உலக பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பண வீக்கத்தினால் உலகின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இந்த ஆண்டு இருக்கும் என அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரலீனா ஜேர்ஜிவா கடந்த வியாழக்கிழமை (13) தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி 2.8 விகிதமாகவே இருக்கும். இது உலகில் உள்ள மக்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் நல்ல செய்தியாக இருக்காது. மேலும் இத்தகைய வளர்ச்சி நீண்ட காலம் நீடிக்கும் நிலையும் உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உலகில் உள்ள வங்கிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும், உலகின் பொருளாதார வளர்ச்சி ஒரு விகிதத்தை எட்டலாம் எனவும் கடந்த செவ்வாய்கிழமை (11) அனைத்துலக நாணய நிதியம் எச்சரித்திருந்தது.

இது பல நாடுகளின் பொளாதாரத்தை வீழ்ச்சியுற செய்யலாம். கோவிட்-19 நெருக்கடிகளுக்கு பின்னர் உக்ரைனில் ஏற்பட்ட போரினால் உருவாகிய பண வீக்கமே தற்போதைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என அது மேலும் தெரிவித்துள்ளது

அமெரிக்காவின் இரு வங்கிகள் வீழ்ந்ததும், சுவிற்சலாந்தின் கிறடிற் சூசி வங்கி விற்பனை செய்யப்பட்டதும் வங்கிகளை பலவீனப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. உலகின் பொருளாதார வளர்ச்சி 2028 ஆம் ஆண்டிலேயே 3 விகிதத்தை எட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது.