பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 346

பிரித்தானியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த போதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மக்கள் நலத்திட்டங்கள் எதனையும் செய்யாது பாதுகாப்புச் செலவினை அதிகரிக்கும் மாற்றத்தையே நடைமுறைச்சாத்தியமாக்கியுள்ளது. இதனால் பிரித்தானியப் பிரதமரின் செல்வாக்கு மக்களிடை படுமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் மக்கள் ஆதரவு நிலையில் ‘ரிவோம்’  கட்சி முதல் நிலையிலுள்ளது எனவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. பாராளுமன்றத்தில் நிதிச் செயலாளர் கொன்சேர்வேடிவ் கட்சித் தலைவியின் மக்கள் உதவிப்பண குறைப்புகள் குறித்த சரமாரியான கேள்விகளுக்குப் பதில் கூற இயலாது அழுத வரலாறும் பிரித்தானியப் பாராளுமன்ற வரலாறாக மாறியுள்ளது. சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என ஆட்சிக்கு வந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்காவுக்கும் பிரதமர் ஹரிணி அபேயசேகராவுக்கும் இதே நிலைதான் ஈழத்தமிழர்கள் கேள்வி கேட்டாலும் ஏற்படும் என்பதை இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.  மேலும் கொவென்றி சவுத்தின் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற உறுப்பினர் சாரா சுல்தானா, முன்னாள் பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோபினுடன் சேர்ந்து புதிய கட்சியொன்றை உருவாக்கி வேண்டிய மாற்றங்களை முன்னெடுக்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. பிரித்தானியத் தமிழரும் உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்த பிரித்தானிய ஈழத்தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்குங்கள் அதுவே இனத்துவ அடையாளத்தினையும் இனத்துவத் தேவைகளையும் அடையச் சிறந்தவழி என்பதையும் இலக்கு வலியுறுத்த விரும்புகிறது.
மேலும் 2025 பிறந்து ஆறுமாதங்கள் முடிந்து விட்டன.  இந்த ஆறுமாதத்திலும் அமெரிக்காவின் வர்த்த கப் போராலும் தொழில்நுட்பப் போராலும் அதனுடன் இணைந்த அமெரிக்க வளைகுடாப் பிரகடனத்துடன் கூடிய  கனடாவை அமெரிக்க மாநிலமாக அமெரிக்க எல்லையை விரிவுபடுத்தி மெக்சிக்கோவை அடக்கி டென்மார்க்கின் கிறின்லாந்து வரை எல்லை நீட்சி செய்யும் முயற்சிகளாலும்,  நேட்டோவுக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5வீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்குதல் என்ற நிபந்தனையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பாதுகாப்புச் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கி அமெரிக்காவுடன் மருவி உயரவும் ஐரோப்பிய இராணுவத்தையும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதபலத்தை தனியாகவும் கூட்டாகவும் பலப்படுத்தி அமெரிக்காவைக் மறுத்து உயர வேண்டிய புதிய சூழ்நிலை ஐரோப்பிய நாடுகளிலும் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த உலக நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சிறிலங்காவின் அநுர குமரதிசநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் சிறிலங்காவுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவுடனும் சீனாவுடனும் தனக்கான ஆயுதபலத்தைக் கூட்டாண்மைப்பலத்தை பங்காண்மைப்பலத்தை பெருக்கியுள்ளது என்பதும் அனைத்து நாடுகளுடனும் ஏதோ ஒருவகையில் பங்காண்மை பெற்று வருகிறது என்பதும் யாவருக்கும் தெரியும். அத்துடன் இந்த வாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா அடுத்த பத்தாண்டுக்கான கூட்டாண்மைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்யவுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே சிறிலங்கா, இந்திய அமெரிக்க கூட்டாண்மை பங்காண்மை வழி 2009 இல் ஈழத்தமிழர்களின் 31 ஆண்டு கால நடைமுறையரசை முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களில் 176000 பேரைத் தேசமாகவே இனஅழிப்பு செய்து தனது ஆக்கிரமிப்பு ஆட்சியை ஈழத்தமிழர்கள் மேல் மீளவும் நிறுவியமையை நினைவூட்டுகிறது.
அவ்வாறே தற்போதைய உலக முறைமைகளாலும் ஈழத்தமிழர்களுக்கு அவர்களுடைய இறைமை மேலும் ஒடுக்கப்படுவதற்கான காலமாக எதிர்காலம் அமையப்போகிறது என்ற எச்சரிப்பை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. இதனால் ஈழத்தமிழரே ஈழத்தமிழரின் இறைமையைப் பாதுகாத்தேயாக வேண்டிய நிலை தோன்றியுள்ளதென்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது. இதனை எப்படி சனநாயக வழிகளில் செய்வது என்பது இன்றுள்ள கேள்வி.  சமகாலத்தில் உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அறிவார்ந்த ஆய்வுகளுடன் கூடிய  எதிர்வினைகள் வழியாகவே இது சாத்தியமாகும் என்பதே பதில்.  அனைத்துலக ஈழத்தமிழர்களதும் தமிழர்களதும் மனித உரிமை மற்றும் அமைதிச் செயற்பாட்டாளர் களதும் எதிர்வினைகளுக்கான  கூட்டான சந்திப்புக்கள் திட்டமிடல்கள் ஒருங்கிணைப்புக்கள்  மேற்கொள்ளப்பட வேண்டியவொன்றாகவுள்ளது.
