“மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்களை அச்சுறுத்தும் விலையேற்றம் தொடர்கிறது.
குறிப்பாக காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ 240 ரூபாய்க்கு கிடைத்த கேரட் தற்போது 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பச்சை மிளகாயின் தப்போதைய விலை 1000 ரூபாய். இதற்கு முன்னர் 250 ரூபாய்க்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் விற்கப்படுகின்றது” என பிபிசி தமிழ் சேவைக்குத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாணம் அட்டாளைச் சேனையில் காய்கறி கடையினை நடத்தி வரும் ஜவ்பர்.