யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்றவிசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி கலும் பண்டாரா தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். பிரதான சூத்திரதாரி சுன்னாகம் பகுதியில் நேற்று முன்தினம் ஜந்து லட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தநிலையில், கொழும்பில் வைத்து இருவரும் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அண்மையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று பொலிஸ் புலனாய்வு பிரிவு எனத் தெரிவித்து 30 லட்சம் ரூபா பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



