சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – கூட்டமைப்பு

107 Views

IMG 1169 1 சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கூட்டமைப்புஐ.நா மனித உரிமை பேரவையில் 2012 ம் ஆண்டு இருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா எதிரான நிலைப் பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களின் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என குரல் கொடுக்கின்ற வகையில் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை நாங்கள் விரும்ப வில்லை என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளு மன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரி. சரவணபவன் மநாகர சபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜரான பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இந்த அரசாங்கம் நாங்கள் எதிர் பார்த்ததை விட அவசரமாக மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்திருக்கின்றது.

மாசி மாதத்திலிருந்து போராட்டங்களை ஆரம்பித்து வைத்தவர்கள் நாங்கள் தான். எந்தப் போராட்டம் நடந்தாலும் அதற்காக முழுமையான ஆதரவு இருக்கின்றது.

நாங்கள் எந்த நாட்டுக்குச் சார்பானவர்களும் அல்லர்; எதிரானவர்களும் அல்லர். இலங்கைவாழ் தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலே எங்களுடைய அரசியல் பிரச்சினை சம்பந்தமாக இந்தியா – இலங்கை தமிழ் மக்கள் சார்பில் 1989 ஆம் ஆண்டு ஒரு சர்வதேச உடன் படிக்கையைக் கைச்சாத் திட்டுள்ளது.

அது முழுமையாக அமுல் படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதன் காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிச் செயற்படுகின்றோம்.

இந்திய அரசும் தொடர்ச்சியாக அதில் உள்ள விடயங்கள் எல்லாமே நிறை வேற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாகச் சொல்லி வருகின்றன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பகை இருப்பதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தியாவினுடைய கரை எல்லையும் இலங்கையினுடைய கரை எல்லையும் வெறுமனே 30 கிலோ மீற்றர் தான் உள்ளது. இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனித உரிமைகளைப் பேணுகின்ற நாடுகள் இலங்கைக்குள் வந்து நட்புறவை ஏற்படுத்துவதை வரவேற்கக் கூடிய ஒரு விடயமாகப் பார்க்கலாம். ஆனால், சீனாவைப் பொறுத்த வரையில் ஜனநாயகம் இருப்பது என்பது எங்கள் எவருக்கும் தெரியாத ஒரு விடயம்.

ஒரு கட்சி ஆட்சி தான் அங்கு இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்கு இடம் அளிப்பதை அங்கு காணக் கூடியதாக இல்லை. மனித உரிமை என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு எங்களுடைய நிலைப்பாடு பாதிக்கப்பட்டவர் என்ற ரீதியிலும், மனித உரிமை விடயங்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கப் படுகின்ற சமூகம் என்ற வகையிலும், ஜனநாயகத்தை புரிந்து கொண்டவர்கள் என்ற முறையில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஊடகங்களையும் ஊடக வியலாளர்களையும் அச்சுறுத்துவது மிக மோசமான விடயம். நாங்கள் தொடர்ந்தும் இந்த விடயத்தை வலியுறுத்தி வருகின்றோம். இது தொடர்பாக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மக்களுக்கு செய்தி சென்றடைவது அதிலும் உண்மை செய்திகள் சென்றடைவது என்பது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானது.

ஊடக அடக்கு முறைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காகத் தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம்” – என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply