இவ்வாண்டில் ‘ஈழத்தமிழர் இறைமை’ உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படல் வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 217

208 Views

இவ்வாண்டில் ‘ஈழத்தமிழர் இறைமை’ உலகுக்கு
வெளிப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படல் வேண்டும்

ஈழத்திலும் தமிழகத்திலும் உலகெங்கும் தைப்பிறப்பை உழைப்பின் பெருமையையும் உழைப்பாளர்களின் மகிமையையும் பொங்கலிட்டு உலகத்தமிழினம் ஓரணியாய்த் தமிழர்கள் என்னும் இனஉணர்வு பொங்கிடக் கொண்டாடும் தைப்பொங்கல் நன்னாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் “இலக்கு” உலகத் தமிழ் மின்னிதழ் ஆசிரியர்குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். பிரித்தானியா கனடா இந்தியா உட்பட்ட உலகநாடுகளின் பிரதமர்கள் தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து தமிழினத்தின் தொன்மையும் தொடர்ச்சியுமான தமிழ்ப்பண்பாட்டுக்கு மதிப்பளித்து தமிழினத்தின் உலகின் மூத்த குடிநிலைக்கு மதிப்பளிக்கும் அரசியல் நாளாகவும் தைப்பொங்கல் இன்று உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் புகலிட வாழ்வால் பரிணாமம் பெற்றுள்ளது. கனடாவும் ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டன் பெருநகரக் கவுன்சிலும், சனவரி மாதம் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், மற்றும் கலை இலக்கிய சிறப்புக்களை மற்றைய தமிழரல்லாத சிறுவர்களுக்குப் பள்ளிகளிலும் பல்பண்பாட்டு மக்களுக்கு ஊடகங்கள் கலைத்துறை வழியாகவும் எடுத்துரைக்கும் தமிழ் மரபுரிமை மாதமாகத் தமிழர்கள் கொண்டாடுவதைச் சட்டபூர்வமாக அனுமதித்துள்ளன. இது தமிழினத்தின் தனித்துவத்தைத் தமிழர்கள் உலகில் வளர்த்திட சான்றாதரங்களுடனான அறிவார்ந்த நூல்களை கலைப்படைப்புக்களை உருவாக்க உதவியுள்ளது. இவ்வாறாக உலகமே தமிழர்களின் இருப்பின் தொன்மைக்கும் கலை இலக்கிய வளப் பெருமைக்கும் தலைவணங்குகின்ற நேரத்தில் ஈழத்தில் சிறிலங்காவின் அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாண அரசின் தொன்மைத் தலைநகரமான நல்லூரில் சிவன் கோயிலில் ஒழுங்கு செய்யப்பட்ட தேசியப் பொங்கல் விழாவொன்றில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, எந்தச் சிறிலங்கா ஈழத்தமிழினப் பண்பாட்டு அழிப்பைத் தலைமை அரசியல் கொள்கையாகவும் கோட்பாடாகவும் கொண்டு செயற்பட்டு வருகிறதோ அந்தச் சிறிலங்கா பன்மொழிப் பல்பண்பாட்டு நாடாக இருப்பது போன்ற போலியான தோற்றப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தித், தனது கடன்மறுசீரமைப்புத் திட்டத்துக்கு தேசிய இனமுரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமென அனைத்துலக நாணயநிதியம் முன்வைக்கும் நிபந்தனையைச் சமாளிக்க முயல்கின்றார்.
ஜனவரி மாத ரணிலின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை நாடகம் தற்காலிகமாக திரைமூடப்பட்ட நிலையில் 19-20ம் திகதிகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை கடன்மறுசீரமைப்புக்குத் தனக்குத்துணையாக, எல்லைமீறி மீன்டிபிடிக்கும் இந்திய மீனவரை பிடிக்கவும் இடிக்கவும் பாரிய இரும்புப் படகுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தரவுள்ளார் என ஈழநாடு பத்திரிகை செய்தி வெளியிடும் நேரத்தில், ரணில் கொழும்புக்கு அழைத்துள்ளார். சீனாவுடனும் தாய்லாந்துடனும் ஏககாலத்தில் கட்டுப்பாடற்ற சுதந்திர வர்த்தகவலய உடன்படிக்கைகள் செய்து சீனாவையும் அமெரிக்காவையும் தன்பக்கம் இழுக்க ரணில் கடும்முயற்சி செய்துவருகின்றார். இந்தச் சூழலில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயக்குமார் பல்கலைக்கழக