இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- கோவிந்தன் கருணாகரம்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டுவருபவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தினை பேசுபொருளாக கொண்டுள்ள கட்சிகளுடன்  பேசவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தினைப்போல் இல்லாமல் தாங்கள் ஆட்சிக்குவந்தால் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்ற உத்தரவாத்தினை சர்வதேசத்தின் முன்னிலையில் எழுத்துமூலமாக தரவேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,

மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினை வீட்டுக்கு செல்லுமாறு கோரி கடந்த சில தினங்களாக காலிமுகத்திடலில் சிங்கள இளையோரினால் போராட்டம் முன்னெடுக்கப் பட்டுவருகின்றது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப் படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே பதவி விலக வேண்டும். ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகவேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடு இன்று பொருளாதார ரீதியாக அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளது. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பொருளாதாரத்தினை தூக்கி நிமிர்த்தக்கூடிய நிலையில்லை.

இந்தநிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதன் தார்ப்பரியம் தெரியாமல் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது என்று நான்நினைக்கின்றேன். இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் அடக்கி ஒடுக்கப்பட்டபோது அகிம்சை ரீதியான போராட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றம் பெற்றபோது தமிழ் மக்கள் மீதான யுத்ததிற்காக இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசுகள் பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்ததே முதல்காரணமாகும்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது இந்த நாட்டில் ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் மாறிமாறி வந்த அரசுகள் இந்தளவுக்கு யுத்ததிற்கு டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது.

தற்போதுகூட சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டத்திலாவது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News