யானை–மனித மோதல்: 204 காட்டுயானைகள் உயிரிழப்பு!

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் யானை மனித மோதல் காரணமாக 84 பேர் பலியாகியுள்ளதுடன் 204 காட்டுயானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி தரவுகளின் படி நாட்டில் பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதுடன் யானை மனித மோதல் காரணமாக 84 பேர்  உயிரிழந்துள்ளமை வனஜீவராசிகள் திணைக்கள தலைமை அலுவலகத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

துப்பாக்கிச்சூடு,சட்டவிரோத மின் வேலி மற்றும் ஹக்கபடஸ் உள்ளிட்ட பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தில் 44 காட்டுயானைகளும் அம்பாறை மாவட்டத்தில் 28 காட்டுயானைகளும்  பொலன்னறுவை மாவட்டத்தில் 27 யானைகளும் மொனராகலை மாவட்டத்தில் 22 யானைகளும் உயிரிழந்துள்ளதுடன் அநுராதபுரம் மாவட்டத்திலேயே மனித செயற்பாடுகள் காரணமாக 44 காட்டுயானைகள் கூடுதலாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் யானை மனித மோதல் காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் தலா 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்திலேயே அதிகளவான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை மேலும் தெரியவந்துள்ளது.

நாட்டில் தற்சமயம் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக காட்டுயானைகள் உணவு மற்றும் நீரினை தேடி படையெடுப்பாதனால் யானை மனித மோதல் அதிகம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளின் போது மிக அவதானமாக செயல்படுவதன் மூலம் யானை மனித மோதல்களில் இருந்து மனித உயிர்களை பாதுகாத்துகொ்கொள்ளமுடியும் என வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.