இலங்கையிலிருந்து புகலிடம் தேடி அவுஸ்திரேலியா வந்திருந்த விக்னேஷ்வரன் ஜெயந்தன், மற்றும் தேசமனந்தன் பவானந்தன் ஆகிய இருவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்ற உத்தரவை உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. “எங்களை (இலங்கைக்கு) நாடு கடத்த வேண்டாம்” என தமிழ் அகதிகள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் விக்னேஷ்வரன் ஜெயந்தன் SBS தமிழ் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு தான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து தடுப்பு முகாம் ஒன்றில் இருந்து பின் 2013ம் அண்டு தற்காலிக விசா மூலம் 2017ம் ஆண்டு வரையில் வசித்து வந்தாகவும் அப்போது அங்கு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் தேசமனந்தன் பவானந்தன் கூறுகையில், கடந்த 2012ம் ஆண்டு கிருஸ்மஸ் தீவுக்கு இலங்கையில் இருந்து சென்றதாகவும் அதன் பின் பல பகுதிகளில் சில மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்து, தற்காலிக விசா மூலம் வாழ அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்.
மேலும் இவ்வாறு தற்காலிக விசாவில் அனுமதிக்கப்பட்டபின், ஒரு வருடமாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் தெரிவித்த தேசமனந்தன் பவானந்தன் தனது உறவினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு பின் நன்நடத்தை காரணமாக அங்கிருந்து தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு, வரும் 21ம் திகதி தம்மை நாடு கடத்தவுள்ளதாக தமக்கு அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதே நிலைதான் விக்னேஷ்வரன் ஜெயந்தனுக்கும் உருவாகியுள்ளது.
இந்த சூழலில் இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தம்மை அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாதெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