சிறிலங்காவிடம் கேட்டுப்பெறும் மனநிலையில் உள்ள எந்த அரசியல்வாதியாலும் இதற்கான எதிர்வினையை உருவாக்க முடியாது. அனைத்துலக தொடர்புகள் அனைத்துலக சட்ட இணைப்புக்கள் அனைத்துலக அமைப்புக்களை நாடுகளைக்  கேள்வி கேட்கக் கூடிய ஈழத்தமிழர் கட்டமைப்புக்கள் என்பவற்றை உருவாக்குதல் வழி ஈழத்தமிழரே ஈழத்தமிழரின் இறைமையைச் சனநாயக வழிகளில் பாதுகாத்தேயாக வேண்டும். காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக அனைத்துலக அமைப்பால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை உள்ளது. அதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிநிதியின் நியமனமே ஈழத்தமிழர்கள் தங்களின் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையயைப் பயன்படுத்தி வாழ்வதற்கான முறைமையை உருவாக்குமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சிறிலங்காவின் நாடாளுமன்ற யாழ்ப்பாண உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 2023இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் தெளிவாக எடுத்து விளக்கியிருந்தார்.
ஆனால் சிறிலங்காவுக்கு கடந்த மாதத்தில் சென்ற அதன் ஆணையாளர் சிறிலங்காவின் உள்ளக பொறிமுறையை அனைத்துலக தரத்துக்குக் கொண்டு வந்து நீதியைப் பெற வேண்டும் என்று கொழும்பில் வைத்துக் கூறியமை வேடிக்கையாக மட்டுமல்ல வேதனையாகவும் உள்ளது. இதற்கு அனைத்துலகிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் செயற்பாட்டாளர்கள் யாரும் கவலையோ கண்டனமோ தெரிவிக்காதது ஆணையாளர் கூறியது தரும் வேதனையை விடப் பலமடங்கு வேதனையைத் தருவதாக உள்ளது. சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை நீதி வழங்கல் எப்படியானது என்பதற்கு ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் நிற்கும் பொழுதே மண்ணுக்குள் இருந்து எழுந்த ஒவ்வொரு மனித எலும்புக் கூடுகளுமே சான்று பகர்ந்தன. அதுவும் பால்குடி மறவாத பச்சைக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ பள்ளியில் படிக்கவென வழங்கிய நீலப் பள்ளிப் பையுடனும் விளையாட்டுப் பொம்மையுடன் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு என்பன எத்தகைய நீதி உள்ளக பொறிமுறையில் வழங்கப்படுமென்பதை தெளிவாக்கியுள்ளது. மேலும் வேதியல் பாடத்து உயர்தர வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு எதிர்காலக் கனவுகளுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிரிசாந்தியை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்திக் கூட்டுப்பாலியல் வன்முறைப்படுத்திய சிறிலங்காப் படையினர் மூச்சு விட நேரம் தாருங்கோவெனவும் தாகத்துக்குத் தண்ணீர்தாருங்கள் எனவும் கிரிசாந்தி கெஞ்சக் கெஞ்ச மிருகங்களாக அவளை தொடர்ந்து பாலியல் வன்முறைப்படுத்திய தகவல் வெளியான நிலையில் எந்த ஈழத்தமிழனாவது உள்ளக பொறிமுறையில் நீதி கிடைக்குமென நினைப்பானா? 1998 இலேயே கிரிசாந்தியை இனப்படுகொலை செய்தவன் தனக்கு தண்டனை கிடைத்ததம் தனக்கேன் தண்டனை தானே 400 பேரைக் படுகொலை செய்து புதைக்க உதவியதாக கூறி அவர்களையும் தண்டியுங்கள் என செம்மணி புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களின் தொகையைக் கூறிய பின்னர்  27 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் எந்த நீதியும்  வழங்காத சிறிலங்கா இன்று வெளிப்படத் தொடங்கியுள்ள தடயங்களை கண்டா நீதி வழங்கும். மாறாக கிடைக்கும் தடயங்களையும் மரபணுச் சோதனைக்கு உதவாதவாறு சிதைக்கும். இதனை சிறிலங்காவின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களே ஊடக கடிதம் மூலம் வெளிப்படுத்தி அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் நெறிப்படுத்தலில் அனைத்துலக தடயவியலாளரின் மூலம் இவை விசாரணை வரை பேணப்பட வேண்டுமென வலியுறுத்தியதை இலக்கு எடுத்துரைத்து. இதற்காவது அனைத்துலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பணிவாக வேண்டுகிறது.
ஆசிரியர்

Tamil News