குருந்தூர் மலை பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள்

குருந்தூர் மலை பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் காணிகள் வனவள திணைக்களத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு இன்று சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

குருந்தூர்மலை பிரதேசத்தின் கீழ் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் மீள் குடியேற்றத்தின் பின்பு  சில வருடங்களாக வனவள திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.

பூர்விக காணிகளிலே தமது வாழ்வாதாரம் தங்கி இருப்பதாகவும் தமது பூர்வீக காணிகளை வன வள திணைக்களத்தினரிடம் இருந்து மீட்டுத் தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு இம் மக்கள் கொண்டுவந்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தனது கோரிக்கையை முன் வைத்திருந்தார்.

அதன் பிரகாரம் இன்றைய தினம் புதன்கிழமை(27)  குருந்தூர் மலை பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர், வனவள திணைக்களத்தினர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக உதவிஅரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் வருகை தந்து இந்த காணி விடுவிப்பு தொடர்பான தற்போதைய நிலமை தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

கையகப்படுத்தப்பட்டுள்ள இக் காணிகள் சட்டங்களுக்கு அமைவாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வனவள திணைக்களத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

காணிகளை விடுவிப்பதற்கு உரிய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நான் தொடர்ந்து முன்னெடுத்து வருவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

Tamil News