அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்கே அவசர காலப் பிரகடனம்; ரவூப் ஹக்கீம்

80 Views

தவறுகளை மறைப்பதற்கே அவசர காலப் பிரகடனம் தவறுகளை மறைப்பதற்கே அவசர காலப் பிரகடனம்: அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளை மூடி மறைப்பதற்காகவே பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பிரிவைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் அவசர காலத்தைப் பிரகடனப்படுத்த அரசாங்கம் முன் வருவதாக பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நுகர்வோரின் நன்மை கருதி அல்லாது, எதேச் சதிகாரத்துடன் அடக்குமுறையைக் கையாள்வதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும் காட்டமாகத் தெரிவித்தார்.

அவசர காலத்தைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான விவாதத்தில் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை பிற்பகல், உரையாற்றும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு வேறு சட்டங்களில் இடமிருக்கிறது. பதுக்கலைப் பொறுத்தவரை அதற்கு நுகர்வோர் அதிகார சபை சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கலாம்.

அத்துடன் தேசிய அனர்த்த முகாமைத்துவ கவுன்ஸில் என்பதை எதிர்கட்சியினதும் ஒத்துழைப்பைப் பெற்று ஏற்படுத்தமாறு நெடுகிலும் கோரி வருகின்றோம். அவ்வாறு அமைப்பதானால், இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதில் நிலைமையை எடுத்துரைத்து விலைக் கட்டுப்பாட்டை உரிய முறையில் மேற்கொள்ளலாம்.

நுகர்வோரின் நன்மைகாக என்றால், கடந்த நாட்களில் பல வர்த்தமானி அறிவித்தல்களைப் பிரசுரித்தீர்கள். அவற்றில் எதனாலுமே விலைக் குறைப்புச்செய்ய முடியவில்லை.

இப்பொழுது பதுக்கலுக்கு இடையீட்டாளர்களையும், ஆலை உரிமையாளர்களையும் குற்றஞ்சாட்டுகின்றீர்கள். என்னவென்றால் ,நீங்கள் எதையோ தீர்மானித்துக் கொண்டு, சந்தைப்படுத்துவோருக்கு மாற்றமாக ஒரு விலையை நிர்ணயிக்கின்றீர்கள்.

இவ்வாறான நிலைமையில் வேறு மாற்று வழிகளை கையாண்டிருக்க வேண்டும். கடந்த காலத்தில் நிலைமையைப் பொறுத்து கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை இறக்குமதி செய்யுமாறு கேட்டதுண்டு. அதனூடாகச் சந்தையில் போட்டித் தன்மை நிலவியது. இப்பொழுது நீங்கள் இறக்குமதி செய்யும் நிலையில் இல்லை. அதனால் உங்களது திறமையற்ற பொருளாதார முகாமைத்துவத்தை மூடி மறைப்பதற்கு முற்பட்டு ,முழு நாட்டையுமே கஷ்டத்திற்குள் தள்ளி விட்டீர்கள்.

இதனால் இப்பொழுது சர்வதேச ஊடகங்கள் இங்குள்ள நிலைமையைப் பற்றி எள்ளிநகையாடுகின்றன. லெபனானின் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுவிட்டதாக அவை குறிப்பிடுகின்றன. ஏனென்றால், அங்கு 80வீதமான மக்கள் வறுமையினால் வாடுகின்றனர். அங்கு பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தக் கதியே இலங்கைக்கும் ஏற்பட்டு வருவதாக அந்த வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தேவையில்லாத, வேண்டப்படாத அர்த்தமற்ற நாடாளவிய ரீதியிலான அவசர காலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்துவதன் மூலம், எதிர் கட்சிகளை நசுக்குவதற்கும், ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதற்குமான குறுகிய அற்பத்தனமான நோக்கத்தோடு இந்தக் காரியத்தில் ஈடுபடுகின்றீர்கள்.

உங்களுக்கு இதனை செய்ய வேண்டுமாக இருந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் அதற்குரிய 3 ஆம் பிரிவின் 17ஆவது ஷரத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஏன் அதன் 2ஆம் பிரிவைக் கொண்டு வரவேண்டும்?

இராணுவமயப்படுத்தலை தொடர்வதற்காகவே இவ்வாறான நாடகத்தை அரங்கேற்றுகின்றீர்கள். மக்கள் செல்கின்றனர். இராணுவத்தினரும், பொலீஸாரும் செல்கின்றனர். களஞ்சியசாலைகளைச் சுற்றிவளைக்கின்றனர். நாள்தோறும் அவ்வாறான காட்சிகளை காட்டி அரசாங்கம் பதுக்கல்காரர்களைக் கண்டுபிடிப்பதாக பறைசாற்றுகின்றது.

அத்தியாவசிய பொருட்களின் விலை பற்றிக் கூறுகின்றீர்கள். நாட்டு பச்சை அரிசி 98 ரூபாவிற்கு விற்கப்படுவதாகக் கூறுகின்றீர்கள். பொதுமக்கள் இந்த அரிசியை எங்கு வாங்கலாம்? நாடெங்கிலும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களைப் பாருங்கள். நீங்கள் இவ்வாறாக ஒரு கறுப்புச் சந்தையை உருவாக்குகின் றீர்கள். எத்தனை பேருக்கு இவ்வறான வசதி கிடைக்கப் போகின்றது. பதுக்கி வைக்கப்பட்டவற்றை வெளியில் எடுத்துக் கொடுத்து முடிப்பதெ ங்கே?

சில அமைச்சர்கள் இன்று உரையாற்றுகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான சீனி கையிருப்பில் இருப்பதாக கூறினார்கள். நான் அவர்களோடு முரண்பட்டு சவால் விடுக்கின்றேன் வெகுவிரைவில் அந்த சீனியெல்லாம் தீர்ந்துவிடும். நீங்கள் சீனியை இறக்குமதி செய்ய நேரிடும். அப்பொழுது நீங்கள் நினைக்கும் விலைக்கு சீனியை விற்க முடியாது போகும்.

இது மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் எதேச்சதிகார அடக்கு முறையாகவே கையாளப்படுகின்றது.

இவ்வாறான குறுக்கு வழிகள் கைவிடப்பட வேண்டும். நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என்பதுவே எங்களது விருப்பமாகும்.

இறுதியாக சர்வதேச நாணய நிதியத்திடம் தஞ்சமடையத்தான் வேண்டும். உங்களது நாணய (நிதிக்) கொள்கை மாற வேண்டும். பெருமளவில் நாணயத் தாள்களை அச்சடிப்பதை நிறுத்த வேண்டும். அதனால் பண வீக்கம் அதிகரித்து நாடு மேலும் சிக்கலுக்குள்ளாகிவிடும். வேறு வழியில்லை சர்வதேச நாணய நிதியத்தை நாடிச் செல்லுங்கள். இப்போதைக்கு அதுவோன்றே தீர்வாகும். எதேச்சதிகார அடக்கு முறையைக் கைவிடுங்கள் என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply