இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காணவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நேற்று (17) தமிழீழ இனப்படுகொலை நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே, அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“நான் பெரிதும் நேசிக்கும் தேசிய தலைவர் பிரபாகரன். அவர் உயிரோடு உள்ளார் எனும் நம்பிக்கை ஒருபுறமும், இல்லை என்ற எண்ணம் மற்றொரு புறமும் உள்ளது. அவருடன் இரண்டு முறை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது”.
“இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்ச உட்பட அவருடைய குடும்பத்தில் யாரும் தண்டிக்கப்படவில்லை”.
“இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால், அது ஐ.நா சபையால் மட்டுமே முடியும்”.
“ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே இதில் தீர்வு காண முடியும். தமிழீழம் என்பது எங்களுடைய கனவு. அதிமுக தமிழீழ விடுதலை இயக்கங்களை புறக்கணித்துவிட்டார்கள். ஆனால், சட்டமன்றத்தில் தன்னுடைய முதல் கன்னி பேச்சிலேயே வன்னியரசு, ஈழம் குறித்து பேசியுள்ளார்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



