தமிழர்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்களை காலங்காலமாக புரிந்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, வணிகம் என்பவற்றுக்கு அப்பால் பல்வேறுபட்ட கைத்தொழிகளிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இனஅடக்குமுறை கூர்மையடைவதற்கு முன்னான காலப்பகுதியில் தமிழரின் பொருண்மிய நிலைமை ஒரு செழிப்பான நிலையில் காணப்பட்டதென்றே கூறலாம்.
சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் தமிழர்களின் பொருண்மியம் பறிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்ததே வரலாறாக உள்ளது. இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக தமிழரின் பொருண்மிய பலத்தை அழிக்கும் நடவடிக்கைகளும் சிங்கள அரசுகளால் நன்கு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளன. இந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த வகையில், தமிழ் மக்கள் செய்து வந்த பல தொழில்கள் மிக மோசமாக நலிவடைந்து காணப்படுகின்றன. பல அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இவ்வாறான தொழில்களில் ஒன்றுதான் தங்கநகை வடிவமைப்பு.
தமிழர்களில் பொற்கொல்லர் எனப்படும் தொழில் ரீதியான சமூக அமைப்பொன்று தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் நிலைபெற்று வாழ்ந்து வருகிறது.
பொற்கொல்லர்கள் எமது தாயக பகுதிகளில் மட்டுமன்றி இலங்கையில் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் இருக்கின்றனர்.
எனினும் எமது வடகிழக்கு தாயகப் பகுதிகளில் பூர்வீகமாக வாழும் பொற்கொல்லர் சமூகம் தமக்கென தனித்துவமான கிராமங்களை கொண்டிருப்பது ஒரு சிறப்பாகும்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தனித்துவமான அடையாளமாக ‘விஸ்வகர்ம மக்கள்’ என வரலாற்று ரீதியாக அழைக்கப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியகல்லாறு, ஓந்தாச்சிமடம், பெரியபோரதீவு, முனைத்தீவு, மட்டக்களப்பு -கோட்டைமுனை, ஏறாவூர், சித்தாண்டி போன்ற பகுதிகளில் வாழும் இந்த விஸ்வகுல மக்களின் வாழ்க்கையும் மக்களின் அடையாளமும் இன்று பல சவால்களை எதிர்நோக்கி நிற்கிறது.
இப்பகுதிகளை சேர்ந்த 4000 குடும்பங்கள் இந்த தொழிலையே செய்து வருகின்றன. பட்டறை என்னும் தொழில் நிலையங்களை வீடுகளில் அமைத்தது வீடுகளில் வீடுகளில் இருந்தவாறே நகைவடிவமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரம்பரையாக தமது தொழிலை மேற்கொண்டு வரும் இவர்கள், இன்று தொழிலை மட்டுமன்றி தமது அடையாளங்களையும் இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.
இராவணன் காலத்தில் இருந்தே இந்த நாட்டில் வேரூன்றியவர்களாக இந்த விஸ்வகுல மக்கள் இருந்து வருகின்றனர். ‘பஞ்சகம்மாளர்கள்’ என்றும் கூறப்படுவர்களின் வாழ்க்கையென்பது அதளபாதாளத்தில் நிற்பதையும் காணமுடிகின்றது.
ஓரளவு வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்கி சமூகத்தில் வேறு அடையாளங்களை பெற்றுச் சென்ற நிலையில், மிகவும் கஸ்டமான நிலையில் தமது பரம்பரை தொழிலையே மேற்கொண்டு வந்தவர்கள் இன்று அந்த தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக தமது வாழ்வு கேள்விக்குறியாகி நிற்பதை காண்கிறார்கள்.
தமது எதிர்காலமே நகைத் தொழில் என்றிருந்த குடும்பங்கள், கல்வி நடவடிக்கைகளில் நாட்டம் காட்டாமல் பரம்பரைத் தொழில் ரீதியான நாட்டம் இருந்ததனால் இன்று பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
இன்று நகை உற்பத்தி நவீன இயந்திரங்கள் ஊடாகவும் வெளிநாட்டில் இருந்து வகைவகையாக இறக்குமதி செய்யப்படுவதன் ஊடாகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக காலங்காலமாக பாரம்பரியமாக நகை உற்பத்தியில் ஈடுபடும் மக்களின் வாழ்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இலங்கையினை பொறுத்தவரையில் இலங்கை இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நவீன நகை வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி நிலையங்கள் சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் அமைக்கப்பட்டு சிங்கள மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் பாரம்பரியமாக இந்த தொழிலைச் செய்துவரும் மக்கள் அதிகளவாக உள்ள வடகிழக்கு பகுதிகள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றன.
உண்மையிலேயே கடந்த கால போரில் இவர்கள் இழந்தவை ஏராளம். பொருண்மிய ரீதியில் மட்டுமன்றி போரின் காரணமாக பல்வேறு பாதிப்புகளையும் எதிர்கொண்ட மக்களாக இவர்கள் உள்ளனர்.
வடகிழக்கில் பொற்தொழிலாளர்கள் காலங்காலமாக பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகின்றார்கள் என்பது வெளிப்படையானதாக உள்ள போதிலும், இப்பகுதிகளில் தொழில்நுட்ப கல்லூரிகளில் கூட அதற்கான பயிற்சி திட்டங்களை முன்னெடுக்கப்படாமை மிகவும் வருத்தத்திற்குரியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொற்கொல்லர்கள் இன்று தமது தொழில்களை இழந்து கூலிவேலைகளுக்கு செல்லும் நிலையேற்பட்டுள்ளது. இந்த நகைத்தொழில் தொடர்பிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு நவீன இயந்திரங்கள் கொண்டு நகைகளை வடிவமைக்கும் தொழிற்சாலைகளை இப்பகுதிகளில் நிறுவ இந்த இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கையெடுத்திருந்தால், இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதை தவிர்த்திருக்க முடியும்.
இன்று இந்த பொற்கொல்லர்கள் தொழில் இல்லாமல் அவர்களும் அவர்களினால் பயிற்சி பெற்றவர்களும் இன்று நிர்க்கதியான நிலையில் உள்ளதை காணமுடிகின்றது. இவர்கள் தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லை. இதனை விட்டால் வேறு வேலைகளை தேடிச்சென்று பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நிர்க்கதியாகியுள்ள சமூகமாக இந்த சமூகம் காணப்படுகின்றது.
இந்த சமூகத்தினுடைய பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்த தமிழர் சமூகம் தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்.