி நாகர்கோவில் : தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் 1990களின் வாழ்க்கையில், வானத்தைப் பார்த்தாலே குழந்தைகள் அஞ்சிய ஒரு காலமாக அது நினைவில் நிற்கிறது. விமானங்களின் இரைச்சல் கேட்டால் பாடசாலைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் பிள்ளைகள் ஓடினர். வயல்வெளி, சந்தை, ஆலயம், மருத்துவமனை, பாடசாலை என மக்கள் தஞ்சமடையும் இடங்கள்கூட அரசின் தாக்குதல்களுக்கு இலக்குகளாகின. குறிப்பாக, 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீவிரமடைந்த இராணுவ நடவடிக்கைகளுடன் வான்வழித் தாக்குதல்களும் அதிகரித்தன. நாவலி தேவாலயத்தின் மீதான தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குள், நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் மீது குண்டுகள் விழுந்தன. அத்தாக்குதல் தமிழ் மாணவர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அழியாத காயமாகப் பதிந்துவிட்டது.
அன்று என்ன நடந்தது?
1995 செப்டெம்பர் 22. நாகர்கோவில் மகா வித்தியாலயம் வழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்தது. மதிய நேரம். பாடசாலை வளாகத்தில் மாணவர்கள் இருந்தனர். வானில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் தென்பட்டன. விமானங்களின் அசைவைக் கண்ட மாணவர்கள் பதற்ற மடைந்தனர். சிலர் பாதுகாப்புக்காக மரத்தின் கீழ் பதுங்கினர். நண்பகல் சுமார் 12.45 மணியளவில் குண்டொன்று விழுந்து வெடித்ததில் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; பெருமளவானோர் காயமடைந்தனர். இதில் 26 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக முறையான ஆவணங்கள் பலவற்றில் பதிவாகியுள்ளன. மனித உரிமை ஆய்வுகளிலும் அந்தத் தாக்குதல் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய பொதுமக்கள் உயிரிழப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட 26 மாணவர்கள் எங்கள் வரலாற்றில் இனப்படுகொலையின் சுவடுகளாகத் தரித்து நிற்கின்றனர். பத்து வயது, பதினொரு வயது, பன்னிர ண்டு வயது, பதின்மூன்று வயது என சிறுவர்களும் சிறுமிகளும் அந்தப் பட்டியலில் இருந்தனர். ஆறு வயதுடைய சாந்தகுமார் என்ற குழந்தையும் கொல்லப்பட்ட மாணவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார். சிறுவர்கள் போரின் அரசியலைத் தீர்மானிப்பவர்களுமல்ல, ஆயுதம் ஏந்தியவர்களுமல்ல; அவர்கள் படிப்பதற்காகப் பாடசாலைக் குச் சென்ற குழந்தைகள் வானத்தைப் பார்த்து வாழ்ந்த ஒரு தலைமுறைஉலகமெங்கும் வானம் என்பது கனவுகளின் வெளியாக இருக்கிறது. ஆனால் ஈழக் குழந்தைகளின் வாழ்வில் அப்படியில்லை. 90களில் வடக்கு, கிழக்கின் பல கிராமங்க ளில் வானம் என்பது வெறும் இயற்கையின் வெளியல்ல. அது அச்சத்தைப் பொழியும் வெளி. விமானங் களின் இரைச்சல் கேட்டவுடன் குழந்தைகள் தாயின் மடியில் ஒளிந்துகொள்வதும், மக்கள் பதுங்குகுழிகளை நோக்கி ஓடுவதும், பாடசாலைகளில் வகுப்புகள் திடீரென நிறுத்தப் படுவதும்தான் அன்றைய அசாதாரண வாழ்க்கையாகியது.
1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரச படைகள் பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தபோது, விமானத் தாக்குதல்களும் கடுமையான எறிகணைத் தாக்கு தல்களும் தொடர்ந்தன. ஜூலை 9ஆம் திகதி நாவலி புனித பேதுரு தேவாலயத்திலும் அருகிலிருந்த ஆலயத்திலும் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீதான வான்வழித் தாக்குதலில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆனால் 147 பேர் இதில் படுகொலை செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன.
நாவலியில் நடந்த கொடூரத்துக்குப் பின்னரும் வான்வழித் தாக்குதல்கள் இலங்கை அரசினால் நிறுத்தப்படவில்லை. செப்டெம்பர் 22ஆம் திகதி நாகர் கோவில் பாடசாலை தாக்கப்பட்டது. அதே நாளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முந்தைய இரவே போர் தொடர்பான செய்திகளுக்கு அரசாங்கம் ஊடகத் தணிக்கையை அமுல்படுத்தியிருந்ததாக மனித உரிமை ஆவணங்கள் பதிவு செய்கின்றன. நாகர்கோவில் தாக்குதல் குறித்த செய்திகளும் அந்தத் தணிக்கையின் கீழ் சென்றன.
போரால் சிதறிய கல்வி
ஒரு இனத்தின் மீது போர் நடத்தப்படும்போது முதலில் பாதிக்கப்படுவது அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை. அடுத்துப் பாதிக்கப்படுவது அவர்களின் கல்வி. பள்ளிகள் மூடப்படுவதும், ஆசிரியர்கள் இடம்பெயர்வதும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களை விட்டுவிட்டு ஓடுவதும், பரீட்சைகள் தடைபடுவதுமாக ஒரு தலைமுறையின் கல்விப் பயணம் இந்த இனவழிப்புப் போரினால் துண்டிக்கப்படுகிறது.
நாகர்கோவில் தாக்குதலில் 150 மாணவர்கள் காயமடைந் ததாக சர்வதேச ஆவணங்களில் பதிவாகியுள் ளது. அவர்களில் பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர். பிரெஞ்சு மருத்துவ அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் (Médecins Sans Frontières – MSF) உடன் பணியாற்றிய மருத்துவர்கள், பருத்தித்துறை வைத்தியசாலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை யளித்ததுடன், பலருக்கு உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அப்போது பதிவு செய்தனர்.
நீதியின்றித் தொடர்கிற காலம்
நாகர்கோவில் படுகொலை இடம்பெற்று மூன்று தசாப் தங்களுக்கும் மேலாகியும், அந்தப் படுகொலைக்கு நீதி இன்னமும் வழங்கப்படவில்லை. பாடசாலையில் உயிரிழந்த மாணவர்களின் பெயர்கள் இன்று நினைவேந்தல்களில் மாத்திரம் வாசிக்கப்படுகின்றன. இதுவே எல்லா நினைவேந்தல்களிலும் நிகழ்கிறது. அவர்களின் பெயர் களைச் சொல்லும் ஒவ்வொரு தருணமும், போரில் அழிக் கப்பட்ட ஒரு தலைமுறையின் சிறு பகுதியை மீண்டும் வரலாற்றுக்குள் கொண்டு வருகிறது. அத்துடன், இவ்வரலாறு போரின்போது ஶ்ரீலங்கா அரசு குழந்தைகள் மீது நிகழ்த்திய பாரிய இனவழிப்பை நினைவுபடுத்துகிறது.
இதேவேளை, பாடசாலைகள் பாதுகாப்பான இடங்க ளாக இருக்க வேண்டும் என்ற உலகளாவிய மனிதாபிமானக் கொள்கையை ஶ்ரீலங்கா அரசு மீறியமையும் அம்பலமாகிறது. இவற்றை அன்றைய நாட்களில் உலகம் தடுத்திருந்தால், பின்னாளில் செஞ்சோலைப் படுகொலை போன்ற படுகொலைகளைத் தடுத்திருக்க முடியும். தமிழ் மாணவர்கள் மீது ஶ்ரீலங்கா அரசு காலங்காலமாக இனவழிப்பை நிகழ்த்தி வருகிறது. பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் கடந்த முப்பதாண்டுப் போரில் அழிக்கப்பட்டுள்ளனர்.
தேசத்தை ஆள வேண்டிய பிள்ளைகள்
நாகர்கோவில் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட குழந்தை கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர்களு க்கு முப்பதுகளையோ நாற்பதுகளையோ கடந்து வாழ்ந் திருப்பார்கள். சிலர் ஆசிரியர்களாகியிருப்பார்கள். சிலர் மருத்துவர்களாகியிருப்பார்கள். சிலர் விவசாயிகளாகவோ, எழுத்தாளர்களாகவோ, தொழிலாளர்களாகவோ, குடும்பத் தலைவர்களாகவோ இருந்திருப்பார்கள். போரில் குழந்தை களும் சிறுவர்களும் கொல்லப்படுகையில், ஒரு தேசத்தின் ஆளுமை மிக்க மனித வளம் அழிக்கப்படுகிறது என்பதே உண்மை. அதுதான் போரின் மிகப் பெரிய அழிவுமாகும். அப்படிப் பார்க்கையில், எங்கள் தேசத்தில் இன வழிப்புப் போரால் அழிக்கப்பட்ட குழந்தைகள் இருந்திருக் கவில்லை என்றால், இன்று அவர்கள் எங்கள் தேசத்தில் வாழ்பவர்களாகவும் ஆள்பவர்களாகவும் இருந்திருப்பார்கள். இப்படுகொலையின் நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றது. அப்பிள்ளைகளின் படங்க ளைப் போராளிகள் அன்றைய காலத்தில் ஆவணப்படுத்தியுள் ளனர். உண்மையில், இத்தகைய அநீதிகள் எதிர்காலத்தில் மீண்டும் எவருக்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே ஈழத் தமிழினம் இன்று இப்படுகொலை குறித்துப் பேசுவதற்கும் நினைவேந்தல் செய்வதற்குமான காரணமாகும். அப்படி யெனில், இத்தகைய அநீதிகளுக்கு பன்னாட்டுச் சமூகம் நீதி வழங்க வேண்டும். அதுவே இதற்குரிய தீர்வும் அணுகு முறையுமாகும்.