ஆபிரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களையும், புலானாய்வுத் தகவல்களையும் பிரான்ஸ் வழங்கி வருகின்றது. அதனை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என மாலி அரசு ஐ.நாவை கேட்டுள்ளது.
இந்த வருடத்தில் 50 தடவைகளுக்கு மேல் பிரான்ஸ் நாட்டின் உளவு விமானங்கள், உலங்குவானூர்திகள் மற்றும் தாக்குதல் விமானங்கள் மாலியின் வான்பரப்பில் அத்துமீறிப் பறந்து தகவல்களை திரட்டி பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளன. சஹில் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸ் அரசு வானில் இருந்து ஆயுதப் பொதிகளை போட்டு வருகின்றது. இதனை தடுப்பதற்கு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மாலியின் வெளிவிவகார அமைச்சர் அப்தொலாஜி டியோப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது. ஜிகாத் ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு பயணம் செய்வதற்கான உலங்குவானூர்தி வசதியையும் பிரான்ஸ் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு பிரான்ஸ் தனது படைகளை மாலிக்கு அனுப்பியிருந்ததுடன், அங்குள்ள ஆயுதக்குழுக்களுடனான மோதல்களுக்கு பல பில்லியன் டொலர்களையும் செலவிட்டிருந்தது. எனினும் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட இராணுவப்புரட்சியை தொடர்ந்து புதிய அரசு பிரான்ஸ் படையினரை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பிரான்ஸ் இராணுவத்தின் இறுதிப் படைப்பரிவு இந்த வாரம் மாலியை விட்டு வெளியேறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.