கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் தொடர்பான சட்ட மூலம் கொண்டு வரப்படுவதன் பின்னணியும் கிளர்ந்தெழுந்த போராட்டங்களும்
நாடு எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொண்டு வருவார் என்ற கோஷத்துடன், மற்றொரு ராஜபக்ஷ இலங்கை அரசியல் களத்தில் ‘மீண்டும்’ இறக்கப் பட்டிருக்கின்றார். இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள பஸில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் பதவியேற்ற அதே நேரம், நாடு முழுவதிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம். அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் குறித்த சட்ட மூலத்துக்கு எதிரான போராட்டங்கள் மறுபுறம் தீவிரமடைந்து இருக்கின்றன.
பஸில் ராஜபக்ஷவைக் களத்தில் இறக்கி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அவர் மூலமாகத் தீர்வு கிடைத்து விடும் என்பதாகக் காட்டிக் கொள்வதற்கு அரசு முற்படுகின்றது. பஸிலின் மீள் வருகைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், பிரதான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு முற்பட்டிருப்பதை வெளிப் படுத்தியது. பஸிலின் வருகையை வெடி கொழுத்திக் கொண்டாடு வதற்காக ஒன்று கூடியவர்கள் மீது பாயாத தனிமைப் படுத்தல் சட்டம், அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது மட்டும் பாய்ந்திருக்கின்றது.
அதிகரிக்கும் அரச எதிர்ப்பைக் கட்டுப் படுத்துவதற்கு தனிமைப் படுத்தல் சட்டத்தை அரசு பயன் படுத்துகின்றது என்பதை இது உறுதிப் படுத்தியுள்ளது. தற்போது நடை முறையில் இருக்கும் தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் படி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஒன்று கூடல்களுக்கு முற்றாகத் தடை விதிக்கப் பட்டுள்ளது. அவற்றில் பங்கெடுத் தவர்கள் கைது செய்யப் படுகின்றனர். அத்தடையை மீறிய குற்றச் சாட்டுக்கு உட்படுத்தப்பட்டு, நீதி மன்றங்களில் முன்னிலைப் படுத்தப் படுகின்றனர். தனிமைப் படுத்தல் சட்டப் பிரிவுகளையும் ஒழுங்கு விதிகளையும் மீறிய குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் 6 மாத கால சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் விதிக்கப் படலாம்.
தனிமைப் படுத்தல் சட்டத்தில் முன்னர் இருந்த சில தளர்வுகளை அரசாங்கம் இப்போது இறுக்க மாக்கியுள்ளது. குறிப்பாக, முகக் கவசங்களை அணிந்து கொண்டு, தனிநபர் இடை வெளியைப் பேணும் வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்னர் அனுமதியிருந்தது. ஆனால், அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கு வதற்கு வசதியாகவே தனிமைப் படுத்தல் சட்டங்களை அரசு இறுக்கமாக்கி உள்ளது.
கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் தொடர்பான சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்று வட்டத்தில் கடந்த வியாழக் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டிருந்தவர்களில் 30 இற்கும் அதிக மானோர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு, தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப் பட்ட போதும் – பின்னர் பலாத்காரமாக தனிமைப் படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், அனைத்துப் பல்லைக் கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதே போன்று ஜே.வி.பி., முன்னிலை சோஷலிஸ கட்சி ஆகியவையும் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பரவலாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுதந்திர சதுக்கத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டத்தை நடத்தி யிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிரணி எம்.பி.க்கள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.
கொரோனாத் தொற்றுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வந்த சட்ட ஏற்பாடுகள் அரசாங்கத் தரப்பில் மேற் கொள்ளப் படும் நடவடிக்கை களுக்கு எதிராக பொது மக்கள் அல்லது அவர்கள் சார்பாக அபிப்பிராயங்களையோ, கருத்துக் களையோ வெளிப்படுத்த முடியாதவாறு அரசாங்கத் தரப்பிற்கு பாதுகாப் பளிப்பனவாக இருக்கின்றன. அபிப்பிராயங் களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்த முன்வருவோர் நசுக்கப் படுகின்றனர். 20 ஆவது திருத்தச் சட்டம், கொழும்பு துறைமுக நகர ஆணைய சட்டம் உட்பட பல விடயங்களை அரசாங்கம் இந்தச் சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி மக்களின் குரல்வளையை நெருக்கிக் கொண்டே அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளது
கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகச் சட்ட மூலத்தினூடாக இலங்கையில் இருக்கும் அரச பல்கலைக் கழகங்களில் குவிந்திருக்கும் கல்வி முறைக்கு சமாந்தர மான சில விடயங்களில் மேலாதிக்கத் துடன் இருக்கக் கூடிய தனியார், இராணுவ உயர் கல்வியை சட்ட ரீதியாக உறுதி செய்ய அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தான் தற்போது எதிரணியினர் வீதிகளில் இறங்கு வதற்குக் காரணம்.