மாணவர் ரணிலின் தேசியப் பொங்கல் விழாவைப் புறக்கணித்து அன்றைய நாளில் பல்கலைக்கழகத்தில் நடாத்தும் விழிப்புணர்வு கவனயீர்ப்பு சனநாயகப் போராட்டங்கள் மற்றும் அங்கிருந்து தேசியப் பொங்கல் நடைபெறும் இடத்துக்கு நடத்தவுள்ள சனநாயக அமைதி எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. எங்களுடைய தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளுமின்றி தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் துன்பதுயரத்தில் கழித்து வருகின்ற நிலையில், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாத நிலையில், காணிகள் விடுவிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல், போன்ற இனப்பிரச்சினைக்குள் இருந்து இதுவரை எமது மக்கள் வெளிவர இயலாத நிலையில், தேசியப் பொங்கல் விழாவொன்றை இந்த ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் எவ்வாறு நிகழ்த்த முடியும்? என்பது மாணவர் தலைவர் விஜயக்குமாரின் நியாயமான கேள்வியாகவுள்ளது. சனாதிபதி தேசியப் பொங்கல் கொண்டாடுவதில் தங்களுக்கு எதிர்ப்பு இல்லையெனவும் ஆனால் அவர் தீர்வுகளைக் கண்டபின் அதனைக் கொண்டாடினால்தான் தாங்கள் அதில் இணைவோம் என அவர் கூறியுள்ளமை, கடன் சீரமைப்புக்கும் கடனில் இருந்து விடுபடுவதற்கும் இலங்கைக்குத் தேவையாகவுள்ள தேசிய ஒருமைப்பாடு சிறிலங்கா எந்த அளவுக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினையை வரலாற்று உண்மையின் அடிப்படையில் தீர்வுக்கு அணுகிறது என்ற முறையிலேயே தங்கியுள்ளது என்பதை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.
இந்நேரத்தில், ஈழத்தமிழர், இத்தைப்பொங்கல் நன்னாளில், இவ்வாண்டில், 01. ஈழத்தமிழர் இறைமையைத் தங்கள் உள்ளக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தாயகத்தில் பாதுகாத்து, தங்கள் தேசியத்தை உறுதிப்படுத்தி, தங்களுக்கான தன்னாட்சியை உறுதிப்படுத்தவும், 02. தங்கள் இறைமையினை உலகுக்கு வெளிப்படுத்தி வெளியக தன்னாட்சி உரிமையினை நடைமுறைப்படுத்தும் அனைத்துலகச் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உலகநாடுகளையும் உலக அமைப்புக்களையும் நெறிப்படுத்தவும், இருதளங்களிலும் சமகாலத்தில் ஓரணியில் செயற்படும் வகையில் கூட்டமைத்து தாயகத்திலும் உலகிலும் செயற்பட உறுதி எடுக்குமாறு ‘இலக்கு’ அழைக்கிறது. இதனை விடுத்து ஈழத்து தமிழ் அரசியல்வாதிகள் உள்ளூராட்சித் தேர்தலில் குத்தி போட, அரசியல் கிளித்தட்டு விளையாடி அங்குமிங்கும் பாய்ந்து தேர்தல் கூட்டமைக்கும் அவலட்சணத்தை, ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் இனியும் அனுமதிக்கக் கூடாது. முதிய வயதினர் இளையவர்க்கு வழிவிட்டு மூளைப்பலம் வழங்குவதை வீட்டில் இருந்து செய்வது தமிழ்ப்பண்பாடு. தமிழர் பண்பாட்டுத் திருநாளிலாவது தமிழ் இளம் ஆண்களும் பெண்களும் நாடாளும் ஆற்றல்பெற, தீர்மானங்கள் எடுக்கும் உரிமைபெற, உரியது செய்ய ஈழத்தமிழ்க்கட்சிகள் முயன்றிட வேண்டும். மேலும் விடுதலை என்பது அரசியல்வாதிகளால் என்றுமே எங்குமே வென்றெடுக்கப்பட்ட வரலாறு உலகில் இல்லை. தன்னளவில் நான் அடிமையல்ல என்ற உள்ள உறுதியுள்ள மனிதர்களாலேயே விடுதலை நடைமுறைச் சாத்தியமாகும் என்பது மனித வரலாற்று உண்மை. 2023இல் இந்த உண்மையின் அடிப்படையில் ஈழமக்கள் சக்தியெழும் ஆண்டாக இவ்வாண்டு அமைய வேண்டுமென இலக்கு மீளவும் வாழ்த்துரைத்து ஈழமக்கள் ஒன்றாக எழுவோம் எங்கள் பகைவர் எங்கோ மறைவார் என உறுதிகூறி எல்லோரும் நலம்பெற ‘இலக்கும்’ தன்னால் இயன்றதைச் செய்யும் என இப்பொங்கல் நன்னாளில் உறுதியளிக்கிறது.

Tamil News

Leave a Reply