இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சி

சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் (Lions Clubs International Foundation – LCIF) வழிநடத்தப்படும் திட்டங்கள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்துடனான (WFP) இந்த அமைப்பின் ஒத்துழைப்பு மூலம் எட்டப்பட்ட தேசிய அளவிலான தாக்கத்தை விளக்கும் வகையில் வியாழக்கிழமை (23) கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது.

இதில் இலங்கை முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு, தினசரி ஒரு வேளை உணவு என்பது வெறுமனே போசணையை வழங்குவது மட்டுமல்ல; அது கற்றல், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும் என்று கூறப்பட்டது.

WFP உடனான இந்த ஒத்துழைப்பானது, உலக உணவுத் திட்டம் அமெரிக்கா (World Food Program USA) மற்றும் LCIF ஆகியவற்றுக்கு இடையிலான 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு அங்கமாகும். இது இலங்கை மற்றும் நேபாளத்தை இலக்காகக் கொண்டது. இந்த திட்டத்தின் கீழ், இலங்கை உலக உணவுத் திட்ட (WFP Sri Lanka) அலுவலகம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொண்டது. இது உள்ளூர் உணவு வழங்குநர்கள் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதோடு, பாடசாலை மாணவர்களுக்கான உணவின் போசாக்கின் தரத்தை மேம்படுத்தும் ‘Home-Grown School Feeding’ (வீட்டில் தயாரிக்கப்பட்ட பாடசாலை உணவு) திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது

அத்துடன், தற்போது இலங்கையிலுள்ள லயன்ஸ் கழக உறுப்பினர்கள் சுமார் 400,000 அமெரிக்க டொலர் பெறுமதியான ‘Protect Child Nutrition’ எனும் LCIF அங்கீகரிக்கப்பட்ட மானியத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5,000 சிறுவர்களுக்கு நாளாந்த பாடசாலை உணவை வழங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.