ராஜபக்சக்களின் வீழ்ச்சியும் ரணிலின் திடீர் எழுச்சியும்! | அகிலன்

ரணிலின் திடீர் எழுச்சிஅகிலன்

 ரணிலின் திடீர் எழுச்சி

இலங்கை அரசியலில் ஒரு திடீர்த்திருப்பமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இது எதிர்பாராத ஒரு திடீர்த்திருப்பம் எனச் சொல்வதற்கு காரணம் உள்ளது.

இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி எனச் சொல்லப்படும் ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.  ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இரண்டு தசாப்த காலமாக தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த ஐ.தே.க. சந்தித்த தோல்விகளில் உச்சம் இது. ஒரு ஆசனத்தை கூட கட்சி பெற்றுக் கொள்ளாத நிலையில், தேசியப் பட்டியல் மூலமாக கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு ஆசனத்தின் மூலமாக பாராளுமன்றம் சென்றவர்தான் ரணில்! பின்கதவால் வந்தவர் என்ற விமர்சனமும் அதனால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், எதனைப்பற்றியும் கவலைப்படாதவர் ரணில்!

தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்பதில் சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், சில மாதங்கள் மௌனமாக இருந்த பின்னர் அந்தப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார் ரணில். தேர்தல் படுதோல்வியின் பின் உடனடியாகவே பாராளுமன்றம் சென்றால் விமர்சனங் களுக்குள்ளாக வேண்டியிருக்கும் என்பது ரணிலுக்குத் தெரிந்தேயிருந்தது.

அதனால்தான் தனக்கான நேரம் வரும்வரை அவர் காத்திருந்தார். அவரது முக்கியத்துவம் உணரப்பட்ட ஒரு நிலையிலேயே அவர் எம்.பி.யானார். அதனால் அவர் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த போது வரவேற்பு கிடைத்தது.

தருணத்துக்காக காத்திருந்த ரணில்

இப்போதும் தனக்கான தருணத்துக்காக அவர் காத்திருந்து பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து அரசியல் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் தருணத்தில் அவர் இந்தப் பதவியைப் பொறுப்பேற்றிருப்பதையிட்டு முரண்பாடான பிரதிபலிப்புக்களை காணமுடிகின்றது.

தான் சார்ந்த கட்சியின் சார்பில் ஒரேயொரு எம்.பி.யாக பாராளுமன்றம் வந்த அவர், பிரதமராக நியமிக்கப்பட்டதை ஏற்கமுடியாது என்ற விமர்சனங்கள் எதிரணியினரால் முன்வைக்கப்படுகின்றது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என விமர்சிக்கப்படுகின்றது. இதனைவிட ராஜபக்சக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நியமனம் இடம்பெற்றிருக்கின்றது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. நல்லாட்சி எனச் சொல்லப்படும் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சக்களைப் பாதுகாத்தவர் என்ற குற்றச்சாட்டும் ரணில் மீது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்தானியாவில் வின்சன் சேர்ச்சில் பிரதமராக நியமிக்கப்பட்டதுடன் தன்னுடைய நியமனத்தை ஒப்பிட்டு இதற்குப் பதிலளித்திருக்கின்றார் ரணில். “நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான்கு எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே வைத்திருந்த வின்சன் சேர்ச்சில் பிரித்தானியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார். நெருக்கடியான காலகட்டத்தில் இவ்வாறான நியமனங்கள் தவிர்க்க முடியாதவைதான். அதுபோல இலங்கை என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், நான் பிரதமராக பதவியேற்றிருக்கிறேன்” என தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளித்த ரணில் கூறியிருக்கின்றார்.

உடன் வெளிப்பட்ட முக்கிய மாற்றங்கள்

ரணில் மீது எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவரது நியமனம் ஆரோக்கியமான சில சமிஞ்ஞைகளை உடனடியாகக் காட்டியிருகிறது. தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு சென்ற டொலரின் பெறுமதி முதல் தடவையாக ரணில் பதவியேற்ற மறுநாள் குறைவடைந்திருக்கின்றது. பங்குச் சந்தையும் ஒரே நாளில் நான்கு வீதத்தால் உயர்வடைந்திருக்கின்றது. இவை வர்த்தக – நிதித்துறை வட்டாரங்களில் அவரது நியமனம் நம்பிக்கையை ஏற்படுத்தி யிருக்கின்றது என்பதைப் பிரதிபலிக்கின்றது.