இலங்கையின் கல்வி முறையை சீர்திருத்த தற்போதும் ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. அக்குழுவில் இயங்குபவர்கள் அரசாங்கத்தின் தேவை கருதி செயற்படுபவர்களாக இருப்பதாகவும், தொழில் நுட்ப தொழில் படையை உருவாக்கும் வகையில் கல்வி முறையை மாற்ற வேண்டு மென்ற எண்ணம் கொண்டுள்ள அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப கல்விக் கொள்கை, நடை முறைகளைக் கொண்ட கல்வி முறையை உருவாக்க இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலைத் துறைக் கல்வியை நிராகரிப்பவராக உள்ள ஒருவர். அவருக்குப் பின்னணியில் இருந்து செயற்படும் வியத்மக அமைப்பினரும், இராணுவ மயமாக்கலையும், பொருளாதார நலன்களையும் மட்டும் இலக்காகக் கொண்டதாக கல்வி முறை அமைந்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள். அழகியல் கல்வி என்பது அவர்களைப் பொறுத்த வரையில் தேவையற்ற ஒன்று. பொருளாதார சுழற்சிக்கேற்ற தொழிற் படையை உருவாக்குவதை மட்டும் நோக்காக கொண்டு அமைக்கப்படும் கல்வியால் மக்களின் வாழ்விற்கான தன்னாட்சியும், ஆட்சியாளர்கள் பொருளாதார தன்னாட்சியும் ஏற்பட முடியும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் அவர்கள்.
புதிய சட்டமூலத்தின் ஆபத்தான அம்சங்கள்
இந்தப் பின்னணியில் தான் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் தொடர்பான சட்ட மூலத்தை பாராளு மன்றதத்தில் கொண்டு வந்து நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கும், அரச பல்கலைக்கழக பொறி முறைக்கும் அப்பால் இராணுவ முறைமைக்கு உட்பட்ட தனியார் கல்வியை வழங்கும் இன்னொரு நிறுவனத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதற்கான இராணுவக் கட்டுப் பாட்டில் இயக்குநர் சபை இருப்பதுடன், மாணவர்கள் தெரிவு, கட்டணம் அறவிடல் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பொறிமுறைக்கு உட்பட்டதாக இராது. அங்கு கற்பவர்களும், கற்பிப்பவர்களும் இராணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.
இது நாட்டை முற்று முழுதாக இராணுவ மயப்படுத்துவதற்கான முதற் படியாகவும், சுயாதீனமான பல்கலைக் கழகச் செயற்பாடுகளுக்கு சாவுமணி அடிப்பதாகவும் அமைந்திருக்கும் என எதிர்க் கட்சிகளும், மாணவர், ஆசிரியர் சங்கங்களும் அஞ்சுகின்றன. அதனால் தான் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம், அடக்கு முறையைப் பிரயோகிக்கும் என்பதைத் தெரிந்து கொண்டும் அந்த அமைப்புக்கள் சீற்றத்துடன் களத்தில் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுத்தன. அரசாங்கமும் காவல் துறையினரைப் பயன்படுத்தி கடுமையான அடக்கு முறையைக் கையில் எடுத்து போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், இது போராட்டத்தின் முடிவாக அமையுமா?
2009 இல் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையின் அரசியல் – நிர்வாகம் என்பனவற்றில் இராணுவ மயமாக்கல் ஆரம்பமாகியது. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர் இது தீவிரமடைந்தது எனச் சொல்ல முடியும். அரச நிர்வாகம், இராஜதந்திர சேவைகள் என்பவற்றின் தொடர்ச்சியாக கொரோனா ஒழிப்புச் செயலணி கூட இராணுவ மயமானதாகவே உருவாக்கப்பட்டது. அதன் உச்சகட்டமாக இப்போது பல்கலைக் கழகக் கல்வியில் மாற்றங்களைச் செய்வதற்கான வியூகங்கள் வகுக்கப் படுகின்றன. கிளர்ந்த தெழும் எதிர்ப்புக்களை முறியடிக்க தற்போதைய கொரோனா கால தனிமைப் படுத்தல் சட்டங்கள் தமக்கு உதவும் என்ற நம்பிக்கை அரசுக்குள்ளது.