வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டில் வலிந்து அல்லது பலவந்த காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பன முன்னெடுக்கப்படும்.
அதற்கமைய இவ்வருடமும் இன்றைய தினம் (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பட்டில் ‘நீதிக்கான நீள்பயணம்’ எனும் மகுடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தமிழ்த் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு யாழ்ப்பாணம், தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ளது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவிருப்பதுடன் விசேடமாக வலிந்து அல்லது பலவந்த காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.



