கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு பங்களாதேஷ் மேலும் கால அவகாசம்

இலங்கை தமது கடனை மீள செலுத்துவதற்கான காலத்தை, பங்களாதேஷ் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.

இலங்கைக்கு, பங்களாதேஷ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியுள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அதன் முதல் தவணையை வழங்க பங்களாதேஷிடம் கால அவகாசம் கோரியிருந்தது.

அதற்குள் தமது கடனை மறுசீரமைக்க முடியும் என்று நம்பியிருந்த போதிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தநிலையில், இலங்கை மேலும் 6 மாத கால அவகாசம் கோருகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முதல் தவணையையும் செப்டெம்பர் மாதத்திற்குள் மற்றொரு தவணையையும் செலுத்துவதாக இலங்கை உறுதியளித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ர{ஃப் தாலுக்டர் கூறினார்.

அதற்கு அப்பால் கால நீடிப்பு அவசியம் இல்லையென இலங்கை ஆளுநர் தெரிவித்துள்ளதாக தாலுக்டர் குறிப்பிட்டுள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டால், அது இலவசம் அல்ல. மேலும் கடனுக்கான வட்டி இணைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை, 2021 மே மாதம் இந்த நிதியை கடனாகப் பெற்றது. கடும் நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கிய போது 2022 ஏப்ரலில் அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என அறிவித்தது. பங்களாதேஷ், கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை இலங்கைக்கு மூன்று முறை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.