அரசியல் ரீதியாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. ஒரேயொரு உறுப்பினராக பாராளுமன்றம் சென்றவர் என்ற முறையில் அரசியல் ரீதியான சில நெருக்கடிகளை அவர் எதிர்கொண்டாலும், வர்த்தக நிதித்துறை வட்டாரங்களில் அவரது நியமனம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதற்கு காரணம் உள்ளது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களுடன் மட்டுமன்றி, இலங்கைக்கு பெருமளவு நிதி உதவிகளைச் செய்யக் கூடிய அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவர் ரணில். அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என அவர் வர்ணிக்கப்படுவதும் இதனால்தான்.

இன்று இலங்கைக்குத் தேவைப்படுவது அவசர நிதி உதவிகள்தான். கடன்களை மேலும் பெற்று வட்டியைக்கூட கட்ட முடியாத நிலைக்குச் செல்வதைவிட மானியமாக உதவிகளைப் பெறுவதுதான் உடனடித் தேவை. இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது பணியும் அதுதான்.

முதலில் எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தடங்கலின்றிக் கிடைக்கச் செய்யவேண்டும். மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கச் செய்யக்கூடிய வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும். இதுதான் ரணில் முன்பாகவுள்ள முதலாவது சவால். அவருக்குள்ள சர்வதேசத் தொடர்புகள், அனுபவங்கள் மூலமாக இந்தச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒருவராகத்தான் ரணில் உள்ளார் என பொருளாதார நிபுணர்கள் பலரும் நம்பிக்கை வெளியிடுகின்றார்கள்.

அதன் பின்னர் இரண்டாவது கட்டத்தில்தான் பொருளாதார மறுசீரமைப்பு, நீண்டகால பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களையிட்டுப் பேச முடியும். அது பெரும்பாலும் புதிய பொதுத் தேர்தல் நடைபெற்று அடுத்ததாக வரப்போகும் ஆட்சிக்காலத்தில் நடக்கவேண்டிய பணியாகத்தான் இருக்கும்.

போராட்டக்காரர்களின் மன நிலை என்ன?

‘கோட்டா கோ ஹோம்’ என போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் ரணிலின் நியமனத்தை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்ற ஒரு கேள்வி முக்கியமாக எழுகின்றது. பிரதமர் பதவியை ரணில் ஏற்பதற்கு முன்னதாகவே ரணிலுக்கு எதிரான போராட்டம் ஒன்றையும் இளைஞர்கள் ஆரம்பித்திருந்தார்கள். அவரது இல்லத்தின் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்ற போது, அவர்களைச் சந்தித்த ரணில், ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு வாருங்கள் பேசுவோம் என அவர்களை அனுப்பி வைத்தார்.

 ரணிலின் திடீர் எழுச்சிபிரதமராக ரணில் பதவியேற்ற பின்னர் பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரிமாளிகை முன்பாக மீண்டும் ஒரு போராட்டம் ஆரம்பமானது. அது ‘நோ டீல் கம’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது – ராஜபக்சக்களுடன் டீல் எதற்கும் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்துவது தான் இதன் நோக்கம் எனச் சொல்லப் படுகின்றது.

அதேவேளையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கைகளை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் புதிய பிரதமரிடம் கையளித்துள்ளனர். இது புதிய பிரதமரை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற கருத்தைத்தான் வெளிப்படுத்துகின்றது.

8 கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய பிரதமர் மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பதவி விலகவேண்டும்; 18 மாதங்களிற்கான இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும்; அதில் 15 அமைச்சர்கள் மாத்திரம் இடம்பெற்றிருக்க வேண்டும்; 20வது திருத்தத்தை நீக்கிவிட்டு 21 வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்; பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக நிவாரண வரவு செலவுதிட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்; இதற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை கணக்காய்வு செய்யவேண்டும் என்பது உட்பட 8 கோரிக்கைகளைஅவர்கள் முன்வைத்துள்ளனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி?

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் கைவிடத் தயாராகவில்லை. இந்தப் போராட்டம் தீவிரமடைந்து கோட்டாபய ராஜினாமா செய்யும் நிர்ப்பந்தம் ஒன்று ஏற்பட்டால், இலங்கையின் அரசியலமைப்பின்படி ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்பார். குறுகிய காலத்துக்குள் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்கள் வெட்டிக்குறைக்கப்பட்டால், கோட்டாபய அதிகாரங்கள் இல்லாத வெறும் சம்பிரதாயபூர்வமான (அலங்கார) ஜனாதிபதியாகி விடுவார். அவ்வாறான நிலையில் அவர் ராஜினாமா செய்து வீடு செல்லும் நிலையும் ஏற்படலாம். இதுதான் கள யதார்த்தம்.

ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே இரண்டு தடவைகள் பிரதமராக இருந்தபோது கசப்பான அனுபவம் அவருக்கு கிடைத்திருந்தது. 2000- 2005 வரையிலான காலத்தில் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமராக இருந்த ரணிலால் எதனையும் சுயமாகச் செய்ய முடியவில்லை. இரண்டு தடவைகள் ரணிலின் ஆட்சியை சந்திரிகா கலைத்தார். பின்னர் 2005 க்கு பின்னர் மைத்திரி ஜனாதிபதியாக வந்தபோதும் இதேநிலை ரணிலுக்கு ஏற்பட்டது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்றப் பெரும்பான்மையை அவர் வைத்திருந்த போதிலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முன்பாக அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய உள்ள நிலையில் ஒரேயொருவராக வந்து அவரால் எதனைச்சாதித்துவிட முடியும் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகின்றது. நியாயமான கேள்விதான். ஆனால் இப்போது கள யதார்த்தம் வேறு. தனக்கு எதிராக ஆரம்பமான போராட்டத்தை தமது தமையனாரின் பதவியைப் பறிகொடுத்து தன்னைப் பாதுகாக்கும் முயற்சியில் கோட்டாபய இறங்கியிருக்கின்றார். போராட்டம் இப்போதும் தொடர்கின்றது. மக்கள் ஜனாதிபதியின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றார்கள். நிறைவேற்று அதிகாரம் இருக்கிறதே என்பதற்காக அவர் அத்துமீறிச் சென்றால், மக்கள் போராட்டம் உச்சமடையும் என்பதற்கு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவம் கோட்டாபயவுக்கு எச்சரிக்கையாகவுள்ளது.

அதனால், சந்திரிகாவின் கீழும் பின்னர் மைத்திரியின் கீழ் பட்ட அவஸ்தையை கோட்டாபயவிடம் ரணில் ரணில் எதிர்பார்க்கத் தேவையில்லை. கோட்டாபய மிகவும் பலவீனமாக உள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் அவர் உரையாற்றிய போது அவரது உடல்மொழிகூட அவரது பலீனத்தை பறைசாற்றியது. ஒரேயொரு உறுப்பினராக பாராளுமன்றம் வந்து பிரதமராகியுள்ள ரணிலுக்குள்ள பலமும் அதுதான்.

அதேவேளையில் மேற்கு நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு ரணிலை வரவேற்கின்றன. அவர்கள் விரும்பிய ஆட்சிமாற்றம் ஒன்று இடம்பெற்றிருப்பது அவர்களுக்கு உற்சாகமளிக்கும். அதேவேளையில், ரணிலைப் பாதுகாக்கவேண்டிய ‘பொறுப்பும்’ அவர்களுக்குள்ளது. அதனால், பொருளாதார உதவிகள் தேடி வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகளவில் உள்ளன. இது ரணிலுக்குள்ள இரண்டாவது பலம்.

  Tamil News