வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலத்தை, முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை பதில் நீதிவான் விஜயராணி உருத்திரேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சந்திரகுமார் சந்திரபாலன் என்பவர், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரது மனைவி அவருக்கு உணவு வழங்கிய பின்னர், அவருக்கு நெஞ்சுக்குத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக ஊரணி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும், இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறையினரின் தாக்குதலே காரணமாக இருக்கலாம் என்றும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, பருத்தித்துறை பதில் நீதிவான் விசாரணை மேற்கொண்டு, சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி, முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



