உணவு பாதுகாப்பின்மை : கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்னமும் உயர்மட்டத்தில் உள்ளது- ஐ.நா

இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு பயிர் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐநாவின்  அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையில்தற்போது 3.9 மில்லியன் மக்கள் ( 17 வீதமானவர்கள்) மிதமான  மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள் கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் இது 40 வீதமாக காணப்பட்டது என தெரிவித்துள்ளன.

கடந்தவருடம் 60,000 மக்கள் மிகவும் மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்தனர் தற்போது அது பத்தாயிரமாக குறைவடைந்துள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவி;த்துள்ளன.

உணவுநுகர்வில்  ஏற்பட்ட முன்னேற்றமே உணவுபாதுகாப்பில் ஏறபட்ட முன்னேற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ள ஐநாவின் அமைப்புகள் உணவுவிலைகள் குறைவடைந்துள்ளமையும்,அறுவடை காலத்தில் விவசாய சமூகத்தினர் மத்தியில் காணப்பட்ட முன்னேற்றமும் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

இந்த சாதகமான மாற்றம் தென்படுகின்ற போதிலும் கிளிநொச்சி  நுவரேலியா மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலேயே  அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.