வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளவது குறித்து அரசாங்கம் தகவல்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தின் வேண்டுகோளுக்கு அமைய புலம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச அமைப்பு,  வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை நிகழ்நிலை ஊடாக  விரைவாக மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை (29) வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகாெண்டிருந்த அந்த அமைப்பின் இலங்கை பிரதானி கிரிஸ்டின் பார்கோ தெரிவிக்கையில்,

இந்த வருடம் முடிவடைவதற்கு முன்னர் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் தெரிவுசெய்யப்படும் 20 தூதரக காரியாலயங்கள் இந்த நிகழ்நிலை நிகழ்ச்சித்திட்டத்துக்கு உள்வாங்கிக்கொள்வதுடன் இதற்கான அனைத்து வளங்களும் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பாரிய பிரச்சினையாக இருப்பது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக வீணடிக்கப்படும் அதிக நேரத்துக்கு தீர்வாக, உத்தேச நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணப்ப படிவம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்புவதும் விரல் அடையாளம் பெறுவதும் தூதரக காரியாலயங்களிலேயே மேற்கொள்ளப்படும்.

முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 20 தூதரக காரியங்களில் இந்த நிகழ்நிலை முறைமை அறிமுகப்படுத்தல் முடிவுற்ற பின்னர், அடுத்துவரும் காலங்களில் ஏனைய தூதரக காரியாலயங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்துமாறு அமைச்சர் விஜித்த ஹேரத் கிரிஸ்டின் பார்கோ விடம் இதன்போது கோரிக்கைவிடுத்துள்ளார்.  புலம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச அமைப்பின் பூரண ஒத்துழைப்பை அதற்காக வழங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.