பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தலிபான்களின் நடமாட்டத்திற்கு எதிராக அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.
தலிபான்களின் நடமாட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அமைதியையும் பாதுகாப்பையும் கோரி இம்மாகாண மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தேசிய சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ்வார்ப்பாட்டங்கள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளதோடு தலிபான்களின் நடமாட்டத்திற்கு எதிரான உணர்வுகளும் இங்கு வளர்ந்து வருகின்றன என்றார்.
இதேவேளை பழங்குடியினப் பகுதியின் கூட்டாட்சி நிர்வாகத்திற்கான தேசிய சபையின் உறுப்பினர் மொஹ்சித் தவார் விடுத்துள்ள அறிக்கையில் கைபர் பக்துன்க்வாவில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அமைதியையும் பாதுகாப்பையும் கோரி வடக்கு வசிரிஸ்தான் மக்கள் 26 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர். இங்கு பரவியுள்ள பயங்கரவாதம் தொடர்பில் கவனம் செலுத்தத் தவறினால் அது முழு நாட்டிலும் பரவும் ஆபத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